ரஜினியை அரசியலில் களமிறக்கி, திராவிட அரசியலுக்கு மாற்றாக ஆன்மிக அரசியலை வளர்த்தெடுக்கத் திட்டமிட்டிருந்தது பா.ஜ.க. இதற்காக, அ.தி.மு.க-வை உடைத்து ரஜினியுடன் ஓர் அணியை அணிசேரவைக்கவும் திட்டமிட்டிருந்ததாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஜினி பின்வாங்கியவுடன், திக்குத் தெரியாமல் திணறிப்போயிருக்கிறது பா.ஜ.க வட்டாரம். இனி என்ன செய்யப்போகிறது கமலாலயம்? - பா.ஜ.க-வின் இரண்டாம்கட்ட தலைவர்கள் சிலரிடம் பேசினோம்.
``அ.தி.மு.க கூட்டணியில் தொடர்வதாக இருந்தால், 45 தொகுதிகள் வரை பா.ஜ.க-வுக்கு ஒதுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம். சென்னையில் மயிலாப்பூர், வேளச்சேரி, தி.நகர் தொகுதிகளையும், கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், நாகர்கோவில், பத்மநாபபுரம் தொகுதிகளையும், கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, சிங்காநல்லூர் தொகுதிகளையும் எதிர்பார்க்கிறோம். அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் எங்களுக்குச் சொல்லிக் கொள்ளும்படி ஆட்கள் இல்லாததால் அந்த மாவட்டங்களில் எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. ஆனால், மற்ற மாவட்டங்களில் தலா ஒரு தொகுதி வீதம் பா.ஜ.க-வுக்கு ஒதுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.
Also Read: `தேர்தலுக்குப் பிறகே முதல்வர் வேட்பாளர் முடிவு!’ - பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி
காரைக்குடி தொகுதியில் மீண்டும் களமிறங்க ஹெச்.ராஜா விரும்புகிறார். கோவை தெற்கு தொகுதிக்கு வானதி சீனிவாசனும், கிணத்துகடவு தொகுதிக்கு அண்ணாமலையும் குறிவைத்திருக்கிறார்கள். மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட ஏ.ஆர்.மஹாலட்சுமி விருப்பம் தெரிவித்திருக்கிறார். நவம்பர் 21-ம் தேதி அமித் ஷா சென்னை வந்திருந்தபோது, சீட் பங்கீடு குறித்துச் சுருக்கமாக அ.தி.மு.க-வினரிடம் பேசப்பட்டது. ஆனால், `தொகுதிகளைப் பற்றி இப்போது பேச வேண்டாம்’ என்று அமித் ஷா கூறிவிட்டதால், மேற்கொண்டு எதுவும் பேசவில்லை’’ என்றவர்களிடம், ``ரஜினி அரசியலுக்கு வராத சூழலில், அ.தி.மு.க கூட்டணியுடன் பயணிப்பதைத் தவிர பா.ஜ.க-வுக்கு வேறு ஏதாவது திட்டமிருக்கிறதா?’’ என்று கேட்டோம்.
``அ.தி.மு.க-வை முழுமூச்சாக நம்பி நாங்கள் இல்லை. தனித்துச் செல்லவும் நாங்கள் தயார்தான். நவம்பர் 22-ம் தேதி பா.ஜ.க நிர்வாகிகளிடம் அமித் ஷா கலந்துரையாடியபோது, `இந்த ஊழல் அரசாங்கத்தை இனியும் நாம் தூக்கிச் சுமக்க வேண்டுமா?’ என்று நிர்வாகிகள் சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு, `நேரம் வரும்போது கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும்’ என்று மட்டும் அமித் ஷா கூறினார். ஆக, கூட்டணி குறித்து இப்போது அவசரப்பட வேண்டிய நெருக்கடி பா.ஜ.க-வுக்கு இல்லை. தமிழகத் தலைவர்களில் சிலர், `முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராகக் களமிறக்கி, ரஜினியிடம் ஆதரவு கேட்கவைக்கலாம்.
Also Read: ரஜினி அறிவிப்பு; ஸ்டாலினுடன் போட்டி - அ.தி.மு.க-வை விடுத்து சீமான் தி.மு.க-வை டார்கெட் செய்வது ஏன்?
2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்துச் செல்வதன் மூலமாக பா.ஜ.க-வின் வாக்குவங்கியை தற்போதிருக்கும் மூன்று சதவிகிதத்திலிருந்து ஏழு சதவிகிதமாக அதிகரித்துக்கொள்ள முடியும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில், வலுவான கூட்டணி ஒன்றை அமைக்க இந்த வாக்கு சதவிகிதம் கைகொடுக்கும்’ என்று ஆலோசனை அளித்திருக்கிறார்கள். ஆனால், இங்கிருக்கும் சில தலைவர்களுக்கு இந்தத் திட்டத்தில் உடன்பாடில்லை. அ.தி.மு.க-வுடன் பயணித்தால் மட்டுமே இந்தமுறை சட்டமன்றத்துக்குள் நுழைய முடியும் என்கின்றனர். இந்தக் குழப்ப மேகங்கள் சூழந்திருப்பதால், டெல்லியும் தெளிவான எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தவித்திருக்கிறது” என்றனர்.
அ.தி.மு.க-விடம், `ரஜினியுடன் சென்றுவிடுவோம்’ என்று மிரட்டியே காரியம் சாதித்துக்கொள்ள பா.ஜ.க திட்டமிட்டிருந்தது. இப்போது அந்த ஆயுதம் மழுங்கிவிட்டதால், `முதல்வர் வேட்பாளர் யார் என்பதை டெல்லிதான் முடிவு செய்யும். பா.ஜ.க தலைமையில்தான் கூட்டணி’ என்று அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது கமலாலயம். ஆனால், `எடப்பாடியின் தலைமையை ஏற்றுக்கொண்டு இருந்தால் இருங்கள், இல்லையென்றால் கிளம்புங்கள்’ என்று அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மூலமாக எடப்பாடி பழனிசாமி `செக்’ வைத்துவிட்டதால் `திக்’கென்று நிற்கிறது பா.ஜ.க. ஜனவரி 14-ம் தேதி சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அமித் ஷா சென்னை வரவிருக்கிறாராம். அப்போது, கூட்டணி குறித்து அவரிடம் தெளிவான வழிகாட்டுதலை நேரில் பெற தமிழக பா.ஜ.க தலைவர்கள் ஆயத்தமாகிறார்கள். அதுவரையில் குழப்பம் நீடிக்கும் என்கிறது கமலாலய வட்டாரம்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-prefer-constituencies-in-admk-alliance
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக