தமிழக அரசியல் களத்தில் அவ்வப்போது பல அதிரடியான கருத்துகளைக் கூறி பரபரப்பை ஏற்படுத்துபவர், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி. கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து தடாலடியாக தி.மு.கவுக்கு எதிராகவும் அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராகவும் விமர்சனங்களை முன்வைப்பதினாலேயே, அரசியல் அரங்கில் இவரின் கருத்துகள் தனிக்கவனம் பெறும்.
தி.மு.கவில் ஒரு காலத்தில் பவர் சென்டராக வலம் வந்த அழகிரியை, கடந்த 2014-ம் ஆண்டு, தி.மு.க செயற்குழு, பொதுக்குழு முடிவுக்கு எதிராக செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் அன்பழகன். அதற்குப் பிறகு மிகக் காட்டமாக தி.மு.கவுக்கு எதிராகக் கருத்துகளை தெரிவித்துவந்த அழகிரி, கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, பா.ஜ.கவில் இணையப் போவதாகவும் கலைஞர் தி.மு.க என்கிற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கப்போவதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில் மதுரை பாண்டிகோயில் அருகே தனது ஆதரவாளர்களுடன் நேற்று முந்தினம் (03-01-2021)ஆலோசனை நடத்தினார் அழகிரி. அப்போது, ''ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது'' என அவர் தெரிவித்த கருத்துதான் தற்போது தமிழக அரசியல் களத்தில் ஹாட்டாபிக்.
அழகிரி இப்படிக் கோபமாகக் கருத்துத் தெரிவிக்க என்ன காரணம் எனப் பார்ப்பதற்கு முன்பாக அவர் குறித்த அடிப்படையான சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
அதிரடியான தொடக்கம்!
தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் கிளையைக் கவனித்துக் கொள்வதற்காகவே கருணாநிதியால் மதுரைக்கு அனுப்பப்பட்டவர் அழகிரி. கட்சியில் இருந்தாலும் நேரடி அரசியல் ஈடுபடாமலேயே சில ஆண்டுகள் இருந்துவந்தார். இந்தநிலையில், 1993-ல் அந்தக் கட்சியில் இருந்து வைகோ வெளியேறியபோது, பல முக்கிய நிர்வாகிகளும் வெளியேறினர். அப்போது தென்மாவட்டத்தில் கட்சியைக் கட்டிக் காப்பாற்றியதால் தி.மு.கவில் அழகிரிக்கென தனி செல்வாக்கு உண்டானது. பிறகு, 2001 காலகட்டத்தில் கட்சியை விட்டு நீக்கப்பட்ட மிசா பாண்டியன் என்பவருடன் தொடர்பில் இருந்தார் என்பதற்காக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் அழகிரி. அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட பத்து தொகுதிகளுக்கும் மேலாக, போட்டி வேட்பாளர்களை நிறுத்தி தி.மு.கவினரைத் தோற்கடித்தார் அழகிரி. தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் வந்தது. இங்கிருந்துதான் அழகிரியின் கிராப் ஏறியது.
அப்போது, நேரடியாக மக்களே வாக்களித்து மேயரைத் தேர்வு செய்யும் முறை. அதன்படி, தி.மு.கவைச் சேர்ந்த செ.ராமச்சந்திரன் மதுரை மாநகர மேயராக வெற்றிபெற்று விட்டார். ஆனால், துணை மேயர், கவுன்சிலர்கள் மறைமுகமாக வாக்களித்துத் தேர்வு செய்ய வேண்டும். அப்போது, தி.மு.கவினரை விட, அ.தி.மு.கவினரே அதிகமாக கவுன்சிலர்களாக வெற்றி பெற்றிருந்தனர். இந்தநிலையில், அ.தி.மு.க கவுன்சிலர்கள் சிலர் ஆதரவுடன், துணைமேயராக தி.மு.கவின் சின்னச்சாமி வெற்றிபெற்றார். இந்த வெற்றிக்கு அழகிரியின் காய்நகர்த்தல்களே காரணம் எனப் பார்க்கப்பட்டது. அதன்பிறகுதான் அழகிரியின் செல்வாக்கு கட்சியில் அதிகரித்தது. தொடர்ந்து, 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி, 2006 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி என வெற்றி நடை போட்டது தி.மு.க. இந்த வெற்றிகளிலும், தென் மாவட்டங்களில் அழகிரியின் பங்கு இருப்பதாகச் சொல்லப்பட்டது.
தேடி வந்த பதவிகள்!
2009 நாடாளுமன்றத் தேர்தலில், ஈழப் பிரச்னை காரணமாக தி.மு.க காங்கிரஸ் கூட்டணியின் மீது மிகப்பெரிய அதிருப்தி இருந்தபோதிலும், தமிழகத்தில் 27 இடங்களில் வெற்றிபெற்றது அந்தக் கூட்டணி. அதில் தென்மாவட்டத்தில் உள்ள மொத்தமுள்ள பத்து தொகுதிகளில், தென்காசி தவிர ஒன்பது தொகுதிகள் வெற்றிபெற அழகிரியே காரணகர்த்தாவாகப் பார்க்கப்பட்டார். அப்போது எம்.பிக்களாக வெற்றி பெற்றவர்களில் அழகிரியும் ஒருவர். தொடர்ந்து அவர் மத்திய அமைச்சராகவும் ஆனார். ஆனாலும் அழகிரியின் இமேஜை அந்தக் கட்சியில் உச்சத்துக்கு கொண்டு சென்றது திருமங்கலம் இடைத் தேர்தலில்தான். தி.மு.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை, சொன்னதைப் போலவே நாற்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்ததற்குப் பரிசாக, தி.மு.கவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் ஆக்கப்பட்டார் அழகிரி. தொடர்ந்து தென்மாவட்டங்களில் நான்கு தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் தி.மு.க வெற்றிபெற, தி.மு.கவின் அதிகார மையமாகவே மாறினார் அழகிரி.
தேர்தலில் படுதோல்வி!
தொடர்ந்து 2011-ல் நடந்த சட்டமன்றத் தேர்தல், தென் மண்டலத்தில் உள்ள 58 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் அழகிரி. ''தென் மாவட்டங்களில் 45 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும்'' என வாக்குச் சாவடிக்கு வெளியே வாக்குக் கொடுத்தார் அழகிரி. ஆனால், 12 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. அதிலும், ஐ.பெரியசாமி, சுப.தங்கவேலன், பெரியகருப்பன் போன்றவர்கள் தங்கள் சொந்த செல்வாக்கின் காரணமாகவே வெற்றிபெற்றதாகச் சொல்லப்பட்டது.
அதைவிட, அழகிரியின் கோட்டை எனக் கொண்டாடப்பட்ட, மதுரை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட தி.மு.க வெற்றிபெற முடியவில்லை. அதிலும் மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நாற்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க்வை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் வெற்றிபெற்றனர். தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் மதுரையில் தி.மு.கவுக்கு மிகப்பெரிய அடி. அழகிரியின் சொந்த வார்டிலேயே தி.மு.க நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அழகிரி மீதும் அவரது ஆதரவாளர்களின் மீதும் மக்களுக்கு இருந்த அதிருப்தியே தேர்தல் முடிவுகளாக வெளிப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அழகிரியின் தீவிர அரசியல் பிரவேசம் ஏறக்குறைய முடிவுக்கு வந்த காலமும் இதுதான்.
Also Read: `அழகிரி தமிழகத்தின் ஒவைசியா... பின்னணியில் பா.ஜ.க?’ - தனிக்கட்சி தகவலால் தகிக்கும் மதுரை
பா.ஜ.க ஆதரவு & கட்சியில் இருந்து நீக்கம்!
தொடர்ந்து, அவர் மத்திய அமைச்சராக இருந்துவந்தாலும் அவர் அமைச்சராக இருக்கிறாரா, இல்லையா என்கிற அளவிலேயே செயல்பட்டு வந்தார். தொடர்ந்து, கட்சிக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். தொடர்ந்து, அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் பா.ஜ.க கூட்டணியை ஆதரிக்க, கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் அழகிரி. தொடர்ந்து, ''2016 சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க தோற்கும்'' என பேட்டி கொடுத்தார். ஆனாலும், மறைந்த க.அன்பழகன், துரைமுருகன் ஆகியோர் மூலமாக கட்சியில் இணைய அழகிரி முயன்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு தன் ஆதரவாளர்களைச் சந்தித்து அடிக்கடி கூட்டம் நடத்தி வந்தார், அப்போது,'' தி.மு.கவில் தன்னைச் சேர்த்துக் கொண்டால், ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார்'' என்று அறிவித்திருந்தார். ஆனால், தி..மு.க தலைமையில் இருந்து கிரீன் சிக்னல் வராமல் இருக்கவே, சென்னையில் பேரணி ஒன்றை நடத்தினார். ஆனால் அது சொல்லிக்கொள்ளும்படி இல்லை. தொடர்ந்து, 2021 தேர்தலை முன்னிட்டு அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளைப் பேசிவந்தவர். தற்போது, ''ஸ்டாலின் முதல்வராகவே முடியாது'' எனப் பேசியிருக்கிறார்.
அழகிரி தீவிர அரசியலில் இருந்த காலகட்டத்தில்கூட, கட்சி நிர்வாகிகளும் அவரது ஆதரவாளர்களும்தான் அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். தவிர மக்கள் மத்தியில் அவருக்கென்று பெரிய செல்வாக்கு எப்போதும் இருந்தது இல்லை. அழகிரியும், ''இந்தக் கட்சிக்காக நான் இவ்வளவு உழைத்தேனே, நீங்கள் பதவிக்கு வர நான் உறுதுணையாக இருந்தேனே, எனக்கு ஏன் துரோகம் செய்தீர்கள்'' என தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினைநோக்கித்தான் நியாயம் கேட்கிறாரே தவிர மக்களிடம் தனக்கான நியாயத்தை அவரும் கேட்கவில்லை, கேட்கிற அளவுக்கு அவர் கடந்த காலங்களில் நடந்துகொள்ளவும் இல்லை. அதனால், கட்சி ஆரம்பித்தால் எந்தளவுக்கு மக்களிடம் நமக்கான செல்வாக்கு இருக்கும் என்பது மற்றவர்களைவிட அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் ''நான் என்ன முடிவு எடுத்தாலும் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்'' என்றே தன் ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார் அழகிரி.
மு.க.அழகிரியின் இந்த நடவடிக்கைகளுக்கு தி.மு.க தலைமையின் ரியாக்ஷன் என்ன, தொடர்ந்து அழகிரி என்ன செய்யப்போகிறார் என்பது போகப்போகத் தெரிந்துவிடும்!
source https://www.vikatan.com/government-and-politics/politics/political-history-of-mk-azhagiri-and-his-plan-for-2021-election
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக