கேரள மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று ஒருபக்கம் பரவி வரும் நிலையில், இப்போது பறவைக் காய்ச்சல் பரவி மிரட்டுகிறது. ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பகுதியிலும், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள நிண்டூர் பகுதியிலும் பறவைக் காய்ச்சல் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் வாத்துக்கள் கூட்டம் கூட்டமாக இறந்து விழுந்தன. அதைத் தொடர்ந்து இறந்த வாத்துக்களின் சாம்பிள்கள் போபாலில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி சோதனை நடத்தப்பட்டது. எட்டு சாம்பிள்களில் ஐந்து சாம்பிள்களில் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கோட்டயத்தில் ஒருவருக்கு சொந்தமான எட்டாயிரம் வாத்துக்களுக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த பறவைகள் அனைத்தையும் அழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கால்நடைத்துறை அறிவித்துள்ளது.
வாத்துக்களுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்றாலும் இதுவரை மனிதர்களுக்குத் தொற்றவில்லை என்று கூறப்படுகிறது. பறவைக் காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பிற பகுதிகளில் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்ட ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுளன. பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து பறவைகளையும் அழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 48,000 பறவைகளை அழிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
கேரளத்தில் கடந்த ஆண்டும் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டது. கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்களில் கடந்த ஆண்டு பறவைக் காய்ச்சல் பரவியபோது கோழிகள் அழிக்கப்பட்டன. அதன் மூலம்தான் பறவை காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதுபோன்று இந்த ஆண்டும் பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்த வாத்து மற்றும் கோழிகளை அழிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரளத்தில் வேகமாக பரவிவரும் பறவைக் காய்ச்சலால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
source https://www.vikatan.com/news/india/kerala-health-department-alerted-after-bird-flu-detection
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக