திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ஒருவரின் பெயரைக் கொண்ட 19 வயது இளம் பெண். இவர் கடந்த 2-ம் தேதி ஆவேசத்துடன் சோழவரம் காவல் நிலையத்துக்கு வந்தார். அவர் அணிந்திருந்த உடையில் ரத்தக்கறைகள் இருந்தன. அதைப்பார்த்த போலீஸார் அந்தப் பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது அவரால் பேச முடியவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்த அந்த இளம்பெண், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு,` ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கிற குதிரை பண்ணைக்குள் அஜித் என்கிட்ட தப்பா நடக்க முயன்றான். அதனால அவனை கொன்னுட்டேன்' என்று கூறினார். அதைக்கேட்ட போலீஸார் குதிரை பண்ணைக்கு சென்றனர். அங்கு கத்திக்குத்து காயங்களுடன் அஜித் என்பவர் இறந்து கிடந்தார்.
சடலத்தை மீட்ட போலீஸார், அந்தப் பெண் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது அஜித் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவந்தது. உடனடியாக இந்தத் தகவல் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் இளம்பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது இந்தக் கொலை, தற்காப்புக்காக நடந்தது என்று தெரியவந்ததால் இளம்பெண்ணை போலீஸார் விடுதலை செய்தனர். அதுதொடர்பான தகவல்களையும் நீதிமன்றத்துக்கு போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.
குதிரை பண்ணைக்குள் என்ன நடந்தது என்று சோழவரம் போலீஸாரிடம் விசாரித்தோம். ``இளம்பெண், பிளஸ் டூ வரை படித்திருக்கிறார். அவரின் அம்மாவும் அப்பாவும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். அந்தப் பெண்ணின் அம்மாவும் அப்பாவும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டனர். அதனால் அந்த இளம்பெண் ஆதரவின்றி தவித்திருக்கிறார். பள்ளி படிக்கும் வரை அப்பாவுடன் அவர் வசித்து வந்திருக்கிறார். அதன்பிறகு அம்மாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் அம்மா வழி உறவினரான அஜித் என்பவர் இளம்பெண்ணிடம் அநாகரீகமாக நடப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், அஜித்தை அடித்திருக்கிறார். இந்தச் சம்பவம் வெளியில் தெரிந்தால் அவமானம் எனகருதிய அந்த இளம்பெண், யாரிடமும் சொல்லாமல் மறைத்திருக்கிறார்
ஆனால் அஜித் மூலமே இந்தத் தகவல் இளம்பெண்ணின் அம்மாவுக்கு தெரியவந்திருக்கிறது. உடனடியாக தன் மகளிடம் என்ன நடந்தது என்று விசாரித்தபோதுதான் அஜித்தின் சுயரூபம் தெரியவந்திருக்கிறது. அதனால் குடும்பத்தினர் அஜித்தைக் கண்டித்திருக்கின்றனர். அஜித்துக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அஜித்தின் நடவடிக்கையால் தாய் வீட்டுக்கு அவரின் மனைவி சென்றுவிட்டார். அதனால் தனியாக வாழ்ந்த அஜித், இளம்பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதற்கு இளம்பெண், சம்மதிக்கவில்லை.
இந்தச் சமயத்தில்தான் கடந்த 2-ம் தேதி அல்லிநகரம் பகுதியில் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள குதிரை பண்ணைக்கு இயற்கை உபாதைக்காக இளம்பெண், தன்னுடைய உறவுக்கார சிறுவர்களுடன் சென்றிருக்கிறார். அவர்கள் ஒரு இடத்தில் காத்திருக்க, இளம்பெண் அந்தப்பகுதியில் உள்ள முட்புதர்களுக்குள் சென்றிருக்கிறார். இந்தச் சமயத்தில் இளம்பெண்ணுக்கு உதவியாக வந்த சிறுவர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். அதனால் தனியாக இளம்பெண் குதிரை பண்ணை பகுதியிலிருந்து வீட்டுக்கு நடந்து வந்திருக்கிறார். அப்போது மதுபாட்டிலுடன் அஜித் அங்கு வந்திருக்கிறார். அவர், இளம்பெண்ணை அழைத்து நான் சொல்படி நடக்க வேண்டும். இல்லைஎன்றால் உன்னைக் கொலை செய்து விடுவேன் என்று கத்தியைக் காட்டி மிரட்டியிருக்கிறார்.
Also Read: சென்னை: `ஆசிட் வீசுவேன்; கொலை மிரட்டல்' - காதலன் மீது சின்னத்திரை நடிகை புகார்
அதனால் இளம்பெண்ணும் அஜித் சொல்படி கேட்டு அமைதியாக இருந்திருக்கிறார். இந்தச் சமயத்தில் மதுவை குடித்துவிட்டு இளம்பெண்ணிடம் அஜித் தவறாக நடக்க முயன்றிருக்கிறார். அதை இளம்பெண் தனியாளாக போராடியிருக்கிறார். கத்தியால் இளம்பெண்ணை அஜித் குத்த முயன்றார். அப்போது அஜித்தை இளம்பெண் தள்ளி விட்டிருக்கிறார்.அதனால் நிலைதடுமாறிய அஜித் கீழே விழுந்தார். அப்போது அஜித்தின் அருகில் கிடந்த கத்தியை எடுத்த இளம்பெண், ஆத்திரம் தீர அவரை சரமாரியாகக் குத்தினார். அதில் ரத்த வெள்ளத்தில் அஜித் உயிரிழந்தார். அதன்பிறகு கத்தியை அங்கேயே வீசிய இளம்பெண், காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். விசாரணைக்குப்பிறகு தற்காப்புக்காக இளம்பெண் அஜித்தைக் கொலை செய்தது தெரியவந்தது. அதனால் அவரை விடுதலை செய்ய எஸ்.பி அரவிந்தன் உத்தரவிட்டார். இளம்பெண்ணுக்கு தேவையான கவுன்சலிங் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கிறோம். காவல் துறையில் இதுபோன்ற வழக்குகள் அரிதாக நடக்கும்" என்றனர்.
தன்னை காப்பாற்ற பாதுகாப்புக்காகவே அஜித்தை இளம் பெண் கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தனின் இந்த சட்ட நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
source https://www.vikatan.com/news/crime/police-released-19-year-old-girl-charge-over-murder-case-in-thiruvallur
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக