ருத்திராட்சம் சிவபெருமானின் அம்சம் என்று போற்றப்படுவது. சிவனடியார்களின் அடையாளமாகத் திகழ்வது. புனிதத்தின் அடையாளமாக விளங்குவது. இதை அணிந்துகொண்டால் நம்பிக்கையும் ஆன்மிக பலமும் அதிகரிப்பதாக நம் சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. ருத்திராட்சத்தின் மகிமைகளும் அதை அணியும் முறைகளையும் நம் முன்னோர்கள் அறிந்து சொல்லியிருக்கிறார்கள். பெரும்பாலும் இமயமலைச்சாரலில் காணப்படும் ருத்திராட்ச மரம் தமிழகத்தில் திருவலஞ்சுழி, அச்சுதமங்கலம், தாராசுரம் ஆகிய தலங்களில் தல விருட்சமாகவும் விளங்குகிறது.
ருத்திராட்சம் உருவான கதை
ருத்திரன் என்றால் சிவபெருமான், அட்சம் என்றால் கண். சிவபெருமானின் முக்கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் சொட்டுகளே 'ருத்திராட்சம்'. பகவானின் வலக்கண்ணிலிருந்து 12 மஞ்சள் நிற ருத்திராட்சங்களும், இடக்கண்ணிலிருந்து 16 வெண்ணிற ருத்திராட்சங்களும், நெற்றிக் கண்ணிலிருந்து 10 கருமை நிற ருத்திராட்சங்களும் தோன்றின என்கின்றன புராணங்கள்.
தாரகாஷன், வித்யுன்மாலி, கமராஷன் என்னும் மூன்று அசுரர்கள் சிவபெருமானை வேண்டித் தவம் செய்தனர். தவத்தில் மனம்குளிர்ந்த இறைவன் தங்கம், வெள்ளி மற்றும் இரும்பால் ஆன மூன்று கோபுரங்களைத் தந்தருளினார். இந்தக் கோபுரங்களின் மூலமாகப் பறந்து செல்லும் சக்தியும், பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஆற்றலும் அசுரர்களுக்குக் கிட்டியது.
இதனால் அசுரர் மூவருக்கும் ஆணவம் கொண்டு மூவுலகத்தையும் வென்றனர். தேவர்களைத் துன்பப்படுத்தினர். அசுரர்களின் கொடுமைகளைப் பொறுக்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமானும் அசுரர்களை அழித்துக் காப்பாற்றுவதாக உறுதி அளித்தார். சிவபெருமான் அசுரர் மூவரையும் தன் நெற்றிக்கண்ணால் அழித்தார். அந்நேரத்தில் அவர் மனம் இளகி அவரது கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது. அந்தக் கண்ணீரே 'ருத்திராட்சம்' ஆனது என்கிறது புராணம்.
தீயவைத் தவிர்க்கும் ருத்திராட்சம்
ருத்திராட்சம் அணிவது மனதுக்கு அமைதியை அளிக்கும். என்றாலும் இதற்கு மற்றுமொரு பலனும் உண்டு. அது தீயவை நம்மை அண்டாமல் காப்பது. சந்நியாசிகளும் ரிஷிகளும் காடு மேடுகளில் தனித்துச் செல்லும்போது அவர்களை ஆபத்துகள் நெருங்காமல் பாதுகாப்பது அவர்கல் அணிந்திருக்கும் ருத்திராட்சமே என்கிறார்கள். இல்லறத்தில் இருப்பவர்களும் இத்தகைய ருத்திராட்சத்தை அணிவதன் மூலம் தங்களுக்கு எதிரான தீய செயல்பாடுகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளலாம் என்பது நம்பிக்கை. தொடர்ந்து ருத்திராட்சம் அணிவதன் மூலம் நல்லதிர்வுகள் அதிகரிக்கும் என்கிறார்கள் அடியார்கள்.
ருத்திராட்சம் அணியும் முறை
ருத்திராட்சத்தை ஒருவார காலம் பசு நெய் அல்லது நல்லெண்ணெயில் ஊறவைக்கவேண்டும். பின்னர் நீரால் சுத்தப்படுத்தி, ஈரம் காய்ந்த பின்னர் திருநீறில் ஒருநாள் முழுவதும் வைத்திருக்கவேண்டும். அடுத்ததாக, பச்சைப் பசும்பாலில் கழுவவேண்டும், பின்பு மீண்டும் நீரால் தூய்மை படுத்தவேண்டும். தூய்மையான ருத்திராட்சத்தை பூஜை செய்து, மந்திரம் ஜபித்து அணியவேண்டும்.
நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும்போது ருத்திராட்ச மாலைகள் கழுத்தில் இருக்கக் கூடாது என்கிறார்கள் பெரியவர்கள். மேற்சொன்ன விஷயங்களுக்குப் பிறகு, உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்திராட்ச மாலையை மீண்டும் அணியலாம். பொதுவாக தெய்வ வழிபாட்டின்போது அணிந்துகொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றிப் பூஜையறையில் பாதுகாப்பது சிறந்த நடைமுறை. ருத்திராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின்போது அணிவது சிறப்பு.
ருத்திராட்சம் அணிவதால் உண்டாகும் நன்மைகள்:
புண்ணிய நதிகளில் நீராடிய நன்மை கிட்டும். தீய சக்திகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும். மோட்சத்தை அருளும். சக்தி வழங்கும். லட்சுமி கடாட்சம் கிட்டும். புத்திர பாக்கியம் உண்டாகும். ருத்திராட்சத்தைப் பார்ப்பது மகா புண்ணியம். தொட்டால் கோடி புண்ணியம் என்பார்கள். அணிந்துகொண்டால் பல கோடி புண்ணியம். நம் உடல் பிணிகளைப் போக்கும். 108 ருத்திராட்சம் கொண்ட மாலையை அணிந்தால், 'அசுவமேத யாகம்' செய்த புண்ணியம் உண்டாகும் என்கிறது சாஸ்திர நூல். பாவங்களிலிருந்து விடுதலை கிட்டும். ஒன்று முதல் பதினான்கு முகங்கள் கொண்ட ருத்திராட்சங்கள் உண்டு. நாம் அணியும் ருத்திராட்சங்களின் முகங்களைப் பொறுத்து நமக்குக் கிடைக்கும் நன்மைகளும் மாறுபடும்.
மனக்கவலைகளைப் போக்கும் ருத்திராட்ச அபிஷேகம்
சிவபெருமானுக்கு அபிஷேகிக்க உகந்த பொருள்களில் ஒன்றாகக் கருதப்படுவது ருத்திராட்சம். அதனால் அபிஷேகங்களில் உயர்ந்தது ருத்ராட்ச அபிஷேகம் என்கின்றன ஆகமங்கள். 108 முறை மகா ருத்ர அபிஷேகம் செய்யும் பலனையும், பல கோடி முறை செய்யும் ருத்ர ஜப பலனையும் ஒருங்கே அளிக்க வல்லது ருத்திராட்ச அபிஷேகம். ஈசனுக்கு ருத்திராட்ச அபிஷேகம் செய்தால் மன நிம்மதி கிடைக்கும், வேண்டிய அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள். அதேநேரம், ருத்ராட்ச அபிஷேகத்தை வீடுகளில் செய்யக் கூடாது என்பதும் உண்மை. அற்புதமான இந்த அபிஷேகத்தை ஆலயங்களுக்குச் சென்றுதான் செய்யவேண்டும் என்று அறிவுறுத்துகின்றன ஆகமங்கள்.
இத்தகைய சிறப்புகளை உடைய ருத்திராட்ச அபிஷேகத்தை வரும் 10.1.21 ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு வேலூர் மாவட்டம், கத்தாரிகுப்பம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நடத்த உள்ளது சக்திவிகடன். வாசகர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனைகளைச் சமர்ப்பித்து உரிய சங்கல்பத்துடன் ஈசனுக்கு மகா ருத்திராட்ச அபிஷேக ஆராதனை நிகழவுள்ளது. கயிலாய வாத்தியக் கச்சேரியும், திருமுறைகள் முற்றோதலும் நடைபெறும். முன்பதிவு மூலம் மகா ருத்ராட்ச அபிஷேக வைபவத்துக்குச் சங்கல்பிக்கும் வாசகர்களுக்குச் சிவபிரசாதமாக, அபிஷேகித்து பூஜிக்கப்பட்ட ருத்திராட்சம் அனுப்பிவைக்கப்படும். இது உங்கள் எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றும் என்று நிச்சயமாய் நம்பலாம்.
நீங்களும் இந்த ஹோமத்தில் சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
மேலும் தகவல்களுக்கு: 7397430999 / 89390 30246
source https://www.vikatan.com/spiritual/gods/the-glory-and-benefits-of-rudhrakscha-abishekam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக