2021 சட்டப்பேரவை தேர்தலையொட்டி தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் ‘அ.தி.மு.கவை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுக்க மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். அதன்படி நேற்று (04.01.2020) கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில், தெற்கு ஒன்றியம் பாதிரிக்குப்பம் ஊராட்சி பகுதியில் ‘மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்ட இடமே முதலில் தொண்டர்களை முகம் சுழிக்க வைத்தது. தரையில் கால் வைத்தால் அரை அடிக்கு உள்ளே செல்லுமளவுக்கு சேறும், சகதியும் இருந்த இடத்தில் சிவப்பு நிற தரை விரிப்பு போடப்பட்டிருந்தது. மாலை 4 மணிக்கு ஸ்டாலின் வருவதாக கூறப்பட்டிருந்ததால் 3 மணிக்கே அந்த இடத்தில் பெண்கள் தரையில் அமர வைக்கப்பட்டார்கள்.
சிறிது நேரத்திலேயே தரைவிரிப்பைத் தாண்டி சேறும், நீரும் மேலே வந்துவிட்டதால் மக்கள் நெளியத் துவங்கினர். தரை விரிப்பு முழுவதும் ஈரமாகிவிட்டதால் இடம் மாறி மாறி உட்கார்ந்தும் பயனில்லாமல் போனது. `தலைவர் இதோ வருகிறார்.. அதோ வருகிறார்' என்று நிர்வாகிகள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்ததால் வேறு வழியில்லாமல் அந்த சேற்றிலேயே அமர்ந்திருந்தனர் மக்கள்.
வயதான மற்றும் நடுத்தர வயது பெண்கள், குழந்தைகள் என அங்கு அமர வைக்கப்பட்டிருந்த அனைவரின் கால்களும், உடைகளும் சேற்று நீரில் முழுக்க ஈரமானது. ஸ்டாலினுக்கான அமைக்கப்பட்டிருந்த மேடையிலும் இதே நிலைதான். மாலை 5.30 மணிக்கு ஸ்டாலின் வருவதற்கு முன்பாக அந்த இடத்தில் மட்டும் ஏற்கெனவே தயாராக வைத்திருந்த மற்றுமொரு விரிப்பை விரித்தார்கள்.
”இந்த சேத்துல எவ்ளோ நேரம்யா உக்காந்துட்டு கெடக்கறது? இந்த ஊருல வேற இடமே இல்லையா? இந்த சேத்துல அப்படியே நடவு நட்ரலாம்யா. புடவைலாம் நனைஞ்சு போச்சுய்யா..” என்று புலம்ப ஆரம்பித்தனர் வயதான பெண்கள். இடம் தேர்வு செய்வதில்தான் பிரச்னை என்றால் ஸ்டாலினிடம் குறைகளை தெரிவிக்கும் ஆள்களை தேர்வு செய்வதிலும் கோட்டை விட்டிருந்தனர் நிர்வாகிகள்.
ஸ்டாலினிடம் குறைகூற வந்திருந்த அனைவருமே தி.மு.க தொண்டர்கள் என்று வெளிப்படையாகவே தெரியும் அளவுக்கு 'முத்தமிழ் அறிஞரின் புதல்வனே' என்று கவிபாடினார்கள். அதிலும் ரமேஷ் என்ற இளைஞர் தன்னை தி.மு.க இளைஞரணி என்றே அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியதுதான் ஹைலைட். உடைகள் நனைந்து நெளிந்து கொண்டிருந்த மக்கள் ஸ்டாலின் பேசத் துவங்கியதுமே கலைந்துவிட்டதால் கருகருத்துப் போனது ஸ்டாலினின் முகம்.
Also Read: கோவை : மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின்! #PhotoAlbum
source https://www.vikatan.com/government-and-politics/politics/in-dmk-village-sabha-meeting-arrangements-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக