மேற்கு வங்க அரசியலில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான செளரவ் கங்குலியின் பெயர் கடந்த சில மாதங்களாக ஒலித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில பா.ஜ.க தலைவர்கள் பலரும் கங்குலியை பா.ஜ.க-வில் இணைக்க முயற்சி செய்து வருவதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (ஜன. 2) திடீரென கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியானது. இதையடுத்து உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தால் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் `கங்குலி விரைவில் நலம் பெற வேண்டும்' என சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தொடர்ந்து கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நடைபெற்றது. அதன் பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக மருத்துவமனையிலிருந்து தகவல் வெளியிடப்பட்டது.
கங்குலியை தொலைப்பேசி மூலம் அழைத்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தன்கார் உள்ளிட்ட பலரும் கங்குலியை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் அசோக் பட்டாச்சார்யாவும் கங்குலியை மருத்துவமனையில் சந்தித்தார். கங்குலியின் நெருங்கிய குடும்ப நண்பரான பட்டாச்சார்யா மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு வெளிப்படுத்தியிருக்கும் கருத்துகள் மேற்கு வங்க அரசியலில் பரபரப்பையும் பல்வேறு விவாதங்களையும் கிளப்பியிருக்கிறது.
Also Read: மேற்கு வங்கம்: `மிஷன் 200'... 11 பேர்கொண்ட குழு - மம்தாவை வீழ்த்துமா பா.ஜ.க?
மேலும், ``கடந்த வாரம் கங்குலியைச் சந்தித்தபோது கூட `அரசியல் வேண்டாம்' என்று கூறினேன். என் வார்த்தைகளுக்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அரசியலுக்கு வரச் சொல்லி யாரும் அவரை நிர்பந்திக்கக் கூடாது'' என்றும் பட்டாச்சார்யா கூறியிருக்கிறார்.
இதையடுத்து சமூக வலைதளங்களில், ``பட்டாச்சார்யா சொல்வதில் உண்மை இருப்பது போலவே தோன்றுகிறது. அசோக் பட்டாச்சார்யா அரசியல்வாதி மட்டுமல்ல கங்குலியின் நெருங்கிய குடும்ப நண்பர். எனவே, அவர் சொல்வது போல `அரசியலுக்கு வர வேண்டும்' என கங்குலியை நிர்பந்தம் செய்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகத்தான் அவர் இன்று மருத்துவமனையில் இருக்கிறார். தயவு செய்து அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள்'' என்று கங்குலி ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் பட்டாச்சார்யாவின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ், ``சிலர் மனநிலை சரியில்லாத காரணத்தால் எல்லாவற்றையும் அரசியலாகப் பார்க்கிறார்கள். கங்குலியின் லட்சக்கணக்கான ரசிகர்களைப் போலவே, நாங்களும் அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுமென்றே விரும்புகிறோம்'' என்று கூறியிருக்கிறார்.
திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான சோபந்தேப் சாட்டர்ஜி (Sobhandeb Chatterjee), ``நாங்கள் கங்குலியை எங்கள் கட்சிக்குள் கொண்டு வர எந்த முயற்சியும் செய்யவில்லை. அவர் கிரிக்கெட்டின் அடையாளமாக இருப்பதே எங்களுக்கு பெருமை'' என்று தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அரசியல் நோக்கர்கள் சிலர், ``கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாகத்தான் மேற்கு வங்க ஆளுநரைச் சந்தித்திருக்கிறார். அப்போதே பா.ஜ.க-வில் அவரை இணைக்கத்தான் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகச் செய்திகள் வந்தன. தமிழகத்தில், `ரஜினிக்கு பா.ஜ.க சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதால்தான் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார்' என்ற செய்திகள் வந்ததைப் பார்க்க முடிந்தது. தற்போது அதேபோல கங்குலிக்கும் பா.ஜ.க சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவே தெரிகிறது. தமிழகத்தைப் போலவே மேற்கு வங்கத்திலும் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் கங்குலியைக் கட்சியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது பா.ஜ.க.
Also Read: ஆளுநருடன் சந்திப்பு; மகளிரணி விழாவில் மனைவி! - மே.வங்க பா.ஜ.க முதல்வர் வேட்பாளராகிறாரா கங்குலி?
கடந்த வாரம்கூட செய்தியாளர்கள் கங்குலியிடம், `பா.ஜ.க-வில் இணையப்போகிறீர்களா?' என்ற கேள்வியை முன் வைத்த போது, அவர் பதில் சொல்லாமல் வேகமாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றார். ஆர்வம் இருந்தால் `ஆமாம்' என்று சொல்லியிருக்கலாம், இல்லையென்றால் `சேரப் போவதில்லை' என்று சொல்லியிருக்கலாம். இல்லை கூலாக `நோ கமென்ட்ஸ்' என்று சொல்லி அந்தக் கேள்வியைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், பதற்றத்துடன் வேகமாக நகர்ந்து சென்றார் கங்குலி. இதை வைத்துப் பார்த்தால் அவருக்கு அழுத்தம் தரப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. தற்போது அசோக் பட்டாச்சார்யா கூறியிருக்கும் கருத்தும் கங்குலிக்கு நிச்சயம் அழுத்தம் தரப்பட்டிருக்கும் என்பதையே உணர்த்துகிறது'' என்கிறார்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/election/is-sourav-ganguly-is-under-pressure-to-join-politics
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக