கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீலகிரி மாவட்டத்திற்கு கேரளா மற்றும் கேரள எல்லையை ஒட்டியுள்ள கர்நாடகா மாநில பகுதிகளிலிருந்து கோழிகள், மற்றும் அதன் தொடர்புடைய பொருள்களை வாகனங்களில் ஏற்றிவர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கக்கனல்லா, நம்பியார் குன்னு, சோலாடி, நாடுகாணி உள்ளிட்ட எட்டு சோதனைச் சாவடிகளில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. கால்நடை உதவி மருத்துவர் தலைமையில், கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட குழு காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்துறையுடன் இணைந்து பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ``பறவை காய்ச்சல் நோய் தாக்கிய நாடுகளில் இருந்து இங்குவரும் வனப்பறவைகள் மூலம் இந்நோய் நமது நாட்டில் பரவ வாய்ப்பு உள்ளது. கோழி, வாத்து, வான்கோழி மற்றும் வனப்பறவைகளைத் தாக்கும். மனிதர்களையும் தாக்கவல்லது.

வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோழி, வாத்து, வான்கோழி போன்ற பல்வேறு பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்கக்கூடாது. வெளியாட்கள், வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள் நுழையவிடக்கூடாது. இதர பண்ணை உபகரணங்கள் பகிர்ந்து கொள்ளல் கூடாது. கோழி பண்ணையில் அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நன்கு சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டைகளை உண்பதால் இந்நோய் பரவாது.
பறவைக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்கை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை. சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மட்டுமே நோய் வராமல் தடுக்க முடியும்" என்றார்.

கால்நடை மருத்துவர் பாலாஜி நம்மிடம் பேசுகையில், "கேரளாவில் பாதிக்கப்பட்ட பறவைகளுக்கு சோதனை செய்ததில் H5N8 என்ற வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட பறவைகளின் எச்சம் போன்றவற்றில் இருந்து அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. 15 டிகிரி செல்சியசுக்கும் குறைவான வெப்பநிலை என்றால் பறவைகளின் எச்சத்தில் 10 நாள்களை வரை இந்த வைரஸ் இருக்கும். மக்கள் பயப்பட தேவை இல்லை.உரிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/bird-flu-safety-measures-in-nilgiris-district
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக