சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த இடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன் (எ) முருகேசன். விவசாயியான முருகேசன் இடையம்பட்டியில் மளிகைக் கடையும் நடத்திவந்துள்ளார். கொரோனா தொற்று தீவிரமாக இருப்பதால், சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால், அருகிலுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு நண்பர்களுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை முருகேசன் மது அருந்தச் சென்றிருக்கிறார். மது அருந்திவிட்டு நேற்று மாலை வீடு திரும்புகையில், இடையப்பட்டி சோதனைச்சாவடியில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் முருகேசனையும் அவருடைய நண்பர்களையும் நிறுத்தி விசாரித்துள்ளனர்.
அப்போது மதுபோதையிலிருந்த முருகேசனுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதில் கோபமடைந்த போலீஸார், முருகேசனை லத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். முருகேசனை அடிக்க வேண்டாமென அவருடைய நண்பர் கெஞ்சியபோதிலும், போலீஸார் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளனர்.
போலீஸார் தாக்கியதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே மயங்கி சரிந்துள்ளார். இந்தச் சம்பவம் அனைத்தையும் முருகேசனின் நண்பர்கள் மொபைல்போனில் வீடியோவாக எடுத்திருக்கின்றனர். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலமாக அருலிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று முதலுதவி கொடுத்து, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் முருகேசனுக்கு சிகிச்சை கொடுத்திருக்கின்றனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தத் தகவல் தெரிந்ததும், முருகேசனுடைய உறவினர்கள் சுமார் 200 பேர் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆவேசமாகப் போராட்டம் நடத்தினர். இந்தச் சம்பவத்துக்கு உரிய நடவடிக்கை மற்றும் இழப்பீடு கிடைக்கும் வரை மருத்துவமனையிலிருந்து முருகேசனின் சடலத்தை வாங்கப்போவதில்லை எனக் கூறியுள்ளனர். பிரச்னை பெரிதாகாமல் இருக்க, ஏத்தாப்பூர் காவல் நிலையம் மற்றும் இடையம்பட்டியிலுள்ள முருகேசனின் வீட்டின் முன்பு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு மரணமடைந்து நேற்றுடன் ஒரு வருடம் ஆகிறது. அதேபோல இன்றைக்குக் காவல்துறையினரின் தாக்குதலால் முருகேசன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/crime/salem-farmer-died-in-police-attack-relatives-protest-against-police
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக