கடந்த நவம்பர் மாதம் முதல் புது டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டு, மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
70 நாள்களுக்கு மேலாகத் தொடரும் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்து, கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லி நோக்கி ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் பேரணியாகச் சென்றனர். அந்தப் பேரணியில் சிலர் காவல்துறையின் அனுமதியை மீறி அத்துமீறலில் ஈடுபட்டனர். இதில், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 80-க்கும் மேற்பட்ட காவல்துறை காயமடைந்தனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் டெல்லியின் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலையே காணப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு, காசிபூர் மற்றும் திக்ரி ஆகிய டெல்லியின் எல்லைப் பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல், சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பாப் நட்சத்திரம் ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க், கிரிக்கெட்டர் இர்ஃபான் பதான், நடிகர் சித்தார்த், நடிகை டாப்ஸி உள்ளிட்ட பல பிரபலங்கள் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவு குரல்களைக் கொடுத்து வருகின்றனர்.
Also Read: விவசாயிகள் போராட்டம்: ரிஹானா முதல் சித்தார்த் வரை.. ட்விட்டர் கருத்து மோதல்! - இதுவரை நடந்தது என்ன?
கடந்த மாதம் நடந்த வன்முறைக்குப் பின்னர், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டெரெஸின் (Antonio Guterres) செய்தித் தொடர்பாளர், ``அமைதியான போராட்டங்கள், அகிம்சை ஆகியவற்றை மதிக்க வேண்டியது அவசியம்" என்றார். முன்னதாக டிசம்பரில், அவரது அலுவலகம், மக்களுக்கு அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய உரிமை உண்டு என்றும் அதிகாரிகள் அவ்வாறு போராட அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளது. அதில், ``விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் மத்திய அரசும், போராட்டக்காரர்களும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அமைதியான வழியில் உணர்வுகளை வெளிப்படுத்தும் போராட்டங்கள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைனில் பாதுகாக்கப்பட வேண்டும். அனைவரும் மனித உரிமைகளுக்கு உரிய மரியாதை அளித்து, உரிய தீர்வைக் காண்பது அவசியம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாடாளுமன்றத்தில், விவசாயிகள் போராட்டம் தொடர்பான விவாதத்தின்போது பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்,``விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இதற்குத் தீர்வு காண அரசு தயாராக உள்ளது. தேவையான திருத்தங்களைக் கொண்டு வரவும் அரசு தயாராக உள்ளது’’ என்று தெரிவித்திருந்தார்.
source https://www.vikatan.com/government-and-politics/protest/unhrcs-statement-about-delhi-farmers-protest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக