Ad

ஞாயிறு, 23 மே, 2021

'திராவிட வெறுப்புக் கருத்துகளுடன் பாடப் புத்தகங்கள்... '- தோண்டியெடுக்கும் ஸ்டாலின் அரசு!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் தொலைதூரப் படிப்பை மேற்கொண்டுவரும் மாணவர்களின் பாடப்புத்தகங்களில் சில தவறான கருத்துகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, எம்.ஏ சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து அவதூறான கருத்துகள் அச்சிடப்பட்டுள்ளன.

அமைச்சர் பொன்முடி

“இந்திய கட்சிகள், குறிப்பாக மதங்களுக்கு எதிரான தி.மு.க., பொதுவுடைமைக் கட்சிகள் மக்களை வாக்கு வங்கிகளாக மாற்றி வருகின்றன. அந்தக் கட்சிகள், அந்த மக்களை (முஸ்லிம்களை) தேசியப் பாதையில் கலந்துவிடாமல் தடுக்கின்றன. அந்தக் கட்சிகள், கண்மூடித்தனமாகச் சிறுபான்மையினரை ஆதரிக்கின்றன. முகமதியர் கலவரம் உருவாக்கி, வன்முறை வெடிப்பதைக் கண்டிக்காமல் அவை இருக்கின்றன” என்ற கருத்துகள் அந்தப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த விஷயம் உயர் கல்வி அமைச்சர் பொன்முடியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

இதை செய்தியாளர்களிடம் தெரிவித்த அமைச்சர் பொன்முடி, “இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தரை அழைத்து விசாரித்தால் எந்த பதிலும் இல்லை. இது எதை நோக்கி செல்கிறது என்பது தெரியவில்லை. நானும் ஆசிரியராக இருந்தவன். எந்தக் காலத்திலும் இதுபோன்ற முறைகேடு நடைபெற வாய்ப்பே இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணனிடம் பேசினோம்.

“நான், பாடப்புத்தகத்தின் அந்தப் பகுதிகளை முழுமையாகப் படித்தேன். ‘முஸ்லிம்கள் பாகிஸ்தானைத்தான் தங்களின் சொந்த நாடாக நினைக்கிறார்கள். ஒரு பிரச்னையில் பாகிஸ்தான் சொல்லும் கருத்தை இங்குள்ளவர்கள் ஆதரித்து கலவரத்தில் இறங்குகிறார்கள்’ என்பது மாதிரியெல்லாம் அந்தப் பாடத்தில் இருக்கிறது. மேலும், “முஸ்லிம்களை தி.மு.க-வும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரிக்கின்றன. முஸ்லிம்களை வாக்குவங்கிகளாக அந்தக் கட்சிகள் பயன்படுத்துகின்றன” என்றெல்லாம் அதில் இருக்கிறது. ஒரு பல்கலைக்கழகத்தின் பாடப்புத்தகத்தில் இத்தகைய கருத்துகள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

அருணன்

மாணவர்களுக்கு அரசியல் குறித்து சொல்லித்தரப்பட வேண்டும். ஆனால், இந்தப் பாடப்புத்தகத்தில் இருப்பது அரசியல் அல்ல. இது மிக மோசமான ஒரு வகுப்புவாத வெறி. இந்த வகுப்புவாத வெறியுடன் ஓர் ஆசிரியர் பாடத்தை தயாரித்து, அந்தப் பாடம் ஒப்புதல் பெற்று அங்கீகரிக்கப்பட்டு பாடமாக மாணவர்களுக்கு போய்க்கொண்டிருக்கிறது என்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது.

நானும் பேராசிரியராகப் பணியாற்றியவன்தான். ஒரு பாடம் எப்படி உருவாக்கப்படும், ஒப்புதல் பெறப்படும் என்பதெல்லாம் எனக்கு நன்கு தெரியும். ஒரு பாடம் உருவாக்கப்பட்டால், அதை நான்கு ஐந்து பேராசிரியர்களாவது படித்துப்பார்ப்பார்கள். ஆனால், அதையும் தாண்டி பாடத்தில் இப்படியொரு மோசமான பகுதி வந்திருக்கிறது.

பல்கலைக்கழகப் பாடப்புத்தகத்தில் இப்படிப்பட்ட கருத்துகள் இடம்பெறுவதற்கான சூழல் முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் இருந்திருக்கிறது. அந்த ஆட்சியில், இப்படியெல்லாம் பாடத்திட்டம் எழுதலாம்... இப்படி எழுதினால்தான் ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கும், ஆட்சியாளர்கள் பா.ஜ.க ஆதரவாளர்கள். எனவே, முஸ்லிம்கள் மீதான வெறுப்பு மற்றும் தி.மு.க ., கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதான காழ்ப்புணர்சி ஆகியவவை காரணமாகவே அவர்கள் இப்படிப்பட்ட அவதூறான கருத்துகளை எழுதியிருக்கிறார்கள். முந்தைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுதான், முழுக்க முழுக்க இதற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

அண்ணா அறிவாலயம்

இவ்வளவு காலமாக அந்தப் பாடம் யாருடைய கவனத்துக்கும் வராமல், புதிய அரசு அமைந்த பிறகு சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் பார்வைக்கு வந்திருக்கிறது. அவர் சொன்ன பிறகுதான், எல்லோருக்கும் அது தெரியவந்திருக்கிறது. அப்படியென்றால், எனக்கு ஒரு கவலை ஏற்படுகிறது. ஒரு சில ஆசிரியர்கள் வகுப்புவாதக் கண்ணோட்டத்துடன் செயல்பட்டிருந்தாலும், மற்ற பேராசிரியர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள் என்பது, அவர்களுக்கு ஆட்சியாளர்களின் மீதான ஒரு பயம் இருந்திருக்கலாம்.

அதேபோல, அந்தப் பாடத்தைப் படித்த மாணவர்களை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது. அவர்களும் அப்பாவித்தனமாக இருந்திருக்கிறார்கள். அந்தப் பாடத்தைத்தான் அவர்கள் படித்து தேர்வு எழுதியிருப்பார்கள். அவதூறான அந்தக் கருத்துகள் அவர்களின் மனத்தில் பதிந்திருக்கும். தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து அந்த மாணவர்களுக்கு எப்படிப்பட்ட பார்வை ஏற்பட்டிருக்கும்? முஸ்லிம் மக்கள் குறித்து அந்த மாணவர்களின் சிந்தனை எப்படி மாறியிருக்கும் என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

தங்கள் ஆட்சியில் இப்படிப்பட்ட தவறு நடைபெற்றதற்காக முந்தைய ஆட்சியின் முதல்வரான எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். அந்தப் பாடத்தை எழுதிய பேராசிரியர் பணி ஓய்வுபெற்றுவிட்டதாக அமைச்சர் கூறியிருக்கிறார். அவர் பணி ஓய்வுபெற்றாலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் பேராசிரியர் அருணன்.

தி.மு.க-வின் செய்தித்தொடர்பாளரான வழக்கறிஞர் கண்ணதாசனிடம் இது குறித்து கேட்டபோது, “ஒவ்வொரு அரசியல் கட்சிகள் பற்றியும் அரசியல் அறிவியல் பாடங்களின் மூலம் மாணவர்களுக்கு கற்றுத்தருவது அவசியமான ஒன்று. அது அந்தந்த கட்சிகளின் கொள்கை, தத்துவம், வரலாற்று ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும்.வகுப்புவாதக் கண்ணோட்டத்துடன் கூடிய நபர்களை பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவனங்களின் உயர்ந்த பொறுப்புகளில் நியமிக்கப்படும்போது, இப்படிப்பட்ட ஆபத்துகள் உண்டு என்பது நமக்குத் தெரியும். இந்தப் பாடத்தின் மூலமாக இப்போது அது வெளிப்பட்டிருக்கிறது” என்றார்.

கண்ணதாசன்

மேலும், “தேசிய கல்விக்கொள்கை வருவதற்கு முன்பாகவே இப்படிப்பட்ட வேலைகளைச் செய்திருக்கிறார்கள். தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து அவதூறான அந்தக் கருத்துகள் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது அ.தி.மு.க அரசுக்குத் தெரியுமா, தெரியாதா என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை, அ.தி.மு.க ஒரு ஊழல் கட்சி என்று பாடத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டுதான் இருந்திருப்பார்கள்போல. இது மிகவும் தவறான, ஆபத்தான, கண்டித்தக்க செயல். எனவே, உயர் கல்வியில் மட்டுமல்லாமல், பள்ளிக்கல்வியில் உள்ள பாடப்புத்தகங்களிலும் இத்தகைய கருத்துகள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து ஆராயப்படும்” என்றார் வழக்கறிஞர் கண்ணதாசன்.

Also Read: கோயில்களின் சொத்து விவரம்: அதிரடிகாட்டும் அறநிலையத்துறை அமைச்சர்! - அரசின் நோக்கம் என்ன?

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, ஸ்டாலின் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து அ.தி.மு.க தரப்பிலிருந்து பெரிதாக கருத்துகள் தெரிவிக்கப்படுவதில்லை. புதிய ஆட்சியமைந்து ஓரு மாதம்கூட நிறைவடையவில்லை என்பதும் ஒரு காரணம். இந்த நிலையில், பாடப்புத்தக விவகாரம் குறித்து அ.தி.மு.க தரப்பின் கருத்துகளைக் கேட்பதற்காக அ.தி.மு.க செய்தித்தொடர்பாளர்கள் சிலரிடம் பேசினோம். இது குறித்து கட்சித் தலைமை கருத்து சொல்லாத நிலையில், பெயர் குறிப்பிட வேண்டாம் என்று அவர்கள் நம்மிடம் பேசினர்.

அன்றைய உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

“தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து தவறான கருத்துகள் அச்சிடப்பட்டிருப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கூறினார். அதில் ஒரு பகுதியை வாசித்தும் காண்பித்தார். ஆனால், அந்தப் புத்தகத்தில் ஆட்சேபத்துக்குரிய வகையில் என்னென்ன கருத்துகள் இடம்பெற்றுள்ள என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. இது பற்றி எங்கள் கட்சியின் தலைமையும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கும்போது, இது குறித்து கருத்து எதுவும் சொல்ல இயலாது” என்றனர்.

தங்கள் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றுள்ள இந்த விவகாரம் குறித்து தற்போது எதிர்க் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க-வின் தலைமை கருத்து தெரிவிக்க வேண்டியது அவர்கள் கடமை அல்லவா!?



source https://www.vikatan.com/government-and-politics/minister-ponmudi-alleged-that-tamil-nadu-open-university-textbook-has-lessons-with-anti-elements-over-dmk-and-communist

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக