தமிழக அரசின் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமுக்கு கோயில் யானைகளை அனுப்பி வைக்க யானை பாகர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்கள். முகாமுக்கு அனுப்பப்படாததால் யானைகள் உற்சாகமிழந்து காணப்படுவதாகவும் கட்டளைக்குக் கீழ்படிய மறுப்பதாகவும் இதனால் விபரீதம் ஏற்படுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசின் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் வருடந்தோறும் டிசம்பர் மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த முகாமிற்கு தமிழகமெங்கும் உள்ள பல்வேறு கோயில்களிலிருந்து யானைகள் அனுப்பி வைக்கப்படும். கோவை மாவட்டம் தேக்கம்பட்டி வனப்பகுதியில் நடைபெறும் இந்த முகாம்களில் கலந்துகொள்ளும் யானைகள் சக யானைகளுடன் 48 நாள்கள் இணைந்து சந்தோஷத்துடன் குதூகளிப்பதால், அவை மிக்க உற்சாகத்துடன் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் காரணமாக யானைகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இதன்காரணமாக மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பாள் உற்சாகம் இழந்து காணப்படுவதாகவும் தனது கட்டளைகளை ஏற்க மறுப்பதாகவும் யானை பாகன்கள் கூறுகின்றனர்.
மாயூரநாதர் கோயில் யானை பாகன்கள் செந்தில் மற்றும் வினோத்திடம் பேசினோம்.
"யானைகளுக்கு ஆண்டுதோறும் 48 நாள்கள் ஓய்வு கொடுக்கும் விதமாகவும் தனது இனமான பிற யானைகளுடன் கூடி உறவாடும் விதமாகவும் இந்த முகாம் நடைபெற்றது. உதாரணத்திற்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் மற்றும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்களில் மட்டும் யானைகள் இருந்தாலும் இந்த யானைகள் ஆண்டுக்கு ஒரு முறைகூட நேரில் சந்தித்துக் கொள்ள வாய்ப்பில்லை. எப்படி மனிதர்கள் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா தலங்களுக்கும் உறவினர் வீடுகளுக்கும் சென்று சந்தித்து உற்சாகம் அடைகிறார்களோ, அதேபோலத்தான் கடந்த பல ஆண்டுகளாக டிசம்பர் மாதத்தில் தொடங்கி 48 நாள்கள் முகாம்களில் உறவு கொண்டாடி யானைகள் சந்தோஷமடைந்து வந்தன.
அங்கு இந்த யானைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. யானைகளுக்குத் தேவையான, நோய்கள் வருமுன்னே தடுக்கக்கூடிய அஷ்டசூரணம் போன்ற மருந்துகளும் வழங்கப்பட்டன. இதனால் யானைகள் ஒரு வருடம் முழுவதும் உற்சாகமாகக் காணப்படும்.
இந்தாண்டு கொரோனா காரணமாக யானைகள் முகாம் பற்றி இதுவரை எவ்வித அறிவிப்பும் வரவில்லை. ஆனால் யானைகள் அதிக ஞாபக சக்தி உள்ளவை. அதற்கு இந்த டிசம்பர் மாதம் வந்தவுடனே முகாம் ஞாபகம் வந்துவிட்டது. எனவே எங்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கின்றன. ஒரு முறை உத்தரவிடும் நிலைமாறி பலமுறை உத்தரவிட வேண்டியுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் யானைகள் விபரீத முடிவுகள் எடுத்து விடலாம். பல உயிரிழப்புகளைச் சந்திக்கவேண்டிய ஆபத்தான சூழ்நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு யானைகள் முகாமுக்கு உடனடியாக ஏற்பாடு செய்து தரவேண்டும்" என்றனர்.
source https://www.vikatan.com/news/animals/elephant-mahout-speaks-about-challenges-he-faced-due-to-no-rejuvenation-camp-in-2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக