சீர்காழி அருகே இன்று தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நியாயவிலைக் கடை முன்பு அ.தி.மு.க சார்பில் தேர்தல் விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றக் கோரி சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 50 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கும் சம்பவம் சர்ச்சையாகியிருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தர்காஸ் கிராமத்தில் கூட்டுறவு சங்கத்தின் நியாயவிலைக் கடை இருக்கிறது. இந்தக் கடையின் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பான திராட்சை, முந்திரி, ஏலக்காய்,1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெல்லம் மற்றும் ரூ.2,500 வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கிவைக்கப்பட்டது. இதையொட்டி அ.தி.மு.க சார்பில் நியாயவிலைக் கடை அருகே விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில்,`புரட்சித்தலைவி நல்லாட்சி தொடர, வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இது குறித்து கொள்ளிடம் தி.மு.க ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபிரகாஷ் புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில்,``அரசு நிகழ்ச்சியில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருக்கும் பேனரை உடனடியாக அகற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், விளம்பர பேனர் அகற்றப்படவில்லை.
Also Read: பொங்கல் பரிசு... தேர்தலுக்கு 'டோக்கன்' அட்வான்ஸா?! - எதிர்க்கட்சிகள் சொல்வதென்ன?
இதைக் கண்டித்து தி.மு.க ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் ஊராட்சி மன்றத் தலைவர் மூர்த்தி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஆளவந்தார் உள்ளிட்ட தி.மு.க-வினர் திரண்டு வந்து தர்காஸ் கிராமத்தில் நியாயவிலைக் கடை அருகே புதுப்பட்டினத்திலிருந்து பழையாறு செல்லும் நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நியாயவிலைக் கடை அருகே வைக்கப்பட்டிருந்த கட்சி பேனரை அ.தி.மு.க-வினரே அகற்றினர்.
சாலைமறியலில் ஈடுபட்ட கொள்ளிடம் தி.மு.க ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 50 தி.மு.க-வினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சாலைமறியலால் புதுப்பட்டினம் - பழையாறு சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/sirkali-police-books-50-dmk-cadres-over-protest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக