Ad

வெள்ளி, 1 ஜனவரி, 2021

வேலூர்: எம்.ஜி.ஆர் சிலையில் வன்னியர் சங்கக் கொடி! - சர்ச்சையான பா.ம.க இளைஞர்கள் செயல்

தமிழ்நாட்டில், வன்னிய மக்களுக்கு கல்வி மற்றும் அரசுப் பணியில் 20 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் மாநிலம் தழுவியப் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறது. நேற்று முன்தினம், வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பி.டி.ஓ அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.

எம்.ஜி.ஆர் சிலையில் பா.ம.க கொடி

இந்தப் போராட்டத்தின்போது, அக்னிக் கலசம் பொரிக்கப்பட்ட வன்னியர் சங்கக் கொடியையும், பாட்டாளி மக்கள் கட்சி கொடியையும் அங்கிருந்த எம்.ஜி.ஆர் சிலையின் கைப்பகுதியில் தாங்கிப்பிடித்தபடி வைத்து இளைஞர்கள் சிலர் ஆரவாரம் செய்தனர். எம்.ஜி.ஆர் கையில், பா.ம.க மற்றும் வன்னியர் சங்க கொடி பறப்பதைப் போன்ற போட்டோக்களையும் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த இளைஞர்கள் பதிவிட்டுள்ளனர்.

இந்தச் செயல் எம்.ஜி.ஆரின் ரசிகர்களையும், அ.தி.மு.க-வினரையும் கொதிப்படையச் செய்துள்ளது. ``’தன்னை எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி’ என்கிறார் ஒரு நடிகர். இன்னொரு நடிகர், `கருப்பு எம்.ஜி.ஆர்’ என்று தனக்குத்தானே புகழ் சூட்டிக்கொள்கிறார். இவர்களைப் போன்றே குட்டை எம்.ஜி.ஆர், நெட்டை எம்.ஜி.ஆர் என்று வரிசைக்கட்டி தமிழக அரசியல் களத்தை சிலர் அதகளப்படுத்திவருகிறார்கள்.

எம்.ஜி.ஆர்

இப்படியானச் சூழலில், பா.ம.க-வினரின் இந்தச் செயல் வருத்தமளிக்கிறது. மறைந்த தலைவர்களை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அதேசமயம், அவர்களின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக தனி நபரோ, அரசியல் கட்சியினரோ நடந்துகொள்ள வேண்டாம்’’ என்று எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/controversy/pmk-youth-ties-party-flags-to-mgr-statue-in-vellore-irks-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக