Ad

வெள்ளி, 1 ஜனவரி, 2021

தாட்சா, திவ்யா, கார்ல் மார்க்ஸ்... கான்ஃபரென்ஸ் ரூம் என்கிற சட்டசபையில்! - இடியட் பாக்ஸ் - 3

ஏதோ நடக்கப்போகிறது என நான்ஸி செம ஆர்வத்தோடு காத்திருக்க, மார்க்ஸும் தாட்சாவும் கான்ஃபரன்ஸ் அறைக்குள் நுழைந்தார்கள்.

கான்ஃபரன்ஸ் ரூம் என்பது கார்ப்பரேட் அலுவலகங்களில் மிக மிக முக்கியமானது. மார்க்ஸ் அதை எப்போதுமே சட்டசபை என்றுதான் சொல்லுவான். 20க்கு 40 என நீளமான அறை அது. ஒரு பக்கம் முழுக்க கண்ணாடி சுவர். வெளியே இருந்து பார்த்தால் அறைக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியும். மறுபக்க சுவரில் ஐந்தாறு தொலைக்காட்சிகள் மாட்டப்பட்டு, போட்டி சேனல்கள் எந்நேரமும் அதில் ஓடிக் கொண்டேயிருக்கும். அந்த நேரத்தில் போட்டி சேனல்கள் என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒப்பிட்டு பார்த்துக்கொள்வதற்கான ஏற்பாடு அது.

கான்ஃபரன்ஸ் அறையில் நீளமான டேபிள் ஒன்று போடப்பட்டு அதன் இருபக்கமும் வரிசையாக நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். நீளமான அந்த டேபிளில் ஒரு பக்கம் இருப்பவர்கள் ஒரு கருத்தை ஆமோதிப்பவர்களாகவும், மறுபக்கம் இருப்பவர்கள் மற்றொரு கருத்தை சொல்பவர்களாகவும் இருப்பார்கள். நடுவில் இருக்கும் சேரில் உட்காருபவர்தான் பெரும்பாலும் அந்த மீட்டிங்கை நடத்தி தீர்ப்பு சொல்லப்போகும் தலைவராக இருப்பார்.

கட்சிகளைப்போலவே ஆபிஸிலும் பல அணிகள் இருக்கும். மீட்டிங்குகளில் அவர்கள் கான்ஃபரன்ஸ் டேபிளின் எந்த பக்கம் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை வைத்தே அவர்கள் எந்த அணி என்பதை ஓரளவுக்குப் புரிந்து கொள்ளமுடியும். பல வருடங்களாக பார்த்து பழகிப்போன அந்த கான்ஃபரன்ஸ் ரூம் அன்று மார்க்ஸுக்கு அந்நியமாய் தெரிந்தது.

ஆளுக்கொரு லேப்டாப்பை திறந்து வைத்தபடி பல புதிய முகங்கள் டேபிளின் ஒரு பக்கம் அமர்ந்திருக்க, மறுபக்கம் மார்க்ஸும் தாட்சாவும் வந்து நின்றார்கள். டேபிளில் நிறைய உணவுப் பண்டங்கள். ஹெச்ஆர் மேனஜர் பிரசாத் அவர்களுடன் ஏதோ இந்தியில் பேசி போலியாக சிரித்துக்கொண்டிருந்தான். அதை வழிந்துகொண்டிருந்தான் என்றும் சொல்லலாம்.

கான்ஃபரன்ஸ் ரூமில் உட்கார்ந்து ஒரு கடலை மிட்டாய் சாப்பிட்டால் கூட தையா தக்கா குத்தாட்டம் போடுவது பிரசாத்தின் வழக்கம். ஆனால், இப்போது டேபிள் முழுவதும் பாப்கார்ன், பிஸ்கெட்டுகள், சாண்ட்விட்ச்கள், கோக் டின்கள் என எல்லாம் அவன் கண்முன்னே இறைந்து கிடந்தன. கார்ப்பரேட் என்றாலும் எப்போதும் சென்னைக்கு ஒரு நியாயம் மும்பைக்கு ஒரு நியாயம்தானே!

அவர்கள் எல்லோரும் அலட்சியமாக அமர்ந்திருந்த விதமே மார்க்ஸுக்கு எரிச்சல் மூட்டுவதாக இருந்தது. 'உன் கதை முடிந்தது' என்கிற தோரணையோடு மார்க்ஸைப் பார்த்தான் பிரசாத். இந்த அலுவலகத்தில் மார்க்ஸுக்குப் பிடிக்காத ஒரு சில பேர்களில் ஹெச்ஆர் மேனஜர் பிரசாத்தும் ஒருவன். ஆனால், பிரசாத்துக்கு பிடிக்காத ஆட்களின் லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருப்பவன் மார்க்ஸ். அவர்கள் இருவருக்கும் நடுவில் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் எப்போதும் நடந்து கொண்டேயிருக்கும்.

''சார் ஹெச்ஆர் வேலைன்றது தொழிலாளர்கள் நலனைப் பாதுகாக்குறது. அவங்களை முதலாளிகளுக்குப் போட்டு குடுக்குறது கிடையாது. முதலாளிங்ககிட்ட இவங்களுக்காக பேசுங்க சார். இவங்க கஷ்டத்தைப் புரிய வைங்க. அதை விட்டுட்டு முதலாளிக்கு மிச்சம் பண்ணி குடுக்குறேன்னு இவங்க வயித்துல அடிக்காதிங்க'' என மொத்த அலுவலகத்தின் முன்னால் மார்க்ஸ் தன்னை வியர்க்கவைத்த சம்பவத்தை பிரசாத் எப்போதும் மறக்கத் தயாராக இல்லை. அந்த சம்பவம் மட்டுமல்ல, இன்னும் பல சம்பவங்கள் எல்லாம் சேர்ந்துதான் மார்க்ஸை அந்த அலுவலகத்தின் அறிவிக்கப்படாத தொழிலாளர் தலைவனாகவும் மாற்றியது.

தாட்சா, மார்க்ஸைப் பார்த்ததும் கான்ஃபிரன்ஸ் ஹாலில் அமர்ந்திருந்தவர்களில் சிலர் புன்னகைக்க, சிலர் வழக்கம்போல லேப்டாப்பில் பிஸியாக இருந்தார்கள். தாட்சா ஆங்கிலத்தில் ''இவர்தான் கார்ல் மார்க்ஸ். நம்ம சேனலோட புரோகிராமிங் ஹெட்” என அறிமுகப்படுத்தினாள். பெயரைக்கேட்டதுமே அறைக்குள் இருந்த எல்லோரும் பார்வையிலேயே மார்க்ஸை அளவெடுக்க ஆரம்பித்தனர். மார்க்ஸுக்கு அந்தப் பார்வைகள் ஒன்றும் புதிதல்ல என்பதால் எப்போதும்போலவே இருந்தான்.

எப்போது எங்கு அவனது பெயர் உச்சரிக்கப்பட்டாலும் கூட்டத்தில் முக்கால்வாசி பேர் தலையை திருப்பி அவனைப் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அந்த பெயர் அப்படி!

மார்க்ஸின் அப்பா சர்க்கரையப்பன் ஒரு தமிழாசிரியர். கம்யூனிஸ சிந்தாந்தங்கள் மேல் அவருக்கு எவ்வளவு ஈடுபாடு என்பது அவரது முதல் மகனுக்கு கார்ல் மார்க்ஸ் எனப்பெயர் வைத்தபோதுதான் ஊருக்கே புரிந்தது. தாத்தா பெயரோ, அப்பா பெயரோ இல்லை என்றால்கூட விகேஷ், சுகேஷ், ஆர்யா, சூர்யா என ஏதாவது ஒரு மாடர்ன் பெயரை பிள்ளைக்கு வைப்பார் என எதிர்பார்த்திருந்த சர்க்கரையப்பனின் மனைவிக்கு கார்ல் மார்க்ஸ் என்கிற பெயர் பெரிதும் அதிர்ச்சியாக இருந்ததில் ஆச்சர்யமில்லை.

“இது என்ன புள்ளைக்கு வேதக்காரங்க பேர வச்சுட்டான்” எனத் தன் கணவன் பெயரை வைக்காமல்போன ஆதங்கத்தில் அப்பத்தா குறைபட்டுக் கொண்டாள். ஆனால் மார்க்ஸுக்கு அவனது பெயர் மிகவும் பிடிக்கும். பிச்சாண்டி, மூக்கன், முருகன், சதக், சுப்பிரமணி என வகுப்பு தோழர்களின் பெயர்கள் இருக்கும்போது கார்ல் மார்க்ஸ் என்கிற பெயர் அவனுக்குப் பெருமையாகவே இருந்தது. வெள்ளைக்கார துரை மாதிரி அப்பா அவனுக்கு பெயர் வைத்திருக்கிறார் என்பதில் அவனுக்கு பெருமை. ஆனால், துரைகளை காலி செய்யவந்தவர் அவர் என்பது அவனுக்குப் பின்னால்தான் புரிந்தது.

மார்க்ஸ் எட்டாவது படிக்கும்போது, அப்பா ஒரு நாள் அவனை அழைத்து ''கார்ல் மார்க்ஸ்னா யாருன்னு தெரியுமா?'' எனக் கேட்டார்.

“பெரிய தலைவர்பா…”

“தலைவர்னா…”

“ரஷ்யாவுல பெரிய ஹீரோ...”

“ஹீரோன்னா ரஜினிகாந்த் மாதிரியா?”

அவனுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. ''உனக்கு ஒரு பெரிய ஆள் பேர் வெச்சிருக்கேன்ல. அவர் யார்னு தெரிஞ்சிக்கணும்னு ஆசை இல்லையா?''

அவன் 'ஆம்' எனத் தலையை அசைத்தான்.

இடியட் பாக்ஸ்

''இத படி” என அவன் கையில் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை கொடுத்தார். கடினமான மொழிபெயர்ப்பு தமிழ் ஆரம்பத்தில் அவனுக்கு அயர்சியாக இருந்தாலும் பத்தாவது பக்கத்தைத் தாண்டிய பிறகு வார்த்தைகள் மறைந்து மார்க்ஸின் வாழ்க்கை அவனை ஆட்கொண்டது. ஜென்னியின் காதல் அவன் கண்களைக் குளமாக்கியது. இது எல்லாம் அவன் எட்டாவது படிக்கும்போது நடந்தது என அவன் யாரிடம் சொன்னாலும் அவர்கள் ''சும்மா கத விடாத'' என்பார்கள்.

அவன் வாய் திறக்கும் முன்பே அவன் போராளியாகத்தான் இருப்பான் என அவனது பெயர் எல்லோரையும் நினைக்க வைத்து விடும். அது ஒரு கட்டத்தில் அவனுக்கு பழகிப்போனது மட்டுமல்ல, பிடித்தும் போனது என்பதுதான் உண்மை. அவன் கல்லூரியில் சேரும்போது பிரின்சிபால் “தம்பி ஸ்டூடன்ட்ஸ் யூனியன், போராட்டம், ஆர்ப்பாட்டம் , ஸ்டரைக்குன்னு இறங்கிடக்கூடாது. வந்தமா படிச்சமா போனோமான்னுதான் இருக்கணும்'' என்று பெயர் தெரிந்த கனத்திலேயே கடுப்பானார்.

ஒரு பெயர் இத்தனை பயத்தைத் தர முடியும் என அவனுக்கு புரிந்த தருணம் அது. மார்க்ஸின் அப்பா புன்னகைத்தபடி அவனிடம் சொன்னார். “உன் பேர்ல நெருப்பு இருக்கு... அது உன் மனசுக்குள்ள இருக்கணுமா, வேணாமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ.''

தவறுகளைத் தட்டிக் கேட்பதும், சரியான விஷயங்களுக்கு குரல் கொடுப்பதும் மார்க்ஸின் வாழ்க்கையில் அப்போது ஆரம்பித்தது இப்போது வரை தொடர்கிறது. ''உங்கப்பா பெரிய ஆள்டா... நீ இப்படித்தான் இருப்பேன்னு அப்பவே தெரிஞ்சிக்கிட்டு உனக்குப் பொருத்தமா பேர் வெச்சிருக்கார்'' என அவனது நண்பர்கள் வியப்பார்கள்.

''கார்ல் மார்க்ஸ்... நைஸ் டு மீட் யூ'' என சிரித்தபடி ஒருவன் கையை நீட்ட மார்க்ஸ் இறுக்கமான முகத்தோடு அவனது கையைக் குலுக்கினான்.

“இது மனீஷ் புது மார்க்கெடிங் ஹெட்... இது சூஸன் சவுத் ஹெச்ஆர் ஹெட்... இவர் சித்தார்த் மேனன்... எல்லா சேனலோட புரோகிராமிங் பிளானும் இவரோடதுதான்'' என தாட்சா வரிசையாக அறிமுகம் செய்து வைக்க அவர்கள் புன்னகையுடன் தலையாட்ட மார்க்ஸ் போலியாகப் புன்னகைத்துக் கொண்டான்.

“உட்காரு மார்க்ஸ்'' என்றபடி தாட்சா உட்கார, மார்க்ஸ், அவள் அருகே இருந்த நாற்காலியில் வேண்டுமென்றே அலட்சியமாக சாய்ந்து உட்கார்ந்தான். “என்னடா இது?” என தாட்சா காதருகே வந்து கிசுகிசுத்தாள்.

''என்ன தாட்சா''

“என்ன திமிரா உட்காருந்திருக்க…”

“வேலை இல்லை வெளிய போடான்னு சொல்லப் போறாணுங்க... அதை கேட்குறதுக்கு மரியாதையா வேற உட்காரணுமா?”

“ஓவரா பண்ணாத'' என தாட்சா பல்லை கடித்தபடி திரும்பிக் கொண்டாள். தன்னையே குறுகுறுவெனப் பார்த்துக்கொண்டிருந்த பிரசாத்தை 'என்னடா லுக்கு' என்பதுபோல பார்த்தான் மார்க்ஸ்.

சித்தார்த் மேனன் சரசரவென ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். “குட் வொர்க் மார்க்ஸ். இந்த மாதிரி ஒரு சூழல்ல, தமிழ்நாட்டுல இப்படி ஒரு சேனல் சர்வைவ் ஆகுறது பெரிய விஷயம். சேனலுக்கு டிஆர்பி பெருசா இல்லன்னாலும், நல்ல பேர் இருக்கு. நல்ல பேர் சம்பாதிக்கிறதுதான் ரொம்ப கஷ்டம். இனிமே இது தனி சேனல் கிடையாது. இந்தியாவோட நம்பர் 1 மீடியா குரூப்ல இனி ஆரஞ்ச் டிவியும் ஒரு பகுதி. பட்ஜெட், செலவுகள் பத்திலாம் இனி கவலைப்படவேண்டாம். நிறைய இன்வெஸ்ட் பண்ணப்போறோம். நல்ல நல்ல மாற்றங்கள் வரப் போகுது.”

மார்க்ஸ், எந்த உணர்ச்சிகளும் அற்று சித்தார்த் பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“யெஸ்... உங்களுக்கு அறிமுகப்படுத்த மறந்துட்டேன். இவங்கதான் திவ்யா. நம்ம சேனலோட புது புரோகிராமிங் ஹெட்!"

ஆப்பிள் மேக்புக்கில் இருந்து திவ்யா முகத்தை நிமிர்த்தி மார்க்ஸைப் பார்த்து மிகச் சின்னதாக புன்னகைத்தாள். ஒரு கணம் அவளது அழகு மார்க்ஸை வேறு ஏதும் யோசிக்கவிடாமல் செய்தது. கோபமாக உள்ளே நுழைந்ததாலோ, என்னவோ அவன் இதுவரை அவளை கவனிக்கவேயில்லை.

கை இல்லாத கதர் குர்தா... தலைமுடியை சுருட்டி அதில் ஒரு பென்சிலை சொருகி வைத்திருந்தாள். கழுத்தில் மெல்லிய செயின். இருக்கிறதா, இல்லையா எனத் தெரியாமல் நெற்றிப் பொட்டு. மாநிறம்... அழகிய பெரிய கண்கள்... கண்ணாடியை நெற்றிக்கு அணிந்திருந்தாள். கையில் ஒரு ஆப்பிள் வாட்ச். விரலில் மெல்லிய மோதிரம். அலட்சியமும், திமிரும் கலந்த ஒரு காக்டெய்ல் பார்வை.

மார்க்ஸ் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்க்க… “நம்மளோட பெங்காலி சேனல் 5-வது இடத்துல இருந்தது. திவ்யாதான் அதை முதல் இடத்துக்கு கொண்டுவந்தாங்க. போன வருஷம் நம்ம கம்பெனியோட சாதனையாளர் அவார்டு வாங்கினதும் திவ்யாதான். பாஸ் கிட்ட போராடி நம்ம சேனலுக்கு இவங்கள வர வெச்சிருக்கேன். இனிமே சேனலோட புரோகிராம் எல்லாத்தையும் இவங்கதான் பார்த்துக்கப் போறாங்க.''

சித்தார்த் மேனன் சொல்லி முடிக்க பிரசாத் குறுக்கிட்டான். “மார்க்ஸ் இனிமே நீங்க இவங்களுக்குதான் ரிப்போர்ட் பண்ணனும். உங்க ரிப்போர்ட்டிங் ஹெட் திவ்யா.”

மார்க்ஸ் திரும்பி பிரசாத்தைப் பார்த்தான். “இனிமே நீ தலை இல்லடா.. அந்தம்மாதான் எல்லாம். நீ அவங்களுக்கு கீழதான்” என்பதை பிரசாத்தின் கீழ்த்தரமான புன்னகை சொல்லாமல் சொல்லியது.

மார்க்ஸ் திரும்பி திவ்யாவைப் பார்க்க, “இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிஞ்ச பிறகு நான் உங்ககிட்ட பேசுறேன் மார்க்ஸ். புரோகிராம் ஷெட்யூல் எல்லாம் என்கிட்ட இருக்கு. ஆனா, எந்த ஷோவையும் நான் ஒரு தடவை கூடப் பார்த்ததில்லை. அது என்ன மாதிரியான ஷோ அப்படின்னு ஒவ்வொரு புரோகிராம், சீரியல் பத்தியும் சின்னதா மூணு லைன்ல ஒரு நோட் மட்டும் எனக்கு மெயில்ல அனுப்புங்க. அப்புறமா நாம மீட் பண்ணலாம்'' என இது அத்தனையையும் ஒரு சில விநாடிகளில் ஆங்கிலத்தில் திவ்யா சொல்லி முடிக்கும் முன்பே எழுந்து நின்றான் மார்க்ஸ்.

இடியட் பாக்ஸ்

என்ன என்று புரியாமல் திவ்யா மட்டுமல்ல அந்த அறைக்குள் இருந்த அத்தனைப் பேரும் மார்க்ஸையேப் பார்க்க, மிக நிதானமாக “நான் ரிசைன் பண்றேன்” என்றான் மார்க்ஸ்... ஒரு சிறு புன்னகையோடு!

“உங்க சம்பளம் எல்லாம் குறைக்க மாட்டாங்க மார்க்ஸ்” என பிரசாத் ஆரம்பிக்க, ''நான் உங்ககிட்ட கேட்டேனா?'' என கோபமானான்.

“டேய் ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளு'' என தாட்சாயணி அவன் கையைப்பிடிக்க முயல, “ஸாரி மேடம்'' என்றவன் திரும்பி மேனனைப் பார்த்து “தேங்ஸ் சார்'' என்றான்.

“அப்படி எல்லாம் நீங்க நினைச்சவுடனே ரிசைன் பண்ணிட்டு வெளில போய்ட முடியாது. சட்டப்படி ஒரு மாசம் நோட்டீஸ் கொடுக்கணும் தெரியும்ல” என்றான் பிரசாத்.

“சட்டத்தைப்பத்தி என்கிட்ட பேசுறீங்களா... நீங்க பேப்பர் கொடுத்த ஆளுங்க எல்லாம் சட்டம் பேசுனா என்ன ஆகும் தெரியுமா?'' கார்ல் மார்க்ஸின் முகம் சிவக்க, பிரசாத் அமைதியானான்.

மார்க்ஸின் கண்கள் திவ்யாவின் கண்களுக்குள் இறங்கியது. திவ்யாவும் மார்க்ஸையே பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த அசாதாரணமான சூழலிலும் அவளைத் தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதை உள்ளுக்குள் ஓர் உதறலோடு உணர்ந்தான் மார்க்ஸ்..!

- Stay Tuned



source https://cinema.vikatan.com/literature/conference-room-commotion-idiot-box-part-3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக