Ad

வெள்ளி, 1 ஜனவரி, 2021

காயத்ரியின் கோபம், லோகேஷின் `டிவோர்ஸ்' ஐடியா... அபி சொல்வது சரிதானா? #VallamaiTharayo

வேனில் இருந்து வந்த நபர் காரின் முன் இருக்கையில் ஏறிக்கொள்கிறார். ``வேனில் எல்லோரும் தண்ணி போட்டுவிட்டு, கூத்தடிக்கிறார்கள். என்னால் அதைச் சகிக்க முடியவில்லை. அதனால்தான் உங்கள் காருக்கு வந்தேன்" என்று கெளதமிடம் சொல்கிறார்.

அவர் வந்தது லோகேஷுக்கும் பெனிடாவுக்கும் சுத்தமாகப் பிடிக்கவில்லை. புலம்பிக்கொண்டே வருகிறார்கள். அந்த மனிதர் பாட்டை நிறுத்தச் சொல்கிறார். ஏசியைக் குறைக்கச் சொல்கிறார். ``நாம் ஜாலியாகத்தான் வந்திருக்கோம். இங்கும் இப்படிச் செய்தால் என்ன செய்வது?” என்று கேட்கிறான் லோகேஷ்.

Vallamai Tharayo

திடீரென்று வீணா கூப்பிடுவதாகச் சொல்லி அந்த நபர் இறங்கிக்கொள்கிறார். அப்பாடா என்று குத்துப்பாட்டு கேட்கும் லோகேஷிடம், ``எரிச்சலாக்காதே... ஆபிஸ், வீடுன்னு எங்களுக்கு எவ்வளவு விரக்தி இருக்கு. எங்களை மாதிரி நீ இருந்தால் இந்நேரம் என்ன ஆகியிருப்பீயோ? பெண்கள் சிரிச்சா அதை ஒரு மாதிரி பேசறது. கோபமா பேசினா அதை ஒரு மாதிரி பேசறது... ஆண்களுக்குப் பொண்ணுங்களை அனுசரிச்சுப் போகத் தெரியாது” என்று படபடக்கிறாள் காயத்ரி.

``காயத்ரி சொல்றது கரெக்ட். பெண்களுக்கு ஆயிரம் பிரச்னைகள் இருக்கு. நமக்கும் இருக்கு. ஆனா, அதிலிருந்து வெளியே வர ஊர் சுத்தறோம். சரக்கடிக்கறாங்க” என்று கெளதம் சொன்னவுடன், கல்யாணத்தில் இவ்வளவு சிக்கல் இருக்கிறதா என்று பயப்படுகிறாள் பெனிடா.

Vallamai Tharayo

``லைஃப் பார்ட்னர் சரியா அமைஞ்சா லைஃப் பியூட்டிஃபுலா இருக்கும். மிஸ்அன்டர்ஸ்டேண்டிங் வந்தா லைஃப் காலி” என்று கெளதம் சொல்ல, ``எல்லா ஆண்களும் ஒரே மாதிரிதான்" என்கிறாள் காயத்ரி.

``இல்ல, நம்ம கெளதம் அப்படி இல்ல. எத்தனை பொண்ணுங்க அவரைக் கல்யாணம் பண்ண ஆசைப்பட்டாங்க!” என்கிறாள் பெனிடா.

``பெண்களைப் பொறுத்தவரை குடும்பம்தான் எல்லாமே... கல்யாணம் உட்பட எல்லாமே மத்தவங்கதான் முடிவு எடுக்கிறாங்க. இப்படி எல்லாத்துலேயும் மத்தவங்க முடிவை ஏத்துக்கிட்டு வாழ வேண்டியிருக்கு. இந்த வாழ்க்கை நல்லா அமைஞ்சா சந்தோஷம். இல்லைனா முரண்தான்” என்று அபி சொன்னவுடன், ``பிடிக்கலைனா டிவோர்ஸ் பண்ணிக்கலாமே” என்று லோகேஷ் கேட்கிறான். டிவோர்ஸ்தான் தீர்வு என்றால் எப்போதுதான் வாழ்க்கையை வாழ்வது என்கிறாள் அபி.

எவ்வளவு மோசமாக இருந்தாலும் சகித்துக்கொண்டு வாழ வேண்டும் என்கிறாளா அபி? அந்தக் கருத்து எல்லாம் இப்போது மாறிவருகிறது. அத்துடன் வாழ்க்கை என்பது திருமண வாழ்க்கை மட்டுமே அல்ல.

Vallamai Tharayo

மறுபடியும் பெனிடா கெளதமைப் பாராட்ட, ``என்னைப் பத்தி என்ன தெரியும் உனக்கு? ஆபிஸில் பார்க்கிறதை மட்டும் வச்சு முடிவு எடுக்கக் கூடாது” என்கிறான் கெளதம்.

``என்னைப் பொறுத்தவரை பிளான் பண்ணி வாழ முடியாது. அந்த நேரத்துல என்ன நடக்குதோ அதை ஏத்துட்டு வாழ்ந்துட்டுப் போயிடணும். நம்மள ஏமாத்திக்காம வாழணும்” என்கிறாள் அபி.

பாண்டிச்சேரியில் மீட்டிங் முடிந்தவுடன் பார்ட்டியில் கலந்துகொள்ள லோகேஷும் பெனிடாவும் ஆர்வமாக இருக்கிறார்கள். அபியை பார்ட்டி டிரஸ்தான் போட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறாள் பெனிடா. தயங்குகிறாள் அபி.

இனி என்ன?

இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா


source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-review-for-episode-49

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக