கேரள மாநிலம், திருவனந்தபுரம் - கொல்லம் மாவட்ட எல்லைப் பகுதியான நாவாயிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சபீர் (36 ). இவரின் மனைவி ரெஜீனா. இவர்களுக்கு அல்தாஃப் (12), அன்ஷாத் (9) என இரண்டு மகன்கள் இருந்தனர். அல்தாஃப் ஆறாம் வகுப்பும், அன்ஷாத் நான்காம் வகுப்பும் படித்துவந்தனர். சபீர், தனது மனைவி ரெஜீனாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த சில மாதங்களாகத் தனியாக வசித்துவந்தார். ரெஜீனா இரண்டு மகன்களுடன் தனது சகோதரரின் வீட்டில் வசித்துவருகிறார். கூச்ச சுபாவம் போன்ற காரணங்களால் சபீர் யாரிடமும் அதிகம் பேசுவது இல்லை எனக் கூறப்படுகிறது. அவருக்கு போதைப் பழக்கம் போன்ற எந்த கெட்ட பழக்கங்களும் இல்லை எனவும் கூறப்படுகிறது. இரண்டு மகன்களிடமும் அதிக பாசம் வைத்திருந்த சபீர், மனைவி மற்றும் பிள்ளைகள் பிரிந்து சென்ற பின்பு மிகவும் வருத்தத்தில் இருந்திருக்கிறார். இருப்பினும், தனது மகன்களைக் காண மனைவி தங்கியிருந்த வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார். மேலும், அவர்களுக்குத் தேவையான பொருள்களையும் வாங்கி கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தனது ஆட்டோவில் இரண்டு மகன்களை அடிக்கடி வெளியே அழைத்துச் சென்று வருவதும் அவர் வழக்கமாம். மகன்கள் அடிக்கடி தந்தையின் ஆட்டோவில் சுற்றுலா சென்றுவிட்டு வருவது பற்றி அவருடைய மனைவி ரெஜீனா கண்டுகொள்வதில்லை எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆங்கிலப் புத்தாண்டான கடந்த வெள்ளிக்கிழமை, சபீர் தனது மனைவி ரெஜீனா வசிக்கும் வீட்டுக்குச் சென்று இரு மகன்களையும் அழைத்து சென்றிருக்கிறார். ஆனால், அன்று இரவு ஆகியும் குழந்தைகளை அவர் வீட்டுக்குத் திருப்பிக் கொண்டு விடவில்லை.
இதனால், ரெஜீனாவின் சகோதரர் மொபைல்போனிலிருந்து சபீரை அழைத்திருக்கிறார். சபீர் குழந்தைகளிடம் போனைக் கொடுத்திருக்கிறார். குழந்தைகளோ, தாங்கள் வர்க்கல பீச்சுக்குச் சென்றதாகவும், தந்தை புத்தாடைகள் வாங்கித் தந்ததாகவும், புத்தாடை அணிந்துகொண்டு ஸ்டார் ஓட்டலில் சென்று உணவு சாப்பிட்டதாகவும் சந்தோஷமாகக் கூறியிருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து சபீரிடம் பேசிய ரெஜீனாவின் சகோதரர், குழந்தைகளைக் காலையில் திரும்பக் கொண்டுவிடும்படி கூறியிருக்கிறார். சபீரும் காலையில் பிள்ளைகளைக் கொண்டுவிடுவதாகத் தெரிவித்திருக்கிறார்.
மறுநாள் சபீரின் ஆட்டோ அந்தப் பகுதியிலுள்ள கோயில் குளக் கரையில் நீண்டநேரமாக நின்றிருக்கிறது. அந்தப் பகுதியினர் சந்தேகத்தின் பேரில் ஆட்டோ அருகில் சென்று பார்த்தபோது அதில் ஒரு கடிதம் இருந்தது. அந்தக் கடிதத்தில் 'இளைய மகன் குளத்தில் கிடக்கிறான்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சிலர் சபீரின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது மூத்த மகன் அல்தாஃப் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்திருக்கிறார். இது குறித்து போலீஸுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், ஆட்டோ நின்றுகொண்டிருந்த குளத்தில் தீயணைப்பு வீரர்கள் படகில் தேடிப் பார்த்தபோது, அங்கு சபீர் மற்றும் அவரின் இளைய மகன் அன்ஷாத்தின் உடல்கள் மீட்கப்பட்டன.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``மனைவி பிரிந்ததால் சபீருக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்குக்கு வருவதாகச் சொன்ன சபீர், தனது மூத்த மகனைக் கட்டிப்போட்டு, கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கிறார். பின்னர், தனது இளைய மகனைக் குளத்தில் வீசிக் கொலை செய்திருக்கிறார்.
Also Read: திருச்சி: வீட்டு வாசலில் பால் பாக்கெட்; பெண் ஜவுளி வியாபாரி கொடூரக் கொலை! - நகைக்காக நடந்த கொடூரம்
பின்னர் அவரும் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர். மனைவி பிரிந்து சென்ற மன உளைச்சல் காரணமாக இரண்டு மகன்களைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/kerala-father-kills-2-sond-and-committed-suicide
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக