Ad

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

கரூர்: `2-வது ஊழல் பட்டியல் தயார்; எம்.ஆர்.விஜயபாஸ்கரும் இருக்கிறார்!' - மு.க.ஸ்டாலின்

"தேர்தலில் முதல்வர், அமைச்சர்கள் வெற்றி பெற மாட்டார்கள். 'நாம் வெற்றி பெறாவிட்டால், சிறைக்குச் செல்வோம்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக கேள்விபட்டோம். நாங்கள் இரு முறை வெற்றி பெறவில்லை. அதற்காக, சிறைக்கா சென்றோம்?. ஆனால், அ.தி.மு.க அமைச்சர்கள் ஊழல் செய்வதை அவர்களே ஒத்துக்கொள்கின்றனர்" என்று கரூரில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலின் பேசும்போது...

Also Read: கரூர்: `ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்!' - 'ஆன்மிக வழி'யில் போராடும் ரசிகர்கள்

கரூர், சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாங்கல் குப்பிச்சிபாளையம் ஊராட்சியில், நேற்று மக்கள் கிராம சபை கூட்டம், கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. தி.மு.க மக்கள் கிராம சபை கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதோடு, 'அ.தி.மு.க அரசை நிராகரிப்போம்' என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, சிறப்புரையாற்றினார்.

ஸ்டாலின் பேசும்போது...

"செந்தில் பாலாஜி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் மட்டுமல்ல, பல மாங்காய்களை அடித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி நேரடியாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா தான். அந்த தேர்தலிலும் தி.மு.க, அ.தி.மு.க வாக்குவித்தியாசம், வெறும் 1.1 சதவீதம் தான். ஜெயலலிதா இரு முறை நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டபோதும், ஓ.பி.எஸ் தான் முதல்வரானார். ஜெயலலிதா இறந்த பிறகும் அவர் தான் முதல்வரானார். சட்டப்பேரவையில் என்னை பார்த்து சிரித்ததால், அவர் பதவி பிடுங்கப்பட்டது.

சசிகலா சிறைக்கு செல்ல நேர்ந்ததால், அதன்பின் காலில் விழுந்து முதல்வரானவர் பழனிசாமி. அப்போது, 'சீனியர் நான்தான்' என ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து, ஆவியுடன் பேசிய ஓ.பி.எஸ், 'ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும்' என்றார். ஆனால், அவருடன் சமாதானம் பேசிய பழனிசாமி, ஓ.பி.எஸ்ஸூக்கு துணை முதல்வர் பதவி கொடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தார். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 8 முறை சம்மன் அனுப்பியும், ஓ.பி.எஸ் ஆஜராகவில்லை. 3 ஆண்டுகளாகியும் ஒரு தகவலும் இல்லை.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்

4 மாதங்களில் நாம் ஆட்சிக்கு வரப்போகிறோம். அப்போது ஜெயலலிதா மரணத்துக்கு காரணமான குற்றவாளியை மக்கள் முன் நிறுத்தி, அவர்களுக்கு சட்டரீதியான தண்டனையை வாங்கி தருவோம். நான் முதல்வரானதும் முதல் வேலை இதுதான். ஜெயலலிதா மரணத்தை வைத்து, நாங்கள் அரசியல் செய்வதாக சொல்கின்றனர். ஆனால் உண்மையில், ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள், அவர்களுடன் உள்ளவர்கள் தான்.

தூத்துக்குடியில் ஒரு விவசாயி தற்கொலை செய்துக்கொண்டார். 3 வேளாண் சட்டங்களை மற்ற மாநில முதல்வர்கள் எதிர்க்கின்றனர். ஆனால், தான் ஒரு விவசாயி எனக்கூறி கொள்ளும் பழனிசாமி, விவசாயிகளுக்கு எதிராக உள்ள வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார். இன்னும் மீதம் இருப்பது 4 மாதம் தான். 'அதுவரை கொள்ளை அடிப்போம்' என சம்பாதிக்கின்றனர். எடப்பாடி மக்களை பற்றி கவலைப்படுவது இல்லை. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளோம்.

தி.மு.க மக்கள் கிராமசபை கூட்டம்

அப்போதே, '2-வது பட்டியலை விரைவில் அளிப்போம்' என்றோம். அந்த பட்டியலும் தயாராகிவிட்டது. 2 வது பட்டியலில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இடம் பெறுவார். எஃப்.சி என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறார். வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஒளிப்பட்டைகளில் ரூ.2,300 கோடி ஊழல், ஜி.பி.எஸ் கருவிகளில் ரூ.1,000 கோடி ஊழல் என 'எஃப்.சி விஜயபாஸ்கராக' எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளார்.

மேலும், கரூர் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள பகுதியில் இடம், பெட்ரோல் பங்க், ப்ளூமெட்டல் என வாங்கி குவிக்கும் வசூல்ராஜாவாக உள்ளார். 'தேர்தலில் முதல்வர், அமைச்சர்கள் வெற்றி பெற மாட்டார்கள். நாம் வெற்றி பெறாவிட்டால், சிறைக்கு செல்வோம்' என முதல்வர் எடப்பாடி கூறியதாக கேள்விபட்டேன். நாங்கள் இரு முறை வெற்றி பெறவில்லை. அதற்காக, சிறைக்கா சென்றோம்? அவர்கள் ஊழல் செய்வதை அவர்களே ஒத்துக்கொள்கின்றனர். உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஒப்பந்தங்களை தம்பி, உறவினர்களுக்கு வழங்கி, பழனிசாமியை விட அதிகம் சம்பாதிக்கிறார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்

இதுகுறித்து, நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற உள்ளது. அடுத்த 4 மாதங்களில் தி.மு.க ஆட்சி அமைந்ததுததும், அனைத்து ஊழல் புகார்களும் விசாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என பேசினார்.

தொடர்ந்து, மக்கள் கிராம சபை கூட்டத்தில் 11 நபர்கள் வைத்த கோரிக்கைகள் குறித்து பேசிய மு.க.ஸ்டாலின், "என்மீது நம்பிக்கை வையுங்கள். நிச்சயம் உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்" என உறுதியளித்தார்.



source https://www.vikatan.com/news/politics/mkstalin-speech-against-edappadi-palanisamy-and-minsters

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக