Ad

திங்கள், 19 அக்டோபர், 2020

உ.பி: துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை! - பட்டியலினப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

உத்தரபிரதேசத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஹத்ராஸ் நிகழ்வே பல மர்ம முடிச்சுகளுடன் நம் கண் முன் அனல் வீசிக்கொண்டிருக்கும் நிலையில், தற்பொழுது மீண்டும் ஒரு கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை இருவர் துப்பாக்கி முனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியலையை எழுப்பியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்திலுள்ள தேராபூர் கிராமத்தில் வசித்துவந்த பட்டியலினத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை வீட்டில் தனியாக இருக்கும் நேரம் பார்த்து அத்துமீறி உள்ளே நுழைந்து துப்பாக்கி முனையில் ஒருவர்பின் ஒருவராக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதில் ஒருவர் அக்கிராமத்தின் முன்னாள் தலைவர் என்பது தெரியவந்துள்ளது.

பெண் தொழிலதிபர் பாலியல் வன்கொடுமை

அதன் பின்னர், இது குறித்து யாரிடமேனும் சொல்ல முற்பட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடுமென மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரித்த கான்பூர் மாவட்ட கிராமப்புற காவல் நிலைய எஸ்.பி. கேஷவ் குமார், “கடந்த வாரமே, இச்சம்பவமானது அரங்கேறியுள்ளது. ஆனால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தான் இது குறித்த தகவல் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். குற்றவாளிகளை பிடிப்பதற்காக தேராபூர் நகர காவல் நிலைய கட்டுப்பாட்டின் கீழ் மூன்று போலீஸ் சிறப்புப் படை அமைந்து தேடி வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.

பாலியல் வன்கொடுமை

ஹத்ராஸ் பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து உ.பி.யில் மீண்டும் அரங்கேறிய இந்த பாலியல் வன்கொடுமை பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ``மாநிலத்தில் இனி பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்பவர்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை இனி சகித்துக்கொள்ள முடியாது” என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/news/general-news/dalit-women-gang-raped-in-gun-point-in-up

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக