Ad

சனி, 28 ஆகஸ்ட், 2021

பவினா படேல்... பாராலிம்பிக்ஸில் வெள்ளிப்பதக்கம் வென்று நம்பிக்கையை விதைத்திருக்கும் போராளி!

பாராலிம்பிக்ஸ் போட்டிகள் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. டேபிள் டென்னிஸ் C4 பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் இறுதிப்போட்டியில் விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கிறார். இறுதிப்போட்டியில் பவினா சூ யிங்எனும் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்து தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் பவினா.

இருப்பினும் இந்தியாவுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதக்கத்தை பெற்று தந்திருக்கிறார் பவினா.

பவினா படேலுக்கு இந்த பாராலிம்பிக்ஸ் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கவில்லை. இன்று இறுதிப்போட்டியில் பவினாவைத் தோற்கடித்திருக்கும் யிங் சூ- வுடன்தான் முதல் போட்டியிலேயே மோதினார். ஒரு சீன வீரர்/வீராங்கனைக்கு எதிராக முதல் போட்டியில் மோதுவதை யாருமே விரும்பமாட்டார்கள். ஏனெனில் டேபிள் டென்னிஸ் சீனர்கள் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டு. ஒலிம்பிக்ஸில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்தாத விளையாட்டு என ஒன்று இருந்தால்தான் ஆச்சர்யம். ஆனால், டேபிள் டென்னிஸ் அதற்கெல்லாம் ஒரு படி மேல். சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக்ஸிலேயே டேபிள் டென்னிஸில் சீனா மற்ற நாடுகளை எப்படி பதறடித்தது என்பதை பார்த்திருப்போம். சீன வீரர் மா லாங்கிற்கு எதிராக ஒரு போட்டியை அல்ல கேமை வெல்வதையே பல வீரர்களும் வாழ்நாள் கனவாக வைத்திருக்கின்றனர். அப்படிப்பட்ட சீனர்களின் பிடித்தமான விளையாட்டான டேபிள் டென்னிஸில் அவர்களை எதிர்த்து முதல் போட்டி என்பது பயங்கர அழுத்தத்தை உண்டாக்கும். பவினா படேலுக்கும் அப்படியே இருந்தது.

சீன வீராங்கனை யிங் சூ-வுக்கு எதிரான அந்த முதல் போட்டியில் மூன்று கேம்களையுமே தோற்று முதல் போட்டியில் தோல்வியை தழுவியிருந்தார். சாதாரண தோல்வி அல்ல. படுதோல்வி. ஒவ்வொரு கேமிலுமே சீன வீராங்கனையை விட ரொம்பவே குறைவாகத்தான் புள்ளிகளை பெற்றிருந்தார். ஒரு கேமில் எல்லாம் 2-11 என தோற்றிருந்தார்.

பாராலிம்பிக்ஸ் மாதிரியான உலக அரங்கில் முதல் போட்டியை இவ்வளவு மோசமாக தோற்பதென்பது ஒருவரின் தன்னம்பிக்கையை சுக்குநூறாக நொறுக்கிவிடும். மன அழுத்தத்தில் உழல வைக்கும். ஆனால், பவினா மீண்டுவந்தார்.

மறுநாள் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலேயே பிரிட்டன் வீராங்கனைக்கு எதிராக 3-1 என வென்று கம்பேக் கொடுத்தார் பவினா.

பவினா படேல்

இந்த போட்டி அவ்வளவு எளிதாகவெல்லாம் அமைந்துவிடவில்லை. இரண்டு வீராங்கனைகளும் முட்டி மோதினர். மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். சராசரியாக ஆறேழு நிமிடத்தில் முடியும் போட்டிகள் 10 நிமிடத்துக்கு மேல் நீடித்தது. நிறைய லாங் ரேலிக்கள் சென்றது. அந்த போட்டியில் 17-15 என பவினா வென்ற அந்த மூன்றாவது கேமே போதும்... அது எவ்வளவு கடினமான போட்டியாக இருந்ததென்பதை உணர!

பவினா அத்தனை சவால்களையும் கடந்து அந்த போட்டியை வென்றார். அதன்மூலம், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறினார். அங்கே இதற்கு மேல் ஒரு கடுமையான போட்டி இருந்தது. பிரேசில் வீராங்கனைக்கு எதிரான அந்த போட்டியை 3-0 என வென்றார் பவினா. மேலோட்டமாக பார்ப்பதற்கு எளிமையாக வென்றதை போல் தோன்றும். ஆனால், இந்த போட்டி ஒரு போர்க்களம் போல இருந்தது. மூன்றில் இரண்டு கேம்களில் இரண்டு பேருக்கும் இடைப்பட்ட புள்ளி வித்தியாசம் இரண்டு மட்டுமே. நேருக்கு நேர் சரிசமமாக சமர் செய்திருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு தகுதிப்பெற்றார். காலிறுதியில் செர்பிய வீராங்கனை பெரிக் ரேங்கோவிக்கை எதிர்கொண்டார். இவர் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருப்பவர். இந்த போட்டி இன்னும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பவினா இந்த போட்டியைத்தான் மிக எளிமையாக வென்றார். முதல் 3 கேம்களையும் பெரிதாக எந்த சிரமுமின்றி வென்றுவிட்டார்.

அரையிறுதிக்கு முன்னேறியதால் வெண்கல பதக்கம் உறுதியானது. ஆனால், பவினாவுக்கு அதுபோதாது. உடல்பாதிப்போடு அவர் கடந்து வந்த கரடுமுரடான பாதைகள் கொடுத்த வலிக்கு தங்கப்பதக்கம் மட்டுமே சரியான அங்கீகாரமாக இருக்கும்.

அரையிறுதியில் பவினா சீன வீராங்கனை ஷாங் மியாக்கு எதிராக மோதவிருக்கிறார் என அறிவிப்பு வந்தது. இது உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில், முதல் போட்டியிலேயே ஒரு சீன வீராங்கனைக்கு எதிராக பவினா தோற்றிருக்கிறார். இந்நிலையில் மீண்டும் ஒரு சீன வீராங்கனை. அதுவும் அரையிறுதியில். பவினா வாழ்நாளில் இதுவரை சந்தித்திடாத சவால் இது.

முதல் கேமையே தோற்றார். ஆனால், துவண்டுவிடவில்லை. மீண்டு வந்தார். அடுத்த இரண்டு கேம்களையும் வென்றார். நான்காவது கேமை ஷாங் வென்றார். போட்டி 2-2 என சமநிலைக்கு வந்தது. இறுதி கேம். இதில் வெல்பவரே இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும். பவினா தயாரானார்.

34 வருட வலிக்கும் போராட்டத்துக்குமான அங்கீகாரத்துக்காக பேடை சுழற்றினார்.
பவினா படேல்

கடைசி கேமின் முதல் 5 புள்ளிகளையுமே வென்றார். இதன்பிறகு, சீன வீராங்கனை எவ்வளவோ முயன்றும் பவினாவின் வெற்றியை தடுக்க முடியவில்லை.

3-2 என அரையிறுதியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். பாராலிம்பிக்ஸில் தீபா மாலிக் என்கிற ஒரே ஒரு வீராங்கனை மட்டுமே இதற்கு முன் பதக்கம் வென்றிருக்கிறார். அதுவும் கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்கிலேயே வென்றிருந்தார். அவருக்கு பிறகு பதக்கம் வெல்லப்போகும் இரண்டாவது வீராங்கனை எனும் பெருமையை பவினா படேல் பெற்றார்.

பதக்கம் உறுதியான நிலையில் இன்று காலை இறுதிப்போட்டியில் மோதினார். முதல் போட்டியில் தனக்கு படுதோல்வியை பரிசாக அளித்த சூ யிங்கிற்கு எதிராக பவினா களமிறங்கினார். அரையிறுதியில் கொடுத்த அப்செட்டை போல இங்கேயும் ஒரு சர்ப்ரைஸ் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் மூன்று கேம்களையுமே தோற்று தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்திருக்கிறார்.

பவினா தோல்வியடைந்திருந்தாலும் இந்த வெற்றி போற்றப்பட வேண்டும். டேபிள் டென்னிஸ் இந்தியாவில் வளர்ந்து வரும் விளையாட்டு. ஆனால், உலக அரங்கில் ஒட்டு மொத்த இந்தியாவும் உற்றுநோக்கும் ஒரு போட்டியில் இந்திய வீரர்/வீராங்கனைகள் பெரிதாக வென்றதே இல்லை. அந்த ஏக்கத்தை பவினா போக்கியிருக்கிறார். முதல் முதலாக டேபிள் டென்னிஸில் இந்தியாவுக்கு ஒரு மிகப்பெரிய கௌரவமிக்க பதக்கத்தை வென்று கொடுத்திருக்கிறார். அதைவிட முக்கியமானது அவர் ஒரு சீன வீராங்கனையை அரையிறுதியில் வீழ்த்தியது. அந்த ஒரு சம்பவம் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்/வீராங்கனைகளுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

''வீழ்த்தவே முடியாதென கூறப்படும் சீன வீராங்கனையை இந்தியர் ஒருவர் வீழ்த்துவது மிகப்பெரிய விஷயம். எங்களுக்கெல்லாம் அது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது'' என தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் கூறியுள்ளார். வெள்ளிப்பதக்கதை விட மதிப்பு மிக்கது பவினா விதைத்திருக்கும் இந்த நம்பிக்கை!



source https://sports.vikatan.com/olympics/bhavina-patel-won-silver-medal-in-tokyo-2020-paralympics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக