Ad

சனி, 29 மே, 2021

அரசு மருத்துவமனை ஃபிசியோதெரபிஸ்ட் பணிக்கு தகுதி டிகிரியா, டிப்ளோமாவா? - புது சர்ச்சை

கொரோனா தடுப்புப் பணிக்காக அரசு மருத்துவமனைகளில் மதிப்பூதிய அடிப்படையில் டாக்டர், நர்ஸ், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களைத் தேர்வு செய்ய மாவட்ட அளவில் அறிவிப்பு செய்துள்ளனர். இந்நிலையில், `ஃபிசியோதெரபிஸ்ட் பணிக்கு அதற்குரிய படிப்பை முறையாகப் படித்த தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய வேண்டும். தமிழக அரசு அங்கீகரிக்காத பிரிவுகளில் படித்தவர்களை இப்பணிக்கு தேர்வு செய்யக் கூடாது' என்று ஃபிசியோதெரபிஸ்ட் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலை தமிழகத்தில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

Physiotherapy

மருத்துவமனைக்குக் கூடுதலாகத் தேவையான டாக்டர், நர்ஸ், ஃபிசியோதெரபிஸ்ட், ஆக்ஸிஜன் ஆபரேட்டர், உதவியாளர்கள், டேட்டா என்ட்ரி பணியாளர், காவலர் என ஊழியர்களை அந்தந்த மாவட்ட நிர்வாகமே தேர்வு செய்துகொள்ள அரசு உத்தரவிட்டதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்காலிக வேலையாக இருந்தாலும் இதில் சேர கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் ஃபிசியோதெரபிஸ்ட் பணிக்கு அரசு நிர்ணயித்திருக்கும் தகுதி சரியல்ல என்று ஃபிசியோதெரபிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நம்மிடம் பேசிய இந்திய ஃபிசியோதெரபிஸ்ட் சங்கத்தின் தமிழகத் தலைவர் வெ.கிருஷ்ணகுமார், ``ஃபிசியோதெரபி டிகிரி படித்துவிட்டு அரசு மருத்துவமனைப் பணிக்காக நீண்டகாலமாக ஆயிரக்கணக்கான ஃபிசியோதெரபிஸ்ட்கள் காத்திருக்கிறார்கள். தற்போது கொரோனா நோயாளிகளுக்கு ஃபிசியோதெரபிஸ்ட்களின் பங்கு முக்கியமானது. கோவிட் இரண்டாம் அலை தீவிரமாகியுள்ள நிலையில்தான் மதிப்பூதியம் அடிப்படையில் அரசு மருத்துவமனைக்கு டாக்டர் உட்பட பல்வேறு துறைக்கு ஊழியர்களை நியமிக்க அறிவிப்பு செய்துள்ளார்கள்.

அதில், திண்டுக்கல், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை விளம்பரங்களில் ஃபிசியோதெரபிஸ்ட் பணியிடங்கள் மற்றும் வேறு சில பணிகளுக்கு, டிப்ளோமாவை தகுதியாக நிர்ணயித்துள்ளார்கள். ஆனால் `டிப்ளோமா இன் ஃபிசியோதெரபி' என்ற படிப்பு தமிழக அரசால் நடத்தப்படாதபோது, அரசு மருத்துவமனைப் பணியில் இந்தப் படிப்பு, தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டது எப்படி என்பது கேள்விக் குறியாக உள்ளது. 

கோவிட்-19 பெருந்தொற்று மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேர்ந்தெடுக்கப்பட உள்ளவர்களின் கல்வி தகுதி நடைமுறைகளுக்கு முரணாக இருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

கிருஷ்ணகுமார்

பிற மாநிலங்களில் அங்கீகரிக்கப்படாத டிப்ளோமா கல்வி தகுதியை, இங்கு பணிக்கான தகுதியாக வெளியிட்டிருக்கும் குறிப்பிட்ட மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஃபிசியோதெரபிஸ்ட் கல்வியை இளங்கலைப் படிப்பாக முறையாகப் படிக்காமல் டிப்ளோமா படித்தவர்களை நியமித்தால் மக்களின் உயிருக்கு ஆபத்தாக முடியும். கல்வித் தகுதிகளில் சமரசம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. அதனால், அரசு அங்கீகரித்த பிபிடி(BPT - Bachelor of Physiotherapy) முடித்தவர்களை ஃபிசியோதெரபிஸ்ட் பணிக்கான தகுதியாக அறிவித்து, அதற்குண்டான நியாயமான ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். உடல் நலன் என்பது மனிதனின் அடிப்படை உரிமை. அதில் விளையாடுவது ஆபத்தை ஏற்படுத்தும். அரசு இதை பரிசீலிக்க வேண்டும்" என்றார்.

நெருக்கடியான இக்காலகட்டத்தில் மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதில் தகுதி குறைபாடு இருக்கக் கூடாது என்பதில் மருத்துவத் துறை கவனமாக இருக்க வேண்டும்.



source https://www.vikatan.com/news/tamilnadu/controversy-over-govts-recruitment-criteria-for-physiotherapists-for-covid-duties

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக