நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களைப்போல, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் களைகட்டுகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவிருக்கிற நிலையில், 17-ம் தேதிவரை மாலை வரை வேட்பாளர்கள் பிரசாரம் செய்து கொள்ளலாம். இந்தநிலையில், வேட்பாளர்களுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த ஒருசில தடைகள் நீக்கப்பட்டு, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் மேற்கொள்ளலாம் என்றும் வாகன பேரணி, ஊர்வலம் ஆகியவற்றுக்கு இருந்த தடை இனி இல்லை என்றும் அறிவித்தது தேர்தல் ஆணையம்.
கட்சிகளைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியான அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் மிகத் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். அதிலும், எடப்பாடி பழனிசாமி மிகவும் காட்டமாக ஆளும் கட்சியையும் தமிழக முதல்வர் மு,க.ஸ்டாலினையும் விமர்சித்து வருகிறார். பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் ஆளும் கட்சியை டார்க்கெட் செய்து தங்களின் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். தவிர, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டவர்களும் மிகத் தீவிரமாக தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு களத்தில், திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி பதிலடி கொடுத்து வருகின்றனர். காணொலி வாயிலாக, முதல்வரும் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்குக் குறிப்பாக, அதிமுகவின் விமர்சனங்களுக்கு மிகக் கடுமையாகவே பதிலளித்து வருகிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் என இருவரும் களத்தில் நின்று விமர்சன அம்புகளைத் தொடுத்துவரும் நிலையில், காணொலி வாயிலாக ஸ்டாலின் செய்துவரும் பிரசாரம் மக்கள் மத்தியில் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசினோம்,
ப்ரியன் (மூத்த பத்திரிகையாளர்) ;
``ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில்கூட ஸ்டாலின் காணொலி வாயிலாகத்தான் பிரசாரம் செய்தார். ஆனாலும், திமுக மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஆளும் கட்சி என்பதால், கீழ்மட்ட அளவில் நிர்வாகிகள் சுறுசுறுப்பாக வேலை பார்ப்பார்கள். இது திமுகவுக்குச் சாதகமான விஷயமாக இருக்கிறது. பணமும் கையில் இருக்கிறது. ஆளும் கட்சிக்கு அதிகாரிகளும் உதவியாக இருப்பார்கள். அதனால், முதல்வர் களத்துக்குப்போய் பிரசாரம் செய்ய வேண்டிய தேவை எழவில்லை.
இதுவரை முதல்வர்களாக இருந்தவர்கள் உள்ளாட்சித் தேர்தல்களுக்கு எல்லாம் ஒவ்வொரு இடத்துக்கும் சென்று பிரசாரம் செய்ததும் இல்லை. மாவட்டத் தலைநகரங்களில் மட்டும் பேசுவார்கள். நேரடித் தேர்தல் நடந்தால் மாநகராட்சிகளில் மட்டும் பிரசாரம் செய்வார்கள் அவ்வளவுதான். தவிர, பேரிடர் காலத்தில் கூட்டம் சேர்ந்து தானே தவறான முன்னுதாரணமாக இருந்துவிடக் கூடாது என்பதிலும் முதல்வர் கவனமாக இருக்கிறார். காணொலி வாயிலாகக் கூட்டம் நடத்துவதால் திமுகவுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை. முதல்வர் ஒரு இடத்தில் பேசுவதை, 300 இடங்களில் நேரடியாக ஒளிபரப்புச் செய்கிறார்கள். தவிர, முதல்வர் போகவில்லை என்றாலும், அவருக்குப் பதிலாக உதயநிதி, கனிமொழி களத்தில் இறங்கிப் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
ஓபிஎஸ், இபிஎஸ்ஸும்கூட ஹால்களில்தான் கூட்டங்களை நடத்துகிறார்கள். பொதுக்கூட்டமாக நடத்தவில்லை. இருந்தபோதும் அவர்களின் கட்சி நிர்வாகிகளை உற்சாகமாக வைத்துக்கொள்ள அது உதவும். தவிர, திமுக எதிர்ப்பு வாக்குகள் பாஜக, பாமக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் என பல வகைகளில் பிரிவதால் அவர்கள் களத்துக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தமும் உண்டாகியிருக்கிறது. ஆகமொத்தம், ஸ்டாலின் நேரடியாகச் செல்லாததால், அவர்களின் வெற்றி சதவிகிதத்தில் வேண்டுமானால் சிறிய பாதிப்பு ஏற்படலாமே தவிர, பெரிய பின்னடைவு எதுவும் ஏற்படப்போவதில்லை''
தராசு ஸ்யாம் (மூத்த பத்திரிகையாளர்) ;
`` 2006-ல் முதல்வராக இருந்த கலைஞரோ, 2011-ல் இருந்த ஜெயலலிதாவோ சட்டமன்றத் தேர்தலைப்போல, உள்ளாட்சித் தேர்தல்களுக்குப் பிரசாரத்துக்குப் போகவில்லை. உள்ளாட்சித் தேர்தல்களில் உள்ளூர்ப் பிரச்னைகளைத்தான் பிரதிபலிக்க வேண்டும். முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் போன்ற முன்னணித் தலைவர்கள் பிரசாரத்துக்குப் போகும்போது உள்ளாட்சித் தேர்தலின் நோக்கம் மாறுபடுகிறது என்றுதான் நான் நினைக்கிறேன். உதாரணமாக, மேற்கு வங்க கவர்னர் விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் எல்லாம் உள்ளாட்சித் தேர்தலில் விவாதமாக முன்னிறுத்தப்படுகிறது. இதனால், உள்ளூர்களில் முக்கியமாக உள்ள விஷயங்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.
மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற வளர்ந்து வரும் கட்சிகளின் தலைவர்கள் போவதைக்கூட நாம் குறைசொல்ல முடியாது. ஆனால், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி போவது உண்மையிலேயே உள்ளாட்சிகளுக்கான பிரச்னைகளை மடைமாற்றுகிறது. அந்தவகையில் முதல்வர் நேரடியாக பிரசாரத்துக்குப் போகாதது என்பது சரியான முடிவுதான். இதனால் தேர்தல் வெற்றியில் திமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பிரசாரத்துக்குப் போகிறவர்கள்கூட முக்கியமான மாவட்டத் தலைநகரங்களுக்குத்தான் போகிறார்களே தவிர வீடுவீடாகப் போவதில்லை. அதனால், மக்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.''
source https://www.vikatan.com/government-and-politics/politics/ops-eps-in-the-field-stalin-in-the-video-conferencing-advantage-for-dmk-or-aiadmk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக