Ad

வெள்ளி, 25 டிசம்பர், 2020

`கிராமசபை பெயரிலாவது கிராமத்தை பார்க்கட்டும்!’ - தி.மு.க-வை சாடிய பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி ஜீரோ பாயின்ட் பகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்ததினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட தொழில் பிரிவு செயலாளர் சுபாஷ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முன்ன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு வாஜ்பாய் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``விவசாயிகளை அரசியல் கட்சிகள் தூண்டி விட்டு வருகின்றன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டம் இரண்டு மாநிலங்களுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் உள்ளது.போராட்டம் நடத்தும் விவசாய அமைப்புகள் மத்திய அரசின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் அய்யாக்கண்ணு நடத்திய போராட்டத்திற்கு பின்னணியில் தி.மு.க இருந்தது.

அப்போது விவசாயிகளை துறைசார்ந்த அமைச்சர்களிடம் நான் தான் அழைத்து சென்றேன். விவசாயிகளுக்கு தங்களின் உரிமைகளை கேட்க உரிமை உண்டு. அவர்கள் இரட்டிப்பு நன்மை அமையவேண்டும் என்பதுதான் பிரதமரின் கனவு. இதற்காக தான் பிரதமர் மோடி உழைத்துகொண்டிருக்கிறார்.

பொன் ராதாகிருஷ்ணன்

ஐந்து முறை தமிழகத்தில் ஆட்சி நடத்திய தி.மு.க-வுக்கு தமிழகத்தின் நிலப்பரப்பு எவ்வளவு என்று தெரியாமல் குடும்பத்திற்கு 2 ஏக்கர் என்று அறிவித்தது எதன் அடிப்படையில்?. கிராமசபை கூட்டம் என்ற பெயரிலாவது தி.மு.க-வினர் கிராமத்தையும், விவசாயிகளையும் பார்க்கட்டும். தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சிநடத்தி என்ன நலதிட்டங்களை அவர்கள் கொண்டுவந்துள்ளார்கள்.

தி.மு.க-வுக்கு ஒட்டுகேட்க என்ன தகுதி இருக்கிறது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டு அடுத்த வாக்குறுதியை தி.மு.க கொடுக்கட்டும். வாக்குறுதி கொடுக்க அருகதையற்ற கட்சி தி.மு.க. அந்த கட்சி தமிழகத்தில் தற்போது தேய்ந்து கொண்டிருக்கிறது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு நடக்கும் இடைதேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்றால் மட்டுமே திட்டங்களை நிறைவேற்றமுடியும். ஒரு எம்.பி-யால் எல்லாவற்றையும் சாதிக்கமுடியாது. குமரி மாவட்ட வளர்ச்சிக்கான வேலைகாரன் வெற்றி பெற்றால்தான் இந்த பணிகளை செய்து முடிக்கப்படும். அ.தி.மு.க கூட்டணியில்தான் பா.ஜ.க உள்ளது. இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் கிடையாது. பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு 2,500 ரூபாய் வழங்குகிறது. மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் இதுபோன்ற அறிவிப்பு தவறில்லை" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/ponrathakrishnan-attacks-dmk-party-in-kumari-event

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக