Ad

வெள்ளி, 11 டிசம்பர், 2020

பட்டியலினச் சிறுவர்கள் மலம் அள்ளவைக்கப்பட்ட கொடுமை! - பெரம்பலூர் அதிர்ச்சி

பெரம்பலூர் மாவட்டம், சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் நேற்று காலை (11.12.2020) அதேபகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் மலம் கழிக்கச் சென்றிருக்கின்றனர். அப்போது அங்கு வந்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், சிறுவர்கள் கழித்த மலத்தை மட்டுமல்லாமல், அந்த பகுதியில் இருந்த மலம் முழுவதையும் அவர்களின் கைகளாலேயே அப்புறப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது

பெரம்பலூர்

அப்போது அதில் ஒரு சிறுவன் அழுதுகொண்டே அங்கிருந்து தப்பித்து ஓடி, தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியிருக்கிறான். அதையடுத்து ஊர் மக்கள் அங்கு சென்று பார்த்தபோது மற்ற இரு சிறுவர்களும் சாக்குப் பையில் தங்கள் கைகளால் மலத்தை அள்ளிக் கொண்டிருந்தனர்.

அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்தக் காட்சியை தங்களது செல்போனில் படம் எடுத்துக் கொண்டதுடன், அதற்கு காரணமான இளைஞர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

அதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது சாலை மறியலை முடிவுக்குக் கொண்டுவந்தனர். தொடர்ந்து சிறுவர்களை மலம் அள்ள வைத்ததாகக் கூறப்படும் அபினேஷ், செல்வகுமார், சிலம்பரசன் என்ற மூன்று இளைஞர்களையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனை தொடர்புகொண்டபோது, ``சிறுவர்களை மலம் அள்ள வைத்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்படும் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Also Read: `கோயிலுக்கு 12 பூட்டு; பட்டியலின மக்களின் திருமணத்தை நடத்த எதிர்ப்பு!’ - அரியலூரில் அதிர்ச்சி

இதற்கிடையில் சிறுவர்கள் மலம் அள்ளும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருவதுடன், தொடர்புடையவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது.



source https://www.vikatan.com/news/crime/perambalur-police-books-3-over-caste-discrimination

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக