Ad

செவ்வாய், 14 ஜூலை, 2020

`வெடித்துச் சிதறிய உலை; 2 மாதங்களில் 3வது நிகழ்வு!’ - தவிக்கும் விசாகப்பட்டினம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் புறநகர் பகுதியில் உள்ளது பரவாடா. இங்கு இருக்கும் ராம்கி பார்மா நகரில் அமைந்துள்ள விசாகா என்ற ரசாயன ஆலையின் மருந்துப் பிரிவுகளில் நேற்று இரவு 10.30 மணிக்கு கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு உலை வெடித்துச் சிதறியுள்ளது. சம்பவத்தின்போது 4 தொழிலாளர்கள் மட்டுமே பணியிலிருந்துள்ளனர் அவர்கள் அனைவருமே காயமடைந்ததாகவும் அதில் மல்லேஸ்வர் ராவ் என்ற ஒருவர் மட்டும் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

விசாகப்பட்டினம்

தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அடர்த்தியான சிவப்பு நிற தீ ஜுவாலைகள் வானில் பல மீட்டர் தூரத்துக்குப் பரவியுள்ளன. உலை வெடிப்பின் போது ஏற்பட்ட பெரும் சத்தம் அப்பகுதி மக்களை நடுங்க வைத்துள்ளது. தீ விபத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த 12 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் இரவு முழுவதும் போராடி தீயை அணைத்துள்ளனர்.

Also Read: `இயக்கப்படாமல் இருந்த டேங்குகள்; கொடிய ஸ்டைரீன் வாயு!' - விசாகப்பட்டினத்தை உலுக்கிய கொடூர சம்பவம்

இது பற்றிப் பேசியுள்ள விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வினய் சந்த், “ஆலையிலிருந்த ஐந்து உலைகளில் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து அறிந்தவுடன் முழு மாவட்ட நிர்வாகமும் எச்சரிக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன” என்று கூறியுள்ளார்.

விபத்து பற்றிப் பேசியுள்ள பார்மா நகரின் தலைமை நிர்வாக அதிகாரி லால் கிருஷ்ணா, ``அதிர்ஷ்ட வசமாகத் தீ தொழிற்சாலையை விட்டு வெளியில் பரவவில்லை, அதேபோல் அவை மற்ற உலைகளுக்கும் செல்லவில்லை. இதனால் மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்துக்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சாலை விபத்து

விசாகப்பட்டினத்தின் பார்மா நகரிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் உள்ளவர்களும் உலை வெடிக்கும் சத்தத்தைக் கேட்டுள்ளனர். விபத்துக்குப் பிறகு தொழிற்சாலைக்கு அருகில் உள்ளவர்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். சுமார் 12 - 15 முறை வெடிப்பு சத்தத்தைக் கேட்க முடிந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தீப்பிழம்புகள் நீண்ட தூரம் வரை தெரிந்ததாகவும் கடுமையான புகை அப்பகுதி முழுவதையும் சூழ்ந்துகொண்டதாகவும் கூறியுள்ளனர். தொழிற்சாலை வெடிப்பைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஆழ்ந்த உறக்கத்தில் எமனாக வந்த விஷவாயு... விசாகப்பட்டினம் ஆலையின் அலட்சியமே காரணமா?

கடந்த மே மாதம் முதல் விசாகப்பட்டினத்தில் நடக்கும் 3-வது பெரும் தொழிற்சாலை விபத்து இது என போலீஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக மே 7-ம் தேதி தென் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி பாலிமர்ஸ் இந்தியா லிமிடெட் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவினால் சுற்றுப்புறத்தில் இருந்த 100-க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டன, 12 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.

அதேபோல் ஜூன் 30-ம் தேதி பரவாடாவில் இருக்கும் ஜவஹர்லால் நேரு பார்மா நிறுவனத்தில் எரிவாயு கசிந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்து 4 பேர் படுகாயமடைந்தனர். இரண்டு மாதங்களாக விசாகப்பட்டினத்தில் நடக்கும் தொடர் தொழிற்சாலை விபத்து நிகழ்வுகளால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/accident/massive-explosion-in-visakhapatnam-chemical-plant

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக