Ad

வெள்ளி, 11 டிசம்பர், 2020

`பவ்வியப் பன்னீரால் பழனிசாமிக்கு நெருக்கடி'- கருத்துகளால் கழகத்துக்குள் கலகம்!

``பவ்வியமாகப் பன்னீர்செல்வம் செய்யும் பல காரியங்கள் பழனிசாமிக்குப் பதற்றத்தையே உண்டாக்குகின்றன. முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை முன்மொழிந்த பன்னீர்செல்வமே, முதல்வர் நாற்காலியில் அவரை அமரவைப்பதற்குச் சிக்கலை ஏற்படுத்துகிறாரோ என்று எண்ண வேண்டியுள்ளது ” என்கிறார்கள் பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள். ``அதற்குத் தற்போதைய உதாரணமாக, 'ஆண் இரண்டரை ஆண்டுகளும், பெண் இரண்டரை ஆண்டுகளும் நாட்டை ஆளவேண்டும்' என்கிற கருத்தைச் சொல்லி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார்'' என்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு குறித்த நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்தநிகழ்ச்சியில் பங்கேற்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசும்போது, ``பெண்களுக்குத் தமிழக அரசு பல சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எதிர்த்து நிற்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதேபோல் ஆண், பெண் சமத்துவம் போற்றப்படவேண்டும். ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் ஆண் இரண்டரை ஆண்டும் பெண் இரண்டரை ஆண்டும் அரசை ஆண்டால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து. சமத்துவம் வளர அதுவும் வாய்ப்பாக அமையும்” என்று பேசியிருந்தார். இது. தனது கருத்து என்று பன்னீர்செல்வம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தாலும், `தேர்தல் வரும் நேரத்தில் ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு தேவையில்லாமல் எதற்காக இப்படிப் பேசவேண்டும்’ என்று கொதிக்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.

பன்னீரின் பவ்வியம், அவர் பேச்சில், பற்றவைக்கும் கலகத்தில் இல்லையே என்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பாக, வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற சர்ச்சை அந்தக் கட்சிக்குள் பெரிதாக வெடித்தது. பன்னீர் தரப்புக்கும், பழனிசாமி தரப்புக்கும் இடையே இந்த விவகாரத்தினால் பூசல்கள் அதிகரித்தன. அதன்பிறகு கட்சியின் மூத்த நிர்வாகிகள் இருதரப்பையும் சமாதானம் செய்தனர். பன்னீரிடம், ``பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கட்டும். கட்சியை வழிநடத்த பதினோருபேர் கொண்ட குழுவை அமைக்கலாம்” என்று சமாதானம் பேசி பன்னீரைப் பணியவைத்தனர். ஆனால், பன்னீர் - பழனிசாமி இடையே இருந்துவரும் பனிப்போர் இன்னும் ஓய்ந்தப்பாடில்லை என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.

அமித் ஷா சென்னை வந்தபோது அவரை மேடையில் வைத்துக்கொண்டே,``வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி தொடரும்” என்று தடாலடியாக அறிவித்தார் பன்னீர்செல்வம். கட்சி நிர்வாகிகளுக்கே இந்த அறிவிப்பு அதிர்ச்சியைக் கொடுத்தது. அந்த விழாவுக்கு முன்பாகத்தான் பழனிசாமியிடம் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடப்போகிறேன் என்று பன்னீர் சொல்லியிருக்கிறார். பன்னீரின் பேச்சைத் தட்டமுடியாமல் அதற்கு இசைவு கொடுத்துள்ளார் பழனிசாமி. பன்னீர்செல்வம் அறிவிப்புக்கு இதுவரை பா.ஜ.க தரப்பிலிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை.

அதே போல் ரஜினி காந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்தவுடன் எடப்பாடியிடம் இதுகுறித்து கருத்துக்கேட்டனர் செய்தியாளர்கள். எடப்பாடியோ நாசுக்காகம் ``அவர் முதலில் கட்சியைப் பதவி செய்யட்டும். அதன்பிறகு அதற்குக் கருத்துச் சொல்கிறேன்” என்று நழுவிக்கொண்டார். ஆனால், அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள பன்னீர்செல்வம், ``ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அரசியலில் எதுவும் நடக்கலாம், வரும்காலத்தில் சூழ்நிலையைப் பொறுத்து ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது” என்று அறிவித்தார். இது அ.தி.மு.க-வினருக்கு அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தது.

ரஜினி

ரஜினி அரசியல் அறிவிப்பு வெளியிடும் போதே,``ஓர் அரசியல் மாற்றம் கட்டாயம். அது காலத்தின் தேவை. இப்போது இல்லையென்றால்.. எப்போதும் கிடையாது” என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது அ.தி.மு.க தலைமையிலான ஆட்சியே நடக்கிறது. மாற்றம் வேண்டும் என்று ரஜினி குறிப்பிட்டதே இப்போது நடக்கும் ஆட்சியை மாற்றவேண்டும் என்கிற கருத்தில்தான். ஆனால் இதே ஆட்சியில் துணை முதல்வராக உள்ள பன்னீ,ர் ரஜினியின் கருத்தை வரவேற்றதோடு கூட்டணிக்கு ஓ.கே சொல்வது அபத்தமாக இருக்கிறது என்று புலம்புகிறார்கள். இதன்பிறகே, ``பன்னீரின் கருத்து கட்சியின் கருத்தல்ல; அவருடைய சொந்தக் கருத்து”என்று விளக்கம் கொடுத்தார் அமைச்சர் ஜெயக்குமார். கட்சித் தலைமையில் உள்ள ஒருவரின் கருத்தே கட்சியின் கருத்தாக இல்லாமல் சொந்தக்கருத்து என்று சொல்லும் அளவுக்குப் பன்னீர்செல்வம் பேசினாரா? என்கிற கேள்வியும் எழுந்தது. மேலும், பன்னீரின் பேச்சு எடப்பாடியையும் டென்ஷனாக்கியது.

Also Read: `ஓ.கே சொன்ன பன்னீர்... இறங்கிவந்த பழனிசாமி' - முடிவுக்கு வருகிறது அ.தி.மு.க பஞ்சாயத்து!

இந்தநிலையில் தான் ஆண்,பெண் சரிசமமாக நாட்டை ஆளவேண்டும் என்று புதிய கருத்தை கொளுத்திப் போட்டுள்ளார் பன்னீர். இதுவும் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ``அடுத்த ஐந்தாண்டுகளும் அ.தி.மு.க-வே ஆட்சியைப் பிடிக்கும். எடப்பாடியே அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் முதல்வர் என்று நாங்கள் பிரசாரம் செய்துவருகிறோம். இவர் இரண்டரை ஆண்டு ஆண், இரண்டரை ஆண்டு பெண் என்று புதிய கருத்தை முன்வைத்தால் எடப்பாடி இரண்டரை ஆண்டுகள்தான் முதல்வராக இருக்கவேண்டும் என்று நினைக்கிறாரா?'' என்கிறார்கள்.

``ஏற்கெனவே சசிகலா சிறையிலிருந்து வெளிவரும் நிலையில், கட்சிக்குள் என்ன மாதிரியான அதிர்வலைகள் ஏற்படும் என்கிற அச்சம் அனைவரிடமும் உள்ளது. இப்போது பன்னீர் தனியாக புதிய கருத்துகளை வெளியிட்டுவருவது கட்சியின் நலனுக்கு நல்லதல்ல, அதிலும் முதல்வர் வேட்பாளர் குறித்த முடிவுகளை எடுத்தபிறகு முதல்வர் பதவிகுறித்து கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவரே இப்படி கருத்துக் கூறுவது அழகல்ல” என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

ஓ.பி.எஸ். - சசிகலா

பன்னீர் தரப்பிலோ, ``அவர் யாருக்கு எதிராகவும் கருத்துகளைக் கூறவில்லை. தன் மனதில்பட்டதை வெளிப்படையாகச் சொல்கிறார். பெண்கள் குறித்த கூட்டத்தில் பெண்களைச் சமமாகப் பார்க்கவேண்டும் என்பதாலே அப்படி ஒரு கருத்தைச் சொன்னார். எடப்பாடிக்கு எதிராக அவர் செயல்படுகிறார் என்று அவர்கள் நினைத்தால் அதற்குப் பன்னீர் பொறுப்பாக முடியாது” என்கிறார்கள்.

``பன்னீர்-பழனிசாமி இடையேயான மறைமுக யுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஜினி கட்சியைத் தொடங்கியதும் அது இன்னும் வீரியமாகும். ரஜினியை பன்னீர் செல்வம் ஆதரித்துப் பேசியதற்குப் பின்னணியும் அப்போது புரியும்'' என்கிறார்கள் இருவரையும் அறிந்தவர்கள்.

அண்ணா தி.மு.க.வுக்கு உண்மையில் இது சோதனையான காலகட்டம்தான்போல!



source https://www.vikatan.com/government-and-politics/politics/eps-faction-upset-over-opss-remark-says-sources

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக