தேனி நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் சுகந்தி. கடந்த ஆண்டு, டிக்டாக்கில் உள்ள அவரது நண்பர்கள் சிலரிடம் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, சுகந்தியை ஆபாசமாகச் சித்திரித்து வீடியோக்கள், ட்ரோல்கள் வெளியானது. கூடவே, அவரது ஊரான நாகலாபுரத்தையும் சேர்த்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். தன்னை இழிவுபடுத்தியதாக, சிலர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் சுகந்தி.
Also Read: `தனிப்பட்ட பிரச்னைக்காக கிராமத்தின் பெயருக்குக் களங்கம்!' - டிக்டாக் வீடியோவால் கொதிக்கும் பெண்கள்
அதே நேரத்தில், சுகந்தியால், தங்களது கிராமத்துக்கு அவமானம் ஏற்பட்டதாகக் கூறி, நாகலாபுரம் கிராம மக்கள், சுகந்தி, அவரது சகோதரி மீது தேனி பி.சி.பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். டிக்டாக் தடைக்குப் பின்னர், பிரச்னைகள் ஏதும் இல்லாமல் இருந்த சூழலில், தற்போது தங்களது சண்டையை ஆரம்பித்துள்ளனர். அப்படி ஒரு சம்பவம்தான் தேனியில் நடந்துள்ளது.
சில நாள்களுக்கு முன்னர், நாகலாபுரம் சுகந்தி, தேனி பி.சி.பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தஞ்சாவூர் கரந்தைப் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரத்தின் மகள் திவ்யா, தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில், தான் டிக்டாக்கில் வெளியிட்ட பழைய வீடியோக்களை எடுத்து, குரலை மாற்றி ஆபாசமாகப் பேசி, தன்னையும், தனது குடும்ப உறுப்பினர்களையும் இழிவு படுத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.
கார்த்தி என்பவரைத் தான் காதலிப்பதாகக் கூறி, டிக்டாக்கில் வெளியிட்ட வீடியோக்களால் பிரபலமானவர் திவ்யா. இந்நிலையில், நாகலாபுரம் சுகந்தியின் புகாரைப் பெற்றுக்கொண்டு காவல்துறையினர், வழக்கு பதிவு செய்தனர்.
Also Read: தேனி: சுருளி அருவியில் கல்வெட்டை மறைத்து ரூ.5 லட்சத்தைச் சுருட்டிய வனத்துறை அதிகாரி!
புகார் தொடர்பாக திவ்யா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை அறிந்த நாகலாபுரம் சுகந்தி, தனது நண்பர்கள் மூலம் தஞ்சாவூர் திவ்யாவை தேனிக்கு அழைத்துவந்து, தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார். தொடர்ந்து, திவ்யாவிடம் விசாரணை செய்த பி.சி.பட்டி போலீஸார், திவ்யாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீரெங்காபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், நாகலாபுரத்தைச் சேர்ந்த ரமேஷ், தேனி அரப்படிதேவன்பட்டியைச் சேர்ந்த அழகர் ராஜா, மதுரையைச் சேர்ந்த செல்வா ஆகிய நால்வரை வழக்கில் சேர்த்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், தேனி பழைய பேருந்து நிலையம் அருகே தனியாளாக சாலை மறியலில் ஈடுபட்டார் திவ்யா. போலீஸாருக்கு எதிராகக் கண்டன கோஷங்களையும் எழுப்பினார். தகவலறிந்து வந்த தேனி நகர் காவல்துறையினர், திவ்யாவிடம் சமாதானம் பேசி, பி.சி.பட்டி காவல்நிலையத்துக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து, தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள காப்பகத்தில் திவ்யா தங்கவைக்கப்பட்டார்.
Also Read: தேனி: `எவ்வளவு நகையானாலும் விற்றுத் தருவேன்!' - 27 பவுன் நகையுடன் மாயமான நபர் கைது
தேனி பி.சி பட்டி காவல்நிலையம் வந்த திவ்யாவிடம் பேசினோம். ``என்னுடைய காதலன் கார்த்திக்கும், சுகந்திக்கும் தொடர்பு இருப்பதாக, சிலர் கூறினர். அந்த கோபத்தில்தான் சுகந்திக்கு எதிராக நான் வீடியோ போட்டேன். என்னிடம் பேட்டி எடுப்பதாகக் கூறி, தஞ்சாவூருக்கு இருவர் வந்தனர். அவர்களை நம்பிச் சென்றேன். அவர்கள் என்னை கேரளாவின் பாலக்காடு கூட்டிச் சென்று அங்கிருந்து தேனிக்கு அழைத்துவந்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். என்னுடைய காதலன் கார்த்திக்கும், சுகந்திக்கும் தொடர்பு இருப்பதாக கூறியவர்கள்தான் இதற்கு காரணம். எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.
ஏன் சாலை மறியலில் ஈடுபட்டீர்கள் என கேட்டதற்கு, ``வழக்கின் ஆதாரத்துக்காக, என்னுடைய செல்போனை போலீஸார் வாங்கிக் கொண்டனர். செல்போன் இல்லாமல் நான் எப்படி என்னுடைய காதலன் கார்த்தியிடம் பேசுவேன். என்னுடைய ரசிகர்கள், நான் வீடியோ போடவில்லை என்றால் வருத்தப்படுவார்கள். எனக்கு என்னுடைய செல்போன் வேண்டும். செல்போன் இல்லாமல் தேனியை விட்டு போக மாட்டேன்!” என்றார்.
திவ்யாவை ஏன் நீங்கள் அழைத்துவந்தீர்கள் என சுகந்தியிடம் கேட்டோம். ``என் மீது வீண் பழி சொல்ல வேண்டும், என் பெயரைக் கெடுக்க வேண்டும் என்று சிலர் திட்டமிட்டு அனைத்தையும் செய்கின்றனர். அப்படித்தான் திவ்யாவை தூண்டிவிட்டு வீடியோ போட்டனர். மேலும், தஞ்சாவூர் காவல்நிலையத்தில், திவ்யாவை அழைத்துச் செல்வது குறித்து முறைப்படி தகவல் தெரிவித்துவிட்டுதான் தேனி அழைத்துவந்தோம்” என்றார்.
Also Read: திருச்சி: மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்! - சோதனையில் சிக்கிய `டிக்டாக்’ சூர்யா உட்பட 10 பேர்
பி.சி.பட்டி போலீஸாரிடம் கேட்ட போது, ``தனது செல்போனை கேட்டு திவ்யா காவல்நிலையத்திலேயேதான் இருந்தார். வேறு வழி இல்லாமல், செல்போனில் உள்ள வழக்கு தொடர்பான தரவுகளைப் பதிவு செய்துவிட்டு, அவரிடம் செல்போனை கொடுத்து ஊருக்கு அனுப்பிவைத்தோம்” என்றனர்.
இதற்கிடையில், திவ்யாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், வழக்கில் சேர்க்கப்பட்ட நாகலாபுரம் ரமேஷ், சுகந்திக்கு எதிராக தேனி எஸ்.பி அலுவலகத்தில் ஊர் மக்களுடன் புகார் கொடுத்தார். விசாரணையில் உள்ள முக்கிய வழக்குகளுக்கு மத்தியில், இவர்களின் புகார்களைப் பார்த்து கடுப்பாகியுள்ளனர் காவல்துறையினர்.
source https://www.vikatan.com/social-affairs/crime/two-tiktok-fame-women-files-complaint-against-each-other-in-theni-police-station
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக