`பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா, தற்போது உயிரோடு இல்லை. சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே பெங்களூரு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் ஹோட்டலில், காதல் கணவர் ஹேமந்த்துடன் தங்கியிருந்த நடிகை சித்ரா, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். அவரின் மரணம் குறித்து சித்ராவின் தந்தையான ஓய்வுபெற்ற எஸ்.ஐ-காமராஜ், நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் சுதர்சனன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் விசாரித்து வருகிறார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று காலை சித்ராவின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
சித்ராவின் முகத்தின் நகக்கீறல்கள் இருந்ததால், அவரின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திலிருக்கும் சந்தேகங்களுக்கு விடை கிடைத்துவிடும் என போலீஸார் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் சித்ராவுடன் தங்கியிருந்த காதல் கணவர் ஹேமந்த், ஹோட்டல் ஊழியர்கள், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டீம் ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும், ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராப் பதிவுகள் மற்றும் சித்ரா பயன்படுத்திய செல்போன் ஆகியவற்றின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்படுகிறது.
Also Read: மிடில் கிளாஸ் பொண்ணு டு மீடியா ஸ்டார்... சித்ரா ஜெயித்தது எப்படி?
சித்ராவைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டதாக ஹேமந்த் கூறியதையடுத்து ஆர்.டி.ஓ விசாரணையும் நடத்தப்படுகிறது. முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்த சித்ராவின் மரணம், அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சித்ராவின் முகத்தில் எப்படி காயங்கள் ஏற்பட்டது என்று போலீஸாரிடம் கேட்டதற்கு, `மின்விசிறியில் புடவையால் சித்ரா தூக்குப்போட்டிருக்கிறார். அப்போது கழுத்தை புடவை நெரிக்கும்போது அதை அகற்ற சித்ரா ஒருவேளை முயற்சி செய்திருக்கலாம். அந்தச் சமயத்தில் சித்ராவின் நகமே, முகத்தில் பட்டு காயங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த சந்தேகத்துக்கான விடை பிரேத பரிசோதனையில் தெரிந்துவிடும்’ என்றனர்.
இதற்கிடையில் சித்ரா ஷூட்டிங்குக்குச் செல்லும்போதெல்லாம் அவருக்கு உதவியாக அவரின் அம்மா வருவதுண்டு. சமீபகாலமாகத்தான் காதல் கணவர் ஹேமந்த்துடன் சித்ரா ஷூட்டிங்கில் பங்கேற்றிருக்கிறார். இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்திருக்கின்றனர். `ஊரறிய திருமணம் நடைபெறுவதற்கு முன் ஒரே அறையில் தங்குவது சரியல்ல’ என்று சித்ராவின் குடும்பத்தினர் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதன்காரணமாக சித்ராவுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் மனகசப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சமயத்தில்தான் சித்ரா இறப்பதற்கு முன் ஷூட்டிங்கிலும் ஹோட்டல் அறைக்கு காரில் வந்தபோதிலும் டென்ஷனாகவே இருந்திருக்கிறார். மேலும், போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார். யாருடன் சித்ரா போனில் பேசினார் என்ற தகவலை நசரேத்பேட்டை போலீஸார் சேகரித்திருக்கின்றனர்.
Also Read: சந்தேகம், தொடர் சண்டை, கையைக் கிழித்து மிரட்டல்... சித்ரா மரணத்தில் தொடரும் கேள்விகள்?! #Chithra
இறப்பதற்கு முன் சித்ரா, அவரின் அம்மாவுடன் போனில் பேசிய தகவல் தெரியவந்திருக்கிறது. அதனால், சித்ராவின் தாயாருடன் போலீஸார் விசாரிக்க முடிவு செய்திருக்கின்றனர். தற்போதுள்ள சூழலில் சித்ராவின் அம்மாவிடம் போலீஸாரால் முழுமையாக விசாரிக்க முடியவில்லை. சித்ராவின் குடும்பமே சோகத்தில் மூழ்கியிருப்பதால், இறுதிச் சடங்கு முடிந்த பிறகு விசாரிக்க போலீஸார் திட்டமிட்டிருக்கின்றனர்.
சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சித்ராவின் தாயார் விஜயா, ``எனது மகள் தற்கொலை செய்யுமளவுக்குக் கோழையல்ல. எனது மகளை ஹேமந்த் அடித்துக் கொலை செய்திருக்கலாம்’’ என்று குற்றம்சாட்டினார்.
source https://www.vikatan.com/news/crime/police-to-investigate-chitras-mother-and-co-actors
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக