ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் சித்தார்த்துக்கு, ஐடி நிறுவனம் எப்படி இருக்கும் என்பது நன்றாகவே தெரியும். ஆனாலும், அபியை டார்ச்சர் செய்ய வேண்டும் என்பதற்காகவே அடிக்கடி போன் செய்துகொண்டே இருக்கிறான். “நீ பாட்டுக்குப் பொறுப்பில்லாம வேலைக்குப் போயிட்டே. சிலிண்டர்காரர் வந்துட்டார். நல்ல வேளை... நான் போனிலிருந்து குழந்தைக்கு உதவி செஞ்சேன். இப்படித்தான் குழந்தைகளைத் தனியா விட்டுட்டு வருவீயா? எவ்வளவு சுயநலக்காரியா இருக்கே? ஊரில் அப்பாவியா இருந்தேன்னு நினைச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்பதான் எல்லாம் தெரியுது. உன் தலைமையில்தான் ஆபிஸ் நடக்குதா?” என்றெல்லாம் கத்துகிறான்.
“நிறுத்துங்க. நம்ம பிள்ளைகள் என்ன படிக்கிறாங்கன்னுகூட உங்களுக்குத் தெரியாது. மூட் இருந்தா நாலு வார்த்தைப் பேசுவீங்க. இல்லைன்னா எரிஞ்சு விழுவீங்க. சமைச்சு வச்சா சாப்பிட்டுட்டுப் போறதைத் தவிர என்ன செஞ்சீங்க? பொறுப்பைப் பத்தி நீங்க பேசாதீங்க. இன்னிக்கு எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டுதான் வந்திருக்கேன்” என்று அபி வெடிக்கிறாளே என்று பார்த்தால், அப்படி நினைத்துப் பார்க்கிறாளாம். வழக்கம் போலவே அமைதியாகப் பேசிவிட்டு வைக்கிறாள்.
பொதுவாக வேலைக்குப் போனாலும் போகாவிட்டாலும் இந்தியச் சூழலில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் முழுப் பொறுப்பும் பெண்களிடமே விடப்படுகிறது. எந்தத் தவற்றுக்கும் அவள் காரணமாக இல்லாவிட்டாலும் அவள் மீதுதான் குற்றம் சுமத்தும் இந்தச் சமூகம்.
சித்தார்த்தின் வேலை பற்றி கேட்கும் கெளதம், அவனுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்யட்டுமா என்கிறான். அபி மறுக்கிறாள். சக அலுவலக நண்பர்கள் அபியுடன் சகஜமாகப் பழகுகிறார்கள். கறாராகத் தெரிந்தாலும் காயத்ரிதான் அபிக்குச் சரியான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பவராகவும் நம்பிக்கையளிப்பவராகவும் இருக்கிறார்.
வீட்டுக்கு வரும்போது குழந்தைகள் பார்க்கில் அமர்ந்திருக்கிறார்கள். தங்களுக்கு எந்தக் கஷ்டமும் இல்லை, வள்ளி ஆன்ட்டி நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள் என்று மகள் சொல்வதைக் கேட்டு, அபி நிம்மதியடைகிறாள்.
“நீங்க சமர்த்தா இருந்தாலும் இன்னிக்குப் பண்ணின மாதிரி கதவெல்லாம் திறக்கக் கூடாது. அம்மா, அப்பா இருக்கும்போது வாங்கன்னு சொல்லிடணும். நானோ அப்பாவோ உன்னைத் தொட்டாலோ முத்தம் கொடுத்தாலோ உனக்கு கம்ப்ஃபர்ட்டா இருக்கும்தானே? வேற யாராவது அப்படிச் செய்தால் உனக்கு அப்படி இருக்காது இல்லையா? அந்த மாதிரி யாராவது செய்தால், `டோன்ட் டச்’ என்று சொல்லணும். அம்மா, அப்பாகிட்ட அந்த விஷயத்தை உடனே சொல்லிடணும். புரியுதா?” என்று அபி தன் குழந்தைக்கு அவசியமான அட்வைஸைக் கொடுக்கிறாள்.
அடுத்து என்ன?
இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா
source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-review-for-episode-33
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக