தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு கடந்த மாதம் 19-ம் தேதி இரவு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், கொலை செய்தல், கொலைக்கான ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் சிபிஐ அதிகாரிகள் முதல்தகவல் அறிக்கையைத் தயார் செய்துள்ளனர்.
Also Read: சாத்தான்குளம்: வியாபாரிகள் மரணம் முதல் சி.பி.ஐ விசாரணை வரை! - வழக்கு கடந்துவந்த பாதை
சாத்தான்குளம் வழக்கை விசாரிப்பதற்காக சிபிஐ கூடுதல் எஸ்.பி-யான விஜயகுமார் சுக்லா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அனுராக் சின்கா, பூரண்குமார், சப்-இன்ஸ்பெக்டர்களான சுஷில்குமார் வர்மா, சச்சின், ஏட்டு அஜய்குமார் காவலர்கள் சைலேந்திரகுமார், பவன்குமார் திரிபாதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிபிஐ குழுவினர் இன்று உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரைச் சந்தித்து விசாரணை நடத்தினார்கள். ஜெயராஜின் மூத்த மகள் பெர்சி மற்றும் குழந்தைகளுக்கு தட்டம்மை ஏற்பட்டுள்ளதால் ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள்கள் பியூலா, அபிஷா மற்றும் உறவினர்கள் இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது அன்று நடந்த சம்பவங்களை எல்லாம் ஜெயராஜின் மனைவி செல்வராணி மற்றும் உறவினர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டபோது கொடூரமாகத் தாக்கப்பட்டதால் ரத்தப் போக்கு ஏற்பட்டதாகவும் அவர்கள் மாற்றிக்கொள்வதற்காக மூன்று கைலிகளைக் கொடுத்து அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தனர்.
ஏற்கெனவே விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தபோது ரத்தக்கறை படிந்த கைலி மற்றும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட லத்தி, பிவிசி பைப் ஆகியவற்றையும் சாட்சியமாக நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். அவை குறித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.
ஏற்கெனவே சிபிசிஐடி விசாரணை நடத்தியபோது சாத்தான்குளம் பஜார் பகுதியில் உள்ள கடைகளில் இருந்து கிடைத்த சிசிடிவி ஆதாரங்கள் கிடைத்திருந்தன. அத்துடன், இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உள்ள சிசிடிவி ஆதாரங்களும் கிடைத்திருந்தன.
ஏற்கெனவே கிடைத்திருக்கும் சிசிடிவி ஆதாரங்களை வைத்து சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். சிபிஐ விசாரணைக்குப் பின்னர், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலர் சிக்குவார்கள் என்கிற பேச்சு எழுந்துள்ளதால் சாத்தான்குளம் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/general-news/cbi-started-enquiry-in-sathankulam-case-and-gets-new-evidences
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக