Ad

புதன், 11 நவம்பர், 2020

பிரமாண்ட ஏற்பாடுகள்... குறைந்த அளவு விருந்தினர்கள்! எளியமுறையில் நடந்த தினகரன் மகள் நிச்சயதார்த்தம்

`டி.டி.வி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும்,தஞ்சாவூரில் பாரம்பர்யமிக்க குடும்பங்களில் ஒன்றான காங்கிரஸ் கட்சி பிரமுகர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுக்கும் நேற்று இரவு கும்பகோணம் சுவாமிமலையில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிச்சயதார்த்த விழாவில்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும், காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவரான கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாதன் துளசி அய்யாவுக்கும் திருமணம் செய்வதற்காக இருதரப்பிலும் பேசி முடிவு செய்திருந்தனர்.

பொட்டு பூ வைத்தல், மாப்பிள்ளை வீடு பார்ப்பது என வழக்கமான நடைமுறைகள் சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது நிச்சயார்த்தம் நடத்துவதற்கான தேதி குறித்து தினகரன் மற்றும் கிருஷ்ணசாமி வாண்டையார் தரப்பில் பேசப்பட்டது.

தினகரன் தம்பி பாஸ்கரன்

அப்போது தினகரன், `எங்க குடும்பத்திற்கு எல்லாமே சின்னம்மா சசிகலா தான் அவர் சிறையிலிருந்து வெளியே வருவதற்கான வாய்ப்புகள் கைகூடி வருகின்றன. சசிகலா வந்தபிறகு, அவர் முன்னிலையில் நிச்சயதார்த்தை வைத்துக் கொள்ளலாம்' எனச் சொல்ல மாப்பிள்ளை வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

ஆனால், சசிகலா விடுதலை பல காரணங்களால் தடைபட்டு தள்ளிபோய்க் கொண்டேயிருந்தது. குறிப்பாக ஜனவரி மாதம் 27-ம் தேதிதான் சசிகலா வெளியே வருவார் என்ற தகவல்கள் வெளியானது. இதையடுத்து தினகரன், `எளிய முறையில் நிச்சயதார்த்தை விழாவை நடத்திவிடலாம், கல்யாணத்தை சசிகலா தலைமையில் பிரமாண்டமாக நடத்தலாம்’ என முடிவு செய்தார்.

மகள் நிச்சயதார்த்த விழாவில் தினகரன் தனது மனைவியுடன்

அதன்படி, நவம்பர் 11-ம் தேதி நிச்சயதார்த்தம் நடத்த முடிவு செய்ததுடன், குறைந்த அழைப்பிதழ்கள் மட்டுமே அச்சடித்து மிகவும் நெருங்கிய உறவுகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. சுவாமிமலை அருகே உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் எளிய முறையில் அதே நேரத்தில் பிரமாண்டமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

இதற்காக ரிசார்டில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு மின்னொளியில் அலங்கார நுழைவுவாயில் அமைக்கப்பட்டது. மயில் போன்ற வடிவில் விழா மேடை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தினகரன் தம்பி பாஸ்கரன், இளவரசி மருமகன் டாக்டர் சிவக்குமார், அ.ம.மு.கவின் பொருளாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ரெங்கசாமி என மொத்தமே 60 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். சசிகலா தம்பி திவகாரன் இதில் கலந்துகொள்ளவில்லை.

Also Read: சசிகலா தலைமையில் திருமணம்... மகள் நிச்சயதார்த்த விழா ஏற்பாட்டில் தினகரன்!

மாப்பிள்ளைவீட்டார் பிரமாண்ட முறையில் சீர்வரிசைத் தட்டு எடுத்து வந்தனர். தினகரன் மனைவி அனுராதா ஓடோடிச் சென்று அவர்களை வரவேற்றார். கிருஷ்ணசாமி வாண்டையார், தங்கள் குடும்பத்தினரை தினகரனிம் அறிமுகம் செய்து வைத்தார்.

நிச்சயதார்த்த விழா என்றால் பென்ணையும், மாப்பிள்ளையையும் ஒரே மேடையில் உட்கார வைத்து உறவினர்கள் அவர்களுக்கு பொட்டு வைத்து வாழ்த்துவது தற்போதைய வழக்கம். ஆனால் பழைய வழக்கப்படியும்,பாரம்பர்ய முறைப்படியும் பெண் மட்டுமே மேடையில் அமரவைக்கப்பட்டார். ஜெயஹரிணிக்கு உறவினர்கள் சந்தனம், பொட்டு வைத்து வாழ்த்தினர்.

சசிகலா

மேடைக்கு எதிரே மாப்பிள்ளைக்காக வைக்கப்பட்டிருந்த சேரில் அமர்ந்து அனைத்தையும் மாப்பிள்ளை ராமநாதன் துளசி அய்யா பார்த்து கொண்டிருந்தார். அப்போது வயதான பெண் ஒருவர் வீல்சேரில் நிகழ்ச்சி நடைபெற்ற ஹாலுக்கு வந்தார். அவரை பார்த்ததும் அனைவரும் மரியாதையுடன் எழுந்து நின்றனர்.

ஜெயஹரிணி ஓடிச் சென்று அவர் கன்னத்தில் முத்தமிட்டதும் அந்த பெண்மணி தலையில் கைவைத்து ஆசி வழங்கினார். சடங்குகள் முடிந்ததும் டாக்டர் சிவக்குமாரிடம் நீண்ட நேரம் பெண்ணும், மாப்பிள்ளையும் பேசி கொண்டிருந்தனர். மகளுக்கு நல்லபடியாக நிச்சயதர்த்த நடந்து முடிந்த பூரிப்பு தினகரன் அனுராதா முகத்தில் தெரிந்தது. அ.ம.மு.கவின் தஞ்சை மாநகர செயலாளரான ராஜேஸ்வரன் தினகரன் தர்ப்பில் அனைத்து வேலைகளையும் ஓடியாடி செய்து கொண்டிருந்தார்.

விழாவில்

வரும் தை மாசத்தில் திருமணத்தை முடிவு செய்தனர். ஆனால், திருமண தேதியை மட்டும் உறுதிப்படுத்தவில்லை. சசிகலா விடுதலை குறித்து உறுதியான தகவல் வெளியான பிறகே திருமண தேதி குறிக்கப்படும் என தெரிகிறது.

இது குறித்து விபரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம். ``தஞ்சாவூரில் பாரம்பர்யமிக்க குடும்பம் என அனைவராலும் அறியப்பட்டது பூண்டி துளசி அய்யா வாண்டையார் குடும்பம். இவரது மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர். தற்போது தெற்கு மாவட்டத் தலைவராகவும் உள்ளார்.

Also Read: `கழகங்களை பஞ்சராக்கும் தினகரன், சீமான், கமல் கட்சிகள்!’ - தேர்தல் நம்பர் கேம் #TNElection2021

இவருடைய மகன் ராமநாதன் துளசி அய்யா தற்போது இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இந்நிலையில் தனது ஒரே செல்லமகள் ஜெயஹரிணியை பெண் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் அனுகினர்.

இதனை தினகரன் சசிகலாவிற்கு தெரியப்படுத்தினார்.துளசி அய்யா வாண்டையார் மீது பெரும் மதிப்பு கொண்ட சசிகலா, கல்வி சேவை புரிந்த பெரியவர் அவருக்கென தனி நற்பெயரே உண்டு அவர்களிடத்தில் சம்மதம் வைத்து கொள்வது நமக்கு பெருமை நல்ல இடமும் கூட என கூறியதுடன் இந்த சம்மதத்திற்கு டபுள் ஓகே சொன்னார். அதன் பிறகே இதற்கான பணிகள் வேகமெடுத்தன.

தினகரன் மகள் நிச்சயதார்த்த விழாவில்

விழாவிற்கு வந்திருந்த உறவினர்கள் இந்த இடத்துல சசிகலா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும் அவர் வந்து விடுவார் என ரொம்பவே எதிர்பார்த்தோம் ஆனால் நடக்காமல் போய்விட்டது என அவர் நினைவில் மூழ்கினர். அதே நேரத்தில் துளசி அய்யா வாண்டையாருக்கு இந்த சம்மந்தத்தில் உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது. பேசி முடிப்பதற்காக பாண்டிச்சேரியில் உள்ள தினகரன் பண்ணை வீட்டிற்கு மாப்பிள்ளை வீட்டார் சென்றபோதும் துளசி அய்யா வாண்டையார் செல்லவில்லை.

அப்போது நிச்சயதார்த்த விழாவில் துளசி அய்யா வாண்டையார் கலந்து கொள்வார் என கூறப்பட்டது.ஆனால் தற்போதும் அவர் கலந்து கொள்ளாததது பலரது கேள்வியாக இருந்ததுடன் பலரும் இதை பற்றியே பேசியபடியும் இருந்தனர்.

டி.டி.வி தினகரன்

கிருஷ்ணசாமி வாண்டையார் தரப்பில், `மாப்பிள்ளையான பேரன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர் துளசி அய்யா வாண்டையார், வேறு சில காரணங்களால் அவரால் நிச்சயதார்த்தில் கலந்து கொள்ள முடியவில்லை. நிச்சயம் திருமணத்தில் கலந்து கொள்வார்.துளசி அய்யா வாண்டையார் மற்றும் சசிகலா தலைமையில் பிரமாண்டமாக இந்த பெரிய இடத்து கல்யாணம் நடைபெறும்’ என தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/news/politics/ttv-dinakarans-daughter-engagement-held-in-kumbakonam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக