Ad

திங்கள், 30 நவம்பர், 2020

தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் ஏற்படக் காரணம் என்ன? #Covid-19

உலகமெங்கும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை குறித்த அச்சத்தில் இருக்கும்போது முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டறியும் முயற்சிகளில் தீவிரமாக இயங்கி வருகின்றன.

vaccine trial in South Africa

அவற்றுள் முக்கியமான தடுப்பூசிகளாக,

ஆஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு,

அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள ஆர்என்ஏ தடுப்பூசி

ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள BNT 162b2,

ரஷ்யாவின் கமேலயா நிறுவனம் தயாரித்துள்ள ஸ்புட்னிக்

இந்தியாவின் பாரத் பயோடெக் தயாரித்துள்ள கோவாக்ஸின் மற்றும் நோவாவாக்ஸ் ஆகியவை முன்னணியில் உள்ளன.

ஒவ்வொரு தடுப்பூசியும் மூன்று படிநிலைகளைக் கடந்து அவற்றின் திறனையும் பாதுகாப்பைும் உறுதிசெய்த பின்னரே நம்மை வந்தடையும். தடுப்பூசியின் மனித சோதனையின்போதே பக்கவிளைவுகள் ஏற்படுவது பற்றிக் கேள்விப்படுகிறோம்.

இங்கிலாந்தில் தன்னார்வலராக கோவிஷீல்டு தடுப்பு மருந்தைச் செலுத்திக்கொண்ட நபருக்கு மூட்டு பலவீனம் மற்றும் உணர்ச்சி பாதிப்பு ஆகிய நரம்பு சம்பந்தப்பட்ட பக்கவிளைவுகள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வந்த பரிசோதனைகள் நிறுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

தற்போது பரிசோதனைக்காகத் தடுப்பூசி செலுத்தப்பட்ட சென்னையைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவருக்கு நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்பட்டதாக வழக்கு தொடுத்துள்ளார். மேலும் அதற்காக ரூ.5 கோடி நிவாரணத் தொகையும் கோரியிருக்கிறார்.

ஒருபுறம் தடுப்பு மருந்து எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் உலகமே மூழ்கியிருக்கிறது. மற்றொரு புறம் தடுப்பு மருந்தின் பக்கவிளைவுகள் பற்றிய பயமும் ஆட்கொண்டிருக்கிறது.

இந்தத் தருணத்தில்தான் தடுப்பூசிகளால் ஏற்படும் சிறிய பக்கவிளைவுகள் குறித்தும் அவற்றைச் சரி செய்வது குறித்தும் பேச வேண்டும். ஒருதொற்றுநோயைத் தடுக்கும் பொருட்டு ஊசியாகவோ வாய் வழியோ வழங்கப்படும் மருந்துக்குத் தடுப்பு மருந்து அல்லது தடுப்பூசி என்று பெயர்.

ஒரு வினையை உண்டாக்குமாறு உருவாக்கப்பட்ட ஒவ்வொரு மருந்துக்கும் சிறிய அளவில் பக்கவிளைவுகள் இருக்கும். இந்த விதிக்கு தடுப்பூசிகளும் விதிவிலக்கன்று.

இருப்பினும் தடுப்பூசிகள் கொண்டு செய்யப்படும் ஆய்வுகள் அனைத்திலும் அவற்றின் பாதுகாப்பு முழு உறுதியுடன் பரிசோதிக்கப்படும்.

Headache

எனினும் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்ட பின் ஒருவருக்கு நேரும் ஒவ்வாமை `தடுப்பூசிக்குப் பின் ஏற்படும் ஒவ்வாமை நிகழ்வு' AEFI - Adverse Event Following Immunisation என்று சொல்லப்படும். இவை சாதாரண (Minor or mild), தீவிர (severe), அதி தீவிர (serious) பக்கவிளைவுகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.

இதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் கோவிட் நோய்க்கு எதிராகக் கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசிகள் அனைத்திலும் ஏற்படும் பக்கவிளைவுகள் சாதாரண அளவிலேயே இருக்கின்றன.

டாக்டர் ஃபரூக் அப்துல்லா

தடுப்பூசிகள் மூலம் ஏற்படும் பக்கவிளைவுகள் ஐந்து விதங்களாக நடக்கும்.

1. தடுப்பூசியி்ல் உள்ள மருந்துக்கு எதிராக ஏற்படும் ஒவ்வாமை.

2. தடுப்பூசியைத் தயாரிக்கும் முறைகளில் அதன் தரத்தில் ஏற்படும் குறைவால் உண்டாகும் ஒவ்வாமைகள்.

3. தடுப்பூசியை வழங்கும் முறைகளில் ஏற்படும் குறைபாட்டால் ஏற்படும் ஒவ்வாமை.

4. தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் பதற்றம்.

5. தடுப்பூசிக்கு சம்பந்தமே இல்லாமல் ஒத்த நிகழ்வாக ஏற்படும் ஒவ்வாமை (Coincidence).

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, பக்கவிளைவு ஏற்பட்ட பலருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்ட சில மணிநேரத்துக்கு குளிருடன் காய்ச்சல் இருந்ததாக மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு சாதாரண பாராசிட்டமால் மாத்திரை எடுத்தாலே போதுமானதாக இருந்திருக்கிறது. அடுத்த பக்கவிளைவாகத் தலைவலி ஏற்பட்டிருக்கிறது. இதற்கும் பாராசிட்டமால் மாத்திரையே போதுமானது.

COVID-19 vaccine trial

Also Read: கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்?

சிலருக்கு குமட்டல் வாந்தி வருவது, தசைவலி மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டிருக்கிறது. தடுப்பூசி ஆய்வில் பங்குபெற்ற எவருக்கும் நேரடியாகத் தடுப்பூசியின் காரணமாக மரணமோ, தீவிரமான மற்றும் அதிதீவிர பக்கவிளைவுகளோ எதுவும் நிகழவில்லை என்பது நமக்கு ஆறுதல் தரக்கூடிய விஷயம்.

இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனம் நிச்சயம் இந்திய மக்களுக்கான பாதுகாப்பான மற்றும் திறன் வாய்ந்த தடுப்பூசியை உறுதி செய்யும் என்று நம்பலாம். 2021-ன் ஆரம்ப மாதங்களில் நம்மிடையே வர இருக்கும் தடுப்பூசிகளில் சிறந்த ஒன்றை அரசு ஏழை எளியோர் அனைவரும் பயன்பெறும் வகையில் வழங்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-explains-what-could-be-the-reasons-for-side-effects-of-vaccines

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக