புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கரடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (40). இவர் கடந்த 2019-ல் வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் திருநாவுக்கரசுவைக் கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்ததால், திருநாவுக்கரசு வெளியே வந்தார்.
இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் முடிக்கப்பட்டு பிப்ரவரி 4-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட இருந்தது. இதற்காக நீதிமன்றத்துக்குத் திருநாவுக்கரசு வந்திருந்தார். தீர்ப்புக் கொடுப்பதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு திருநாவுக்கரசு நீதிமன்றத்திலிருந்து திடீரென மாயமானார். நீதிமன்றம் முழுவதும் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. அவர் ஆஜராகாததால் வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. மாயமான திருநாவுக்கரசை போலீஸார் தேடி வந்தனர். இந்தநிலையில், அன்னவாசல் அருகே பரம்பூர் டாஸ்மாக் கடையில் திருநாவுக்கரசு இறந்து கிடப்பதாகக் கிடப்பதாக அன்னவாசல் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், `கடந்த சில தினங்களாகவே தனக்குக் கண்டிப்பாக ஆயுள் சிறைத் தண்டனை கொடுத்துவிடுவார்கள் என்ற பயத்திலேயே திருநாவுக்கரசு இருந்துள்ளார். தீர்ப்புக்குப் பயந்துதான் நீதிமன்றத்திலிருந்து மாயமாகியிருக்கிறார். எப்படியும், தண்டனை கிடைத்துவிடும். அதற்குத் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று எண்ணிய திருநாவுக்கரசு மதுவில் விஷத்தைக் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் முழு விபரமும் தெரியவரும். இதுகுறித்து போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
`தமிழகத்தையே உலுக்கிய புதுக்கோட்டை 7 வயது சிறுமி பாலியல் தொல்லை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் செய்யப்பட்ட 6 மாதங்களுக்குள் குற்றவாளிக்கு மூன்று மரண தண்டனைகளைப் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் கொடுத்திருந்தது. தொடர்ந்து, அதிரடித் தீர்ப்புகளையும் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் கொடுத்து வருகிறது. இதுபோன்ற தீர்ப்புகள் தொடர்ந்து குற்றங்களைக் குறைக்கும்’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
source https://www.vikatan.com/news/crime/pudukottai-man-arrested-in-pocso-commits-suicide
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக