தென்னிந்திய அளவில் மலைக்காய்கறி உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் நீலகிரி மாவட்டத்தில் பல ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், பீன்ஸ் முட்டைக்கோஸ், டர்னிப், பட்டாணி, சைனீஸ் கேபேஜ் போன்ற இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் மலைக் காய்கறிகள் விளைவிக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதில் கேரட் மிக முக்கிய பயிராக உள்ளது. ஆரஞ்சு கோல்டு எனப்படும் இந்த கேரட் பொருளாதாரத்தை நம்பி சுமார் 50 ஆயிரம் பேர் உள்ளனர்.
விளை நிலங்களில் அறுவடை செய்யப்படும் கேரட்டுகள் அங்கேயே சுத்திகரிக்கப்பட்டு சந்தைகளுக்கு அனுப்பபட்டு வந்தன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கேரட் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஊட்டி, கேத்தி பாலாடா, முத்தொரை ஆகிய பகுதிகளில் அதிகளவு இயந்திரங்கள் நிறுப்பட்டன. அனைத்து விவசாயிகளும் தாங்கள் விளைவித்த கேரட்டை இயந்திரங்களில் மட்டுமே சுத்திகரித்து தரம் பிரித்து சந்தைக்கு அனுப்பி வந்தனர்.
பெரும்பாலான இயந்திரங்கள் ஆறு மற்றும் ஓடைகளின் கரையில் அமைக்கப்பட்டுள்ளதால் அதிகளவு நீரை பயன்டுத்தி வந்தன. மேலும் கழிவு நீரை நேரடியாக ஓடையில் கலக்கச்செய்தன. இதனால் நீர் நிலைகள் மாசடைவதோடு அணைகளில் சேறு நிரம்பின.
கேரட் சுத்திகரிப்பு இயந்திரங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீரை மறு சுழற்சி செயத பின்னரே வெளியேற்ற வேண்டும் என பசுமைத்தீரப்பாயம் உத்தரவிட்டது. அதற்கான காலக்கெடுவையும் அளித்தது. ஆனால் பல உரிமையாளர் இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கழிவு நீரை ஓடையில் நேரடியாக கலக்கச்செய்தனர். இதனால் அதிகாரிகள் இயந்திரங்களை மூடும் நடவடிக்கையில் இறங்கினர்.
இதனைக் கண்டித்து கேரட் இயந்திர உரிமையாளர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இயந்திரங்களை இயக்க மறுத்து அறிவிப்பை வெளியிட்டனர்.
இதனால் விளைவித்த கேரட்டை அறுவடை செய்ய முடியாமல் வீணாகும் விவசாயிகள் கலங்கிய நிலையில், தொழிலாளர்களைக் கொண்டு பழைய முறையில் விளை நிலங்களில் சுத்திகரிப்பு செய்து சந்தைக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஊட்டி ஜனார்த்தனன், ``மலைக்காய்கறி உற்பத்தி அதிகரித்தாலும் அதற்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் புல்வெளிகளை இழந்துள்ளோம். அதேபோல் அளவுக்கு அதிகமாக களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி உள்ளிட்ட ரசாயனங்களை பயன்படுத்துவதால் காய்கறிகளில் நச்சுத்தன்மை அதிகரித்திருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தற்போது கேரட் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் நீராதாரங்களையும் பாழாக்குவது ஏற்புடையதல்ல. எனவே உரிமையாளர்கள் அரசின் வழிமுறைகளை பின்பற்றி சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.
கேத்தி பாலாடா பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், ``கேரட் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வருவதற்கு முன் எங்களின் விளை நிலத்திலேயே கழுவி தரம் பிரித்து அனுப்பி வந்தோம். கடந்த சில ஆண்டுகளாக இயந்திரங்கள் மூலமே கழுவி வந்தோம். ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் வழங்குகிறோம்.
வேலை நிறுத்தம் காரணமாக பழைய முறையில் தோட்டத்திலேயே தார்பாலின்கள் அமைத்து சுத்தம் செய்து அனுப்புகிறோம்" என்றார்.
source https://www.vikatan.com/news/agriculture/nilgiri-carrot-farmers-using-old-method-for-cleaning-carrots
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக