கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்களிடையே பரவிவரும் புது விதமான பிறந்தநாள் கொண்டாட்டம் பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சாதாரணமாக பிறந்தநாள் என்றால் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு புத்தாடைகள் அணிந்து பெற்றோர்களிடமும், பெரியோர்களிடமும் ஆசி வாங்குவார்கள். அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் வழிபாட்டுத்தலங்களுக்குச் சென்று வழிபாடுகள் நடத்தி குடும்பத்தோடும் நண்பர்களோடும் சந்தோஷமாக பிறந்தநாள் கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் கேக் வெட்டி குடும்பத்தோடு சாப்பிட்டு சந்தோஷம் அடைவார்கள்.
சிலர் வசதியைப் பொறுத்து நண்பர்களை ஓட்டல்களுக்கு அழைத்துச் சென்று விருந்து வைப்பார்கள். ஆனால் தமிழகத்தில் சில இடங்களில் ரெளடிகள், கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டுவதுபோன்ற நிகழ்வுகள் அரங்கேறின. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் புதுவிதமான, அதிலும் ஆபத்தை விளைவிக்கும் விதமாக வாலிபர்கள் கூத்தடிக்கும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அரங்கேறி வருகின்றன. அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிடுவதால் இளைஞர்கள் மத்தியில் இதுபோன்ற ஆபத்தான பிறந்தநாள் கொண்டாட்ட கலாசாரம் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தையை அடுத்த பரம்பை பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவரை மின் கம்பத்தில் கயிறால் கட்டி வைத்து மாட்டுச் சாணியை தண்ணீரில் கலக்கி தலையில் ஊற்றியும், முட்டை, தக்காளி ஆகியவற்றை தலையில் வீசி உடைத்தும் பிறந்தநாள் கொண்டாடினர். அதை வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பி பரபரப்பை ஏற்படுத்தினர். இதுபோன்று நாகர்கோவில் பகுதியிலும் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம் கடந்த மாதம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று களியக்காவிளை அருகே உள்ள அதங்கோடு கொக்கிடிச்சி விளை பகுதியில் ஒரு ரப்பர் தோட்டத்தில் லாகின் என்ற இளைஞரின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்திருக்கிறது. பிறந்தநாள் கொண்டாடிய வாலிபரை ரப்பர் மரத்தில் கட்டிவைத்த நண்பர்கள், அவரது தலையில் மாட்டுச் சாணக் கரைசலை ஊற்றினர். பின்னர் சாம்பல் உட்பட பல்வேறு பொருட்களை அவர் தலை, முகம் போன்ற பகுதிகளில் அள்ளி வீசினர். சிறிது நேரத்துக்கு பிறகு அவரது கைகளை அவிழ்த்து ஓட விட்டு, விரட்டி விரட்டி சாம்பலை வீசுகிறார்கள். ரப்பர் மரத் தோட்டத்தில் வாலிபர்கள் அடித்த கூத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.
கொரோனா ஊரடங்கு சமயத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் கும்பலாக மது போதையில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் எல்லை மீறி ஆட்டம் போட்டுள்ளார்கள் அந்த வாலிபர்கள். பின்னர் அதை வீடியோவாக எடுத்து பின்னணி பாடல் இசையுடன் சேர்த்து வாட்ஸ் அப் குருப்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாம்பலை முகத்தில் வீசுவதால், வாலிபர்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற அசம்பாவிதங்கள் நேரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் இதுபோன்ற கொண்டாட்டங்கள் இளைஞர்கள் மத்தியில் பரவாமல் இருக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
source https://www.vikatan.com/news/tamilnadu/kanyakumari-youths-birthday-celebration-shocks-parents
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக