Ad

சனி, 22 ஆகஸ்ட், 2020

புதுக்கோட்டை: ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோகும் அதிகாரிகள்! -போஸ்டர் ஒட்ட பசைகேட்கும் எழுத்தாளர்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் துரைகுணா. சமூக ஆர்வலரான இவர் கடந்த 17.02.2020-ல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புக் கோட்டப்பொறியாளர் உட்பட அரசு அலுவலர்களுக்குப் புகார் மனுக்களை அனுப்பியிருக்கிறார். அதில், கறம்பக்குடி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் தனி நபர்களால் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடங்களை, உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அகற்றி வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்களின் சிரமத்தைப் போக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்தநிலையில்தான், மனு அனுப்பிப் பல மாதங்கள் ஆகியும் அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தற்போது ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணை போகும் அதிகாரிகள் குறித்து நோட்டீஸ் ஒட்ட அனுமதி கேட்டு ஆலங்குடி டி.எஸ்.பி-க்கு நூதன மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில், ``புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில், தனி நபர்கள் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள, கட்டடங்களை அகற்றி விபத்து இல்லாத நெடுஞ்சாலையாகவும், வாகன ஒட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறுகள் இல்லாத வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நெடுஞ்சாலைத்துறைக் கோட்டப்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் ஆகியோருக்குக் கடந்த 17.02.2020 அன்று புகார் மனு கொடுத்தும், இதுவரையிலும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. நடவடிக்கை சம்மந்தமான எந்த பதிலும் இல்லை.

எனவே, அரசு பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய நெடுஞ்சாலைகளைத் தனி நபர்கள் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டிக்கொள்ள மேற்கண்ட அரசு அலுவலர்கள் வழிவகை செய்து கொடுப்பதுடன்,ஆக்கிரமிப்பாளர்களுக்குப் பாதுகாப்பு அறனாகவும் இருந்து வருகிறார்கள். ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாணைகள், வழிகாட்டுதல் நெறிகளையும் மதிக்காமல்,அரசின் சட்டங்களையும், ஆணைகளையும் துஷ்பிரயோகம் செய்து மக்கள் விரோதப் போக்கைக் கையாண்டு வருகிறார்கள்.

நூதன மனு

மேற்கண்ட அலுவலர்களைக் கண்டித்தும்,அவர்கள் செயல்களை மக்கள் அறியும் வண்ணம் 07.09.2020 முதல் ஆலங்குடி சரக பகுதிகளில் சுவரொட்டி ஒட்டி எனது ஜனநாயகக் கடமை ஆற்ற எனக்கு அனுமதியும், பாதுகாப்பும், நோட்டீஸ் ஒட்ட பசையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசு அலுவலர்களைக் கண்டித்து, அவர்கள் குறித்து போஸ்டர் ஒட்ட பசைகேட்டு சமூக ஆர்வலர் நூதன மனு அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/tamilnadu/pudukottai-writer-files-complaint-over-encroachment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக