தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு பலரும் அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நடைபெற்றது. எனவே, இதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்வதற்கான அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில், நிறுவனம் ஒன்று மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், "ஆன்லைன் விளையாட்டுகளை 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் வழங்கக் கூடாது என்று நிபந்தனை இருக்கிறது. மேலும் ஆன்லைன் விளையாட்டுகளின் தீமைகள் குறித்த எச்சரிக்கை அம்சங்களோடுதான் விளையாட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், தமிழக அரசு ஆன்லைன் ரம்மி மற்றும் போக்கர் போன்ற திறமையான விளையாட்டுகளைச் சூதாட்டம் எனக் கூறி தடை செய்ததை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்து உத்தரவிட்டது.
தற்போது மீண்டும் ரம்மி மற்றும் போக்கர் உள்ளிட்ட விளையாட்டுகளைத் தடை செய்யும் அவசர சட்டத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. மற்ற மாநிலங்களின் சட்டங்கள் மற்றும் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளைக் கருத்தில் கொள்ளாமல் கொண்டு வரப்பட்டிருக்கும் ஆன்லைன் தடை அவசர சட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும்" என்று கூறப்பட்டிற்குக்கிறது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 16-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சைபர் க்ரைம் சிறப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன், "ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதித்து தமிழக அரசு சட்டம் கொண்டு வந்திருக்கிறது. இந்த முயற்சி பாராட்டத்தக்க ஒன்று. இதை அமல்படுத்த முடியாது. ஏன் என்றால் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் விளையாட்டுக்கள் இரண்டு விதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
இதன்படி இந்த விளையாட்டுக்களைத் தடை செய்ய முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நாட்டில் சட்டவிரோதம் என்று அறிவிக்கப்படாத தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அப்படி இருக்கும் போது சட்டவிரோதம் என்று சொல்லப்படாத விஷயத்தை நீங்கள் எப்படி தடை செய்ய முடியும்?. இதன்படி தான் தற்போது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் ஏற்றும் அதிகாரம் மாநில அரசின் கீழ் இருக்கிறது. எனவே மாநில அரசுதான் சட்டம் ஏற்ற வேண்டும். ஆனால் மாநில அரசு ஒரு சட்டம் ஏற்றியதும் 'கூகுள் பிளே ஸ்டோர்' மற்றும் 'ஆப்பிள் ஆப் ஸ்டோர்' ஆகியவை இந்த விளையாட்டுக்களை நீக்க மாட்டார்கள். அவர்களுக்கு இதற்கான உத்தரவு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் இருந்து வந்தால் மட்டுமே செய்வார்கள்.
அப்படி பார்த்தால் மத்திய அரசு தான், 'கூகுள் பிளே ஸ்டோர்' மற்றும் 'ஆப்பிள் ஆப் ஸ்டோர்'க்கு வழங்க வேண்டும். எனவே, முதலில் இந்த விவகாரத்தில் சட்டம் ஏற்றும் அதிகாரம் மாநில அரசில் இருந்து மத்திய அரசுக்கு மாற்றப்பட வேண்டும். அப்போது மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே சட்டம் ஏற்றிக்கொள்ள முடியும். இப்படிச் செய்தால் தான் இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு எட்ட முடியும்" என்றார்.
தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
source https://www.vikatan.com/government-and-politics/judiciary/lawsuit-against-online-rummy-prohibition-act
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக