Ad

சனி, 22 ஆகஸ்ட், 2020

#Dream11... ஐபிஎல் கிரிக்கெட்டின் புது பார்ட்னருக்கும் சீனாவில் இருந்துதான் பணம் வருகிறதா?!

இந்திய-சீன எல்லையில் சில மாதங்களுக்கு முன் நடந்த மோதல்களால் நாடு முழுவதுமே சீன எதிர்ப்பு மனநிலை நிலவி வருகிறது. 'முற்றிலுமாக சீன தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும்' என்ற குரல்கள் பரவலாக ஒலிக்கத்தொடங்கியுள்ளன. இந்த நிலையில் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோவை பிரதான டைட்டில் ஸ்பான்ஸராகக் கொண்ட ஐபிஎல் பற்றியும் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்தச் சூழலில் இந்த வருடம் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தத்திலிருந்து காரணம் எதுவும் குறிப்பிட்டுக் கொள்ளாமல் விலகிக்கொண்டது விவோ. இதனால் இந்த வருடம் ஐபிஎல்லுக்கு ஒரு புதிய டைட்டில் ஸ்பொன்ஸர் ஒன்றை உடனடியாக ஒப்பந்தம் செய்யவேண்டிய கட்டாயத்திற்கு வந்தது பிசிசிஐ. இதற்கான ஏலமும் நடந்தது. பைஜூஸ், அன்அகாடமி, பதஞ்சலி, டாட்டா, டிரீம்11 எனப் பல நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டின. இதில் இந்த வருடத்திற்கான டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பை கைப்பற்றியிருக்கிறது பிரபல ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் தளமான டிரீம்11.

ஐந்து வருடங்களுக்கான (2017-2022) ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பை 2,199 கோடி ரூபாய்க்குப் பெற்றிருந்தது விவோ. அதாவது வருடத்திற்கு சுமார் 440 கோடி ரூபாயை இதற்காக பிசிசிஐயிடம் கொடுத்து வந்தது. இந்த தொகையில் ஏறத்தாழ பாதி தொகைக்கு 222 கோடி ரூபாயில் இந்த டீலை முடித்திருக்கிறது டிரீம்11.

இதுகுறித்த தகவல்கள் சில தினங்களுக்கு முன்பே வந்துவிட்டாலும் ஒப்பந்தம் இறுதியாவதில் சில குழப்பங்கள் நீடித்தன. டிரீம்11 இதே 222 விலையில் அடுத்த இரண்டு வருடங்களுக்கான ஒப்பந்தமும் வேண்டும் எனக் கேட்டது. ஆனால், அடுத்தடுத்த வருடங்களில் நிச்சயம் இதை விட நல்ல தொகையைப் பெற முடியும் என்பது பிசிசிஐ-ன் நம்பிக்கை. அதோடு, விவோவுடனான ஒப்பந்தமும் இன்னும் முழுவதுமாக ரத்து செய்யப்படவில்லை. இதனால் டிரீம்11-ன் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்தது பிசிசிஐ. டிரீம்11-ம் 'வந்த வரை லாபம்' என இந்த ஒரு வருடத்திற்கான ஒப்பந்தத்திற்கு ஓகே சொல்லியது.

Dream 11 IPL

அதன்படி இந்தக் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக நேற்று முன்தினம் அறிவித்தது பிசிசிஐ. டிரீம்11 பெயருடன் கூடிய ஐபிஎல் 2020 லோகோவும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தற்போது இந்த ஒப்பந்தத்திலும் சர்ச்சை வெடித்திருக்கிறது. எந்த காரணத்திற்காக விவோவுடன் கூட்டணி அமைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியதோ, அதே காரணத்திற்காக டிரீம்11 உடனான கூட்டணிக்கும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆம், அடிப்படையில் இந்திய நிறுவனம்தான் என்றாலும் டிரீம்11-ல் கணிசமான சீன முதலீடுகளும் இருக்கவே செய்கிறது.

Dream 11 Investor Tencent

டென்சென்ட்... எங்கேயோ கேள்விப்பட்ட பெயர் போல இருக்கிறதா? பப்ஜி, கால் ஆஃப் டியூட்டி மொபைல் போன்ற பிரபல கேம்கள் இந்த நிறுவனத்தின் கூட்டணியில் தயாரிக்கப்பட்டவைதான். சமூக வலைதளங்கள், ஆன்லைன் வர்த்தகம், கேமிங், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் பேமன்ட்ஸ் எனத் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து துறைகளிலும் தீவிரமாகச் செயல்பட்டுவரும் சீனாவின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்று டென்சென்ட். சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் இங்கு ஜியோ எப்படியோ அப்படித்தான் சீனாவில் டென்சென்ட். இந்த நிறுவனத்துடனான தொடர்புதான் பிசிசிஐ மீது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

'இந்த ஒப்பந்தம் மக்களை ஏமாற்றும் வேலை' எனக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது தேசிய வணிகர் அமைப்பான CAIT (Confederation of All India Traders). தொடக்கத்திலிருந்தே சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் எனக் குரல் கொடுத்துவரும் இந்த அமைப்பு இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கு கடிதம் ஒன்றும் அனுப்பியுள்ளது. "பிசிசிஐ மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள மறுக்கிறது. எல்லையில் மடிந்த வீரர்களுக்கு அவமரியாதை செய்கிறது. இதன்மூலம் விவோவுடனான கூட்டணியை ரத்து செய்தது வெறும் கண்துடைப்பு சம்பவம்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது" என அதில் குறிப்பிட்டுள்ளது CAIT.

CAIT Letter to Sports Ministry

இதை மறுத்துள்ளது பிசிசிஐ. ''டிரீம்11-ல் 10 சதவிகிதத்திற்கும் குறைவான பங்குகளே சீன நிறுவனங்களிடம் இருக்கின்றன. ஹர்ஷ் ஜெயின், பாவித் சேத் ஆகிய இந்தியர்கள் இருவரால் தொடங்கப்பட்டதுதான் டிரீம்11'' என பிசிசிஐ தரப்பு விளக்கம் அளித்துள்ளது. மேலும் மொத்த ஸ்பான்ஸர்ஷிப் தொகையில் இது டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பில் ஒரு பங்குதான். இதனால் மொத்தமாக பார்க்கும்போது ஐபிஎல்-ல் டென்சென்ட்டின் பங்கு என்பது மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும் என்ற லாஜிக்கையும் சிலர் முன்வைக்கின்றனர்.

இந்த ஒப்பந்தத்தால் டிரீம்11-ன் மொத்த மதிப்பு என்பது இரண்டு மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 2019 நிலவரப்படி இதன் மதிப்பு என்பது சுமார் 1.1 பில்லியன் டாலர்கள். இது அடுத்த ஆண்டு 2.5 பில்லியன் டாலர்களாக உயரும் என்பதே தற்போதைய கணக்கு. இதனால் விரைவில் இன்னும் பல முதலீட்டாளர்களை ஈர்க்கப்போகிறது டிரீம்11. அப்படி நடக்கும்போது டென்சென்ட்டிடம் 5-6% பங்குகள்தான் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

என்னதான் சொன்னாலும் சீன நிறுவனங்களின் பணம் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்திய விளையாட்டு உலகில் புழங்கிக்கொண்டுத்தான் இருக்கிறது. உள்ளூர் விளையாட்டு லீக்குகள் தொடங்கி தேசிய அணி வரை அனைத்து இடங்களிலும் சீன நிறுவனங்கள், குறிப்பாக ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களே ஸ்பான்ஸர்களாக இருக்கின்றன. ஐபிஎல் மட்டுமல்ல ப்ரோ கபடி லீக்கிற்கும் விவோதான் டைட்டில் ஸ்பான்ஸராக இருக்கிறது. நம்மூரில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கு பேடிஎம் ஸ்பான்ஸராக இருக்கிறது. இது இந்திய ஸ்டார்ட்-அப் என்றாலும் இதிலும் சீன நிறுவனமான அலிபாபாவின் முதலீடுகள் அதிகம். அடுத்தது பைஜூஸ். இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய ஸ்பான்ஸர். இதிலும் டென்சென்ட்டின் பங்குகள் அதிகம். இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய ஸ்பான்ஸராக ஒப்போ இருந்தது. அதுவும் சீன நிறுவனம்தான். இப்போது ஐபிஎல்-ன் இணை ஸ்பான்ஸர்களுள் ஒன்றாக இருக்கிறது ஸ்விக்கி. இதிலும் அலிபாபாவின் முதலீடுகள் உண்டு. இப்படி எதோ ஒரு விதத்தில் சீன நிறுவனங்கள் விளையாட்டு ஸ்பான்ஸர்ஷிப்களில் தலைகாட்டவே செய்கின்றன.

Indian Unicorns

ஏற்கெனவே டைட்டில் ஸ்பான்ஸர் இல்லாவிட்டாலும் டிரீம்11 கடந்த ஆண்டிலிருந்தே ஐபிஎல் ஸ்பான்ஸராகதான் இருந்துவருகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல்-ன் சொந்த ஃபேன்டஸி லீக் தளத்தையும் டிரீம்11 தான் கையாண்டது. இது மட்டுமல்லாமல் இந்தியா ஆடும் அனைத்து போட்டிகளுக்குமே டிரீம்11 பார்ட்னர்தான். மேலும் ஐபிஎல்-ல் ஆர்சிபி தவிர மற்ற அனைத்து அணிகளுடனும் கூட்டணியில்தான் இருக்கிறது டிரீம்11.

இப்படி பலகாலமாகவே சீன நிறுவனங்களிடமிருந்துதான் பணம் பார்த்து வருகிறது பிசிசிஐ. இதை பிசிசிஐ-யும் உணராமல் இல்லை. சொல்லப்போனால் எதிர்ப்புகளையும் தாண்டி விவோவை இந்த வருட ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக தக்க வைத்துக்கொள்வதாகத்தான் முதலில் அறிவித்திருந்தது பிசிசிஐ. அப்போதும் CAIT போன்ற அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

BCCI

உண்மையைச் சொல்லவேண்டுமானால் விவோ விலக்கப்பட்டதற்கு இந்த எதிர்ப்புகள் மட்டும் காரணம் கிடையாது. கொரோனாவாலும், சீன எதிர்ப்பு மனநிலையாலும் விவோவுக்கு மொபைல் விற்பனை எப்போதும் போல் இல்லை. இதைக் காரணம் காட்டி சுமார் 30% குறைவான தொகையில் இந்த வருட ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பை தருமாறு பிசிசிஐயிடம் கேட்டது விவோ. இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை பிசிசிஐ. இதனால்தான் இந்த வருடம் மட்டும் விலகிக்கொண்டது விவோ என்கிறார்கள். இப்போது பாதி தொகைக்குத்தான் பிசிசிஐ இதை விற்றிருக்கிறது என்பது வேறு கதை.

மக்களின் சீன எதிர்ப்பு மனநிலையை கருத்தில் கொண்டு எந்த ஒரு முடிவையும் பிசிசிஐ எடுக்கவில்லை. பண வரவைதான் பார்த்திருக்கிறது. இப்போது இந்த ஏலத்திற்கு முன்பு 'அதிக தொகை கொடுப்பவர்களுக்கு டைட்டில் ஸ்பான்சர்ஷிப் கொடுப்பது எங்கள் நோக்கம் இல்லை. இறுதி முடிவை நிர்வாகமே எடுக்கும்' என தெரிவித்திருந்தது பிசிசிஐ. ஆனால் இறுதியில் அதிக தொகையை கொடுக்கும் டிரீம்11-ஐத்தான் டிக் அடித்திருக்கிறார்கள்.

முற்றிலுமாக சீன நிறுவனங்களைத் தவிர்க்க முடியுமா?

முடியும்தான். ஆனால், இப்போதைய சூழலில் உடனடியாக சாத்தியப்படுமா என்பது சந்தேகம்தான். ஆரம்பக்கட்டத்தில் இந்திய ஸ்டார்ட்-அப்களுக்கு தேவையான முதலீடுகள் உள்ளூரில் கிடைப்பதில்லை. அந்த நேரத்தில் சீன நிறுவனங்கள்தான் உதவிக்கரம் நீட்டுகின்றன. 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடைய ஸ்டார்ட்-அப்பை 'யூனிகார்ன்' என அழைப்பர். அப்படியான பெரும்பாலான இந்திய யூனிகார்ன்களில் சீன முதலீடுகள் இருக்கவே செய்கின்றன. Byjus, Paytm, Ola, Oyo, Swiggy, Zomato, Dream11 என பிரபல ஸ்டார்ட்-அப்கள் அனைத்துமே இந்த வகைதான்.

டிரீம்11-ல் வேறு சில சிக்கல்கள் இருக்கின்றன. அதை பின்பு விவாதிப்போம். ஆனால், சீன நிறுவனங்களுடைய முதலீடுகள் இருக்கிறது என்று மட்டும் காரணம் சொல்லி பெரும் கனவுகளுடன் இந்தியர்கள் ஆரம்பித்த ஸ்டார்ட்-அப்களை நாம் மொத்தமாகப் புறக்கணிப்பது சரியாகாது. ஏற்கெனவே சரிந்துவரும் இந்திய பொருளாதாரம் இதனால் இன்னும் பின்னோக்கிதான் இழுக்கப்படும். சீனாவைப் புறக்கணிக்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அதை படிப்படியாகவே செய்ய முடியும். வெறும் 'தற்சார்பு இந்தியா' என சொல்வதுடன் நிறுத்தாமல் அரசும் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

இப்படி சீன நிறுவனங்களின் முதலீடு இருக்கிறதென்ற ஒரே காரணத்திற்காக இந்திய ஸ்டார்ட்-அப்களை எதிர்ப்பது 'கண்ணாடியை திருப்புனா ஆட்டோ எப்படி பாஸ் ஓடும்!' என்றுதான் கேட்க வைக்கிறது.


source https://sports.vikatan.com/cricket/ipl-2020s-official-title-sponsor-dream11s-chinese-connect

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக