Ad

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

வேளாங்கண்ணி: வி.ஏ.ஓ-க்களைத் தாக்கிய மணல் மாஃபியா! போலீஸ் கண்முன்னே விடுவிக்கப்பட்ட டிராக்டர்

நாகை அருகே மணல் கடத்திவந்த டிராக்டரைத் தடுத்த கிராம நிர்வாக அலுவலர்களை அடித்து உதைத்ததோடு, `எங்களைப்  பகைத்துக்கொண்டால்  ஊருக்குள் அதிகாரிகள் நடமாட முடியாது’ என ஒரு கும்பல் மிரட்டிவிட்டுச் செனறிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மணல் கடத்தல்

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த கருவேலங்கடை கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிவருபவர் அருள் அரவிந்தன். இவர் மகாதானம் கிராமத்தின் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலராகவும்  பணியாற்றிவருகிறார். இந்நிலையில், மகாதானம் பகுதியிலுள்ள வயல்வெளியில் ஜே.சி.பி. இயந்திரத்தைக்கொண்டு, சட்ட விரோதமாக, அளவுக்கு அதிகமாக மணல் கடத்துவதாக கிராம நிர்வாக அலுவலர் அருள் அரவிந்தனுக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. அருள் அரவிந்தன் சம்பவ இடத்துக்குச் சென்று நடத்திய விசாரணையில், கலசம்பாடி பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் செங்கல் சூளைக்கு மணல் கடத்திச்  செல்லப்படவிருந்தது தெரியவந்தது. பின்னர், மணல் ஏற்றி வந்த டிராக்டரை மறைந்திருந்து அருள் அரவிந்தன் மடக்கிப் பிடித்து நாகை வட்டாட்சியருக்குத்  தகவல் கொடுத்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து வட்டாட்சியர், மேலும் இரண்டு  கிராம நிர்வாக அலுவலர்களை உதவிக்கு அழைத்துக்கொள்ளும்படி கூறியிருக்கிறார். அதன்படி பாப்பாக்கோவில் வி.ஏ.ஓ சபரிநாதன், செம்பியன்மாதேவி வி.ஏ.ஓ கருப்பசாமி ஆகிய இருவரையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு, மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை பறிமுதல் செய்ய முயன்றிருக்கிறார்கள். அப்போது திடீரென அங்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், வி.ஏ.ஓ-க்களை  சரமாரியாகத் தாக்கத் தொடங்கினயது.

அந்தக்  கும்பல் தாக்கும் காட்சிகளை வி.ஏ.ஓ ஒருவர் தனது செல்போனில் மிகுந்த சிரமத்தோடு பதிவு செய்திருக்கிறார். செல்போனைப் பறிக்கும் கும்பலிடமிருந்து தப்பித்து,  வேளாங்கண்ணி காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். ஆனால், அங்கு ஒரே ஒரு எஸ்.ஐ மட்டுமே வந்ததால், அவரால் அந்தக் கும்பலைச்  சமாளிக்க முடியவில்லை. அவர் கண்முன்னே மர்மல் கும்பல் மணல் கடத்தல் டிராக்டரை எடுத்துக்கொண்டு தப்பித்துச் சென்றுவிட்டது. தாக்குதலுக்கு உள்ளான கிராம நிர்வாக அலுவலர் அருள் அரவிந்தன் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

மணல் கடத்தல்

இது பற்றி வேளாங்கண்ணி போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``உடனடியாக மணல் கடத்திய  டிராக்டரைப் பறிமுதல் செய்திருக்கிறோம். அரசு அலுவலர்களைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த பாலகிருஷ்ணன், நாகமணி, நவநீதகிருஷ்ணன், சதீஷ்குமார், சுப்பிரமணியன், ராமன் ஆகிய ஆறு பேர்மீது வழக்கு பதிவுசெய்து தேடிவருகிறோம். விரைவில் கைது செய்வோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/velankanni-vaos-attacked-by-sand-mafia-police-complaint-registered

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக