கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலைப் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான பழங்குடி கிராமங்கள் உள்ளன. கடந்த ஆண்டு அங்கு பெய்த கனமழை, காட்டாற்று வெள்ளம் அந்த மக்களின் வாழ்வைப் புரட்டிப் போட்டுவிட்டது. நாகரூத்து என்ற பழங்குடி கிராமத்தில் மலசர் இன பழங்குடி மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.
இதனிடையே, கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் பாறைகள் உருண்டு வந்து, அங்குள்ள 22 வீடுகளை அடித்து சென்றது. இதில், குஞ்சப்பன் என்பவரது 2 வயது மகள் சுந்தரி அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். சில நாள்களுக்குப் பிறகே சுந்தரியின் உடல் கிடைத்தது.
Also Read: "கரன்ட்டே இல்லாம எப்படி சார் படிக்க முடியும்?" - கண்ணீரில் ஆனைமலை பழங்குடி மக்கள்
அதேபோல, வால்பாறை கல்லார் பழங்குடி கிராமும் கடந்தாண்டு மழை வெள்ளத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதில், 23-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்தனர். இதையடுத்து, அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மலசர் இன மக்கள், சரிவான பகுதிகளில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.
நடப்பாண்டும் கனமழை பெய்து வருவதால், எப்போது வேண்டுமானாலும் பெருத்த சேதம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் பழங்குடி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாற்று இடம் வேண்டும் என்ற அந்த மக்களின் கோரிக்கை, தற்போதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இதுகுறித்து காடர் பழங்குடியின பெண்கள், ``10 நாள்ல தீர்வு கிடைக்கும்னு சொன்னாங்க. இப்ப ஒரு வருஷம் ஆகிடுச்சு. இதுக்கப்பறம் நீங்க நடவடிக்கை எடுப்பீங்களானு தெரியல. ஒருவேளை நிலச்சரிவானதுக்கு அப்பறம், பத்திரிகை, டி.விகாரங்க, அதிகாரிங்க இங்க வந்து என்ன பிரயோஜனம்? நீங்க கொடுக்கற நிவாரணத்த யார் வாங்குவாங்க? எத்தனை லட்சம் கொடுத்தாலும் ஒரு உயிரை வாங்க முடியாது.
முகாம்ல தங்க வெச்சுருக்காங்க. எல்லாரையும் ஒரே இடத்துல அடைச்சு வெச்சுருக்காங்க. ஒரு பொண்ணு தன்னோட வேதனைகள எப்படி வெளிப்படுத்துவா? கொஞ்சம் கருணை காட்டுங்க. அப்பறம் நாங்க செத்ததுக்கு அப்பறம் வருத்தப்பட வேண்டிய சூழ்நிலையே இருக்காது.
தூங்கறதுக்கு ஒரு 10 நிமிஷத்துக்கு முன்னாடி எங்களை பத்தி யோசிச்சு பாருங்க. நீங்க எங்களுக்கு உதவி செஞ்சே ஆகணும்னு நாங்க சொல்ல மாட்டோம். மனசாட்சி இருந்தா, எங்களுக்கு மாற்று இடம் கொடுங்க” என்று கண்ணீருடன் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்நிலையில், ஆனைமலை குன்றுகளில் வாழும் பழங்குடி மக்களுக்கு, பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும், அவர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் மாற்று இடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/tamilnadu/atr-tribes-seeks-governments-help-over-flood
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக