Ad

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

குழப்பத்தில் ஜோ ரூட், சென்சுரிக்கு ஏங்கும் பாகிஸ்தான்... எப்படியிருக்கும் 3வது டெஸ்ட்? #EngvsPak

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான மூன்றாவது மற்றும் தொடரின் கடைசி போட்டி சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வெகுவாக தடுமாறச்செய்து போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது பாகிஸ்தான். ஆட்டத்தின் கடைசி செஷனில் மட்டுமே ஆட்டம் பாகிஸ்தானின் கையை விட்டுச்சென்றது. இரண்டாவது டெஸ்ட்டில் மழை மற்றும் குறைந்த வெளிச்சம் காரணமாக முக்கால்வாசி செஷன்கள் தடைபட்டன. முதல் இன்னிங்ஸ்கூட முழுமையாக முடிக்கப்படவில்லை. நடைபெற்ற கொஞ்ச நேர ஆட்டத்திலும் பாகிஸ்தான் தடுமாறவே செய்தது. ஆண்டர்சன், பிராட் இருவருமே விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் விக்கெட்டை வீழ்த்தினர்.

Joe root

இந்நிலையில் கடந்த ஆட்டம் நடைபெற்ற சவுத்தாம்ப்டனில் வைத்தே இன்றைய போட்டியும் நடைபெறுகிறது. வெளிச்சக்குறைவு காரணமாக ஆட்டம் தடைபடுவது குறித்து ஜோ ரூட் கடுமையான அதிருப்தியை தெரிவித்திருந்தார். இந்தப் போட்டியில் வெளிச்சம் மற்றும் வானிலைக்கு ஏற்றவாறு ஆட்ட நேரத்தை அதிகரித்து கொள்வதற்கு ஐசிசியும் அனுமதி வழங்கியுள்ளது. போட்டிகளுக்கு இடையே இடைவேளை நாள்கள் குறைவாக இருந்ததால் இரண்டாவது போட்டியில் பயன்படுத்தப்பட்ட அதே பிட்ச்சே இந்தப் போட்டிக்கும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த போட்டி முழுவதும் மழை பெய்திருந்ததால் பிட்ச் நிச்சயம் ஈரப்பதமாகவே இருக்கும். வழக்கம்போல இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் என்றாலும் பவுன்ஸ் விஷயத்தில் இப்படித்தான் இருக்கும் என உறுதியாக எதையும் கூறி விட முடியாது.

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் பிராட், ஆண்டர்சன், வோக்ஸ், கரன் மற்றும் பென்ச்சில் ஆர்ச்சர் மற்றும் மார்க்வுட் ஆகியோர் இருக்கின்றனர். எல்லா பௌலர்களுமே நல்ல பர்ஃபாமென்ஸைக் கொடுப்பதால் ப்ளேயிங் லெவனில் யாரை எடுப்பது என்பதில் ரூட்டுக்கும் கோச் சில்வர்வுட்டுக்கும் பெரும் குழப்பம் இருக்கிறது. இந்த ஒரு சீரிஸை மட்டும் மனதில் வைத்து பௌலர்களை தேர்ந்தெடுக்க முடியாது. அடுத்து வரவிருக்கும் ஆஷஸ் தொடரையும் மனதில் வைத்துத்தான் பௌலர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும் என கோச் சில்வர்வுட் கூறியுள்ளார். இதன்படி பார்த்தால் இந்தப் போட்டியில் ஆண்டர்சனை நீக்கிவிட்டு ஆர்ச்சர்/மார்க்வுட் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

Archer

ஸ்லிப் ஃபீல்டிங்கிலும் விக்கெட் கீப்பிங்கிலும் இங்கிலாந்து இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. வழக்கமாக ஸ்லிப்பில் நிற்கும் ஸ்டோக்ஸும் முக்கிய கேட்ச்சுகளை தவறவிட்டார். இப்போது ஸ்டோக்ஸ் அணியில் இல்லாதபோது ஸ்லிப்பில் நிற்கும் பர்ன்ஸ், ரூட் போன்றோரும் ஸ்லிப்பில் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. 1-2-3 என்ற செட்டப்பில் நிற்கும் ஸ்லிப் ஃபீல்டர்கள் தங்கள் இடத்தில் வரும் கேட்சை மட்டும் பர்ஃபெக்ட்டாக பிடித்தால் போதும். கடந்த ஆட்டத்தில் முதல் ஸ்லிப்பில் நின்ற ரூட்டுக்கு சென்ற ஈசியான கேட்சை குறுக்கே விழுந்து கேட்ச் பிடிக்கிறேன் என்ற பெயரில் தட்டிவிட்டார் பர்ன்ஸ். இதே மாதிரியான சின்ன சின்ன தவறுகளை இங்கிலாந்து தவிர்த்தாக வேண்டும். பேட்டிங்கில் பெரிய லைன் அப் இருந்தும் இன்னும் தங்களது முழுமையான திறனை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்தவில்லை. சிப்லே, விண்டீஸுக்கு எதிராக அடித்ததைப்போல ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும். கேப்டன் கடைசி 4 போட்டிகளிலும் ஒரு நல்ல கேப்டன் இன்னிங்ஸ் ஆடவில்லை. பட்லர் மீதான கவனக்குவிப்பால் ஜோ ரூட் விமர்சனங்களிலிருந்து தப்பித்து வந்திருக்கிறார். இந்தப் போட்டியில் நிச்சயம் அவர் அடித்தே ஆக வேண்டும்.

பாகிஸ்தானை பொறுத்தவரை பௌலிங் லைன் அப்பில் பெரிதாக எந்தக் குறையும் இல்லை. அஸார் அலி இந்த பௌலிங் டிபார்ட்மென்ட்டை சரியாக வழிநடத்தினால் வருங்காலத்தில் எல்லா அணிகளையும் மிரட்டிப் பார்க்கலாம். பாபர் அசாம், அபித் அலி, அசார் அலி, ரிஷ்வான் இவர்களெல்லாம் கடந்தப் போட்டியில் நல்ல டைம் எடுத்து நிதானமாக இன்னிங்ஸை தொடங்கினார்கள். ஆனால், யாரிடமிருந்து ஒரு பெரிய சென்சுரி கிடைக்கவேயில்லை. முதல் போட்டியில் ஷான் மசூத் ஆடியதைப்போல நிதானத்தோடு நிலைத்து நின்று பெரிய இன்னிங்ஸும் ஆட வேண்டும். ஷான் மசூத்தும் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒரு 150+ அடித்ததோடு சரி அடுத்த இரண்டு இன்னிங்ஸில் பரிதாபமாக அவுட் ஆகியிருக்கிறார். அவரும் ஓப்பனிங்கில் நிதானமாக நின்று பாகிஸ்தான் இன்னிங்ஸை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.

பாகிஸ்தான் டீம்

Also Read: ஸ்டோக்ஸ் இல்லா இங்கிலாந்து; பௌலிங்கில் மிரட்டும் பாகிஸ்தான் - எப்படியிருக்கும் 2வது டெஸ்ட்? #EngVsPak

கடந்த பத்து வருடத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை இழந்ததே இல்லை. இந்த சாதனை தொடரவேண்டுமாயின் இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஜெயிக்க வேண்டிய இரண்டாவது போட்டி மழையால் கைமீறி போனதில் ஜோ ரூட்டும் செம அப்செட். இங்கிலாந்துக்கு இந்த சம்மரில் இதுதான் கடைசி டெஸ்ட் போட்டி. அடுத்த டெஸ்ட் போட்டியில் எப்போது விளையாடுவோம் என யாருக்கும் தெரியாது. எனவே வீரர்கள் எல்லோரும் இந்தப் போட்டியில் முழுத்திறனை வெளிப்படுத்தியே ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார் ஜோ ரூட்.

காத்திருப்போம்!



source https://sports.vikatan.com/cricket/england-vs-pakistan-third-test-match-preview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக