உலக நாடுகள் அனைத்தும் மனிதகுலத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிவருகின்றன. ஆனால், ஆப்ரிக்காவின் மத்திய கிழக்கு நாடான மாலியில் நிலைமை தலைகீழாக உள்ளது. அங்கு அதிபர் இப்ராஹிம் பாவ்பாகர் கெய்ட்டா (Ibrahmi Boubacar Keita) தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு, ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாகவே, `மாலியின் அதிபர் பதவி விலக வேண்டும்’ என்று தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அவ்வப்போது கலவரங்களும் நடந்தேறின. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று அரசுக்கு எதிரான ராணுவ வீரர்கள் மாலியின் தலைநகர் பாமாகோ-வை (Bamako) வந்தடைந்தனர்.
பின்னர் அங்குள்ள காடி ராணுவ முகாமைக் கைப்பற்றினர். தொடர்ந்து, `அதிபர் கெய்ட்டா பதவி விலக வேண்டும்’ என்ற தொடர் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் மாலியின் வீதிகளில் வலம்வந்தனர். பின்னர் அதிபரின் கட்டடத்துக்குள் புகுந்து துப்பாக்கிமுனையில் கெய்ட்டாவைக் கைது செய்தனர். மாலி அதிபரோடு, அவரின் மகன், வெளியுறவுத்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் மற்றும் தேசிய சட்டமன்றப் பேச்சாளர் ஆகியோரும் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். மாலியில் அரசாட்சி கலைக்கப்படுவது என்பது முதன்முறை அல்ல. மாலியின் வரலாற்றில் இவ்வாறான சம்பவங்கள் பல முறை நடந்துள்ளன. இதைப் பற்றி அறிய மாலியின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
மாலியின் வரலாறு
ஒருகாலத்தில் மேற்கு ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற மூன்று முக்கியப் பேரரசுகளுள் ஒன்றாக திகழ்ந்தது மாலி. அந்தப் பேரரசுகள்தான் ட்ரான்ஸ் சஹாரன் வணிகத்தையே (Trans-Saharan trade) கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கால மாற்றத்தால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேரரசுகள் மாலியை ஆட்சி செய்தன. இறுதியாக 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாலி, பிரான்ஸின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அப்போது பிரான்ஸ் சூடானையும் கைப்பற்றியிருந்ததால், `பிரெஞ்ச் சூடான்’ என்று அழைக்கப்பட்டது. பிரெஞ்ச் சூடானும், செனகலும் இணைந்துதான் `மாலி ஃபெடரேஷன்’ உருவானது.
இந்த மாலி ஃபெடரேஷன், 1960-ம் ஆண்டு பிரான்ஸிடமிருந்து விடுதலை பெற்றது. பின்னர் செனகலும் விலகிக்கொள்ள, செப்டம்பர் 22,1960 அன்று மாலி தனி நாடாக உருப்பெற்றது. இதன் முதல் அதிபராக மோடிபோ கெய்ட்டா பதவியேற்றார். ஆனால், பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாக அங்கு அரசுக்கெதிரான போராட்டம் வெடித்தது. அங்கு ஒற்றைக் கட்சி முறையே அமலில் இருந்ததால், எதிர்க்கட்சி என்று யாரும் இல்லை. இதனால் இந்தப் போராட்டத்துக்கு ராணுவ அதிகாரி மவுஸ்ஸா டிராவோர் (Moussa Traoré) தலைமை தாங்கினார்.
அரசாட்சி கலைக்கப்பட்ட பின்னர், மவுஸ்ஸா-வே அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது தலைமையின் கீழும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் சொல்லிக்கொள்ளும் வகையில் அமையவில்லை. இதனால் மாலி மக்களிடையே தொடர்ந்து அதிருப்தியே நிலவிவந்தது. மேலும், `ஒற்றைக் கட்சி நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும்’ என்ற குரல்களும் வலுப்பெறத் தொடங்கின. இவருக்கெதிரான போராட்டங்கள் 1980-ம் ஆண்டு தொடங்கின. ஆனால், போராட்டங்களைப் பற்றி மவுஸ்ஸா பெரிதாகக் கண்டுகொள்ளாமல், அவற்றை ஒடுக்கும் செயல்களிலேயே ஈடுபட்டுவந்தார். 1991-ம் ஆண்டு அரசுக்கெதிரான போராட்டம் வலுப்பெறத் தொடங்கியது. அந்தப் போராட்டம் மார்ச் மாதம் நடைபெற்றதால், `மார்ச் புரட்சி’ என்றே அழைக்கப்பட்டது.
இதில் அதிக அளவில் ரத்தச் சேதங்களும் ஏற்பட்டன. அரசே தங்களுக்கு எதிராகப் போராடிய மக்களைக் கொன்று குவித்தது. இறுதியாக, மார்ச் 26 அன்று மவுஸ்ஸா டிராவோரின் அரசு கலைக்கப்பட்டது. அதன் பிறகு மாலியில் ஜனநாயக ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜனநாயக முறையில் 1992-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் ஆல்ஃபா ஓமர் கொனாரே (Alpha Oumar Konaré) வெற்றி பெற்றார்.
இதையடுத்து சில காலம் மாலியில் ஜனநாயக முறையிலேயே அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில்தான் அரசியல்ரீதியாகவும், சமூகரீதியாகவும் மாலியில் சிறிது அமைதி நிலவியது. அதேசமயம் அதுவும் சிறிது காலத்துக்கு மட்டுமே நீடித்தது. மாலியில் அரசுக்கெதிரான போராட்டங்கள் திரும்பவும் நடைபெறத் தொடங்கின. இதையடுத்து 2012-ம் ஆண்டு வடக்கு மாலியில் அஸாவாத்-ல் உள்ள விடுதலைக்கான தேசியக் கழகம் (National Movement for liberation of azawad) சார்பில் ட்யுராக் புரட்சி வெடித்தது.
இதற்கு இஸ்லாமிய அமைப்புகளான அன்சர் டைனே மற்றும் அல்கொய்தா ஆகியவை உதவி செய்தன. ஆனால் இவையே ஷரியா சட்டத்தை அமல்படுத்தும் நோக்கில் ட்யுராக்கை கைப்பற்றின. அதன் பின்னர் 2013-ம் ஆண்டு பிரெஞ்ச் படைகளின் உதவியோடு வடக்கு மாலி பகுதிகளை மாலி அரசாங்கம் கைப்பற்றியது. தற்போது அதிபராக உள்ள கெய்ட்டா 2013-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். பின்னர் 2018-ல் நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மாலியின் அதிபராகத் தொடர்ந்தார். ஆனால், மாலி அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு, திறனற்ற நிர்வாகம் எனப் பல எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் இருந்தன. கடந்த மாதம் அரசியலமைப்பு நீதிமன்றம் கெய்ட்டா அரசின் மோசமான நிலையைக் காரணம் காட்டி, வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளைச் `செல்லாது’ என அறிவித்தது.
இதையடுத்து வீதிகளில் போராட்டக்காரர்கள் திரளத் தொடங்கினர். நாட்டின் மோசமான பொருளாதாரம், பாதுகாப்பின்மை ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்று கெய்ட்டா அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று கோஷமிட்டனர். மேலும், எதிர்க்கட்சி சார்பில் அதிபரின் மகன் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் கூறப்பட்டது. இவர் ஜூலை மாதம்தான் பாராளுமன்றத்தின் பாதுகாப்புத் தலைவர் பொறுப்பிலிருந்தும், பாதுகாப்பு குழுவிலிருந்தும் பதவி விலகினார் என்பது கவனிக்கத்தக்கது. எதிர்த்தரப்பினரிடம் சமரசம் செய்துகொள்ளவும் மாலி அதிபர் முன்வந்தார். இதில் கூட்டாட்சி முறையும் இருந்தது. ஆனால், போராட்டக்காரர்கள் அதிபருடனான சமரசப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்கவில்லை. இந்தப் போராட்டத்தால் 2012-ல் கிளர்ச்சி செய்த அல்கொய்தா மற்றும் இதர இஸ்லாம் அமைப்புகளுக்கும் இது நல்ல வாய்ப்பாக அமைந்துவிடுமோ என்ற கவலைகளும் ஏற்பட்டன.
Also Read: கலைக்கப்படப் போகிறதா டி.என்.பி.எஸ்.சி... `One Nation One Test' திட்டத்தின் நோக்கம் என்ன?
ஆனால் 2012-ல் ஏற்பட்ட நிலைமை, இப்போது ஏற்பட வாய்ப்பில்லை என தென் ஆப்பிரிக்க ஆய்வாளரான ரியான் கம்மிங்க்ஸ் தெரிவித்துள்ளார். அதே சமயம் அரசியல் மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார். ராணுவக் கிளர்ச்சியாளர்கள் நிச்சயம் புதிதாக அமையவிருக்கும் அரசில் அதிக பங்கை எதிர்பார்ப்பார்கள். புதிய அரசில் இமாம் மஹ்மூது டிக்கோ முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு புதிய மாலி பிறக்கப்போகிறது என்றே கிளர்ச்சியாளர்கள் ஆதரவாளர்களிடம் கூறிவருகின்றனர்.
இதற்கெல்லாம் இடையில் மாலியில் இன்னமும் அடிமை முறை ஒழியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. மாலி ஏற்கெனவே பின்தங்கிய நாடாகத்தான் இருக்கிறது. கொரோனா காலத்தில் தொற்றைக் கட்டுப்படுத்தாமல் போராட்டங்கள் நடைபெற்றுவருவது கவலைக்குரிய ஒன்று. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தவண்ணம் உள்ளன. இதற்கிடையில் ஐ.நா அமைப்பு, `கைது செய்யப்பட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ எனப் போராட்டக்காரர்களை வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இதையே கூறுகின்றன. இதே கருத்தைத்தான் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, அங்கோலா, அல்ஜீரியா, துருக்கி, ஜெர்மனி, சீனா ஆகிய நாடுகளும் கூறியுள்ளன. `இது ஒரு ஜனநாயகப் படுகொலை’ என்பதே இந்நாடுகளின் கருத்தாக உள்ளது. மேலும், `உடனடியாக மாலியில் ஜனநாயக முறையில் ஆட்சி அமைக்கப்பட வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளன. மாலியிலுள்ள இந்தியர்கள் அனைவரும் நாடு திரும்புமாறு கூறப்பட்டுள்ளனர். அதே சமயம் `நாங்கள் கூறும் வரை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்’ என மாலிக்கான இந்தியத் தூதர் ஏ.கே.சாஹாய் அறிவித்துள்ளார். மாலியிலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துதான் வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், தேர்தல் மூலம் ஜனநாயக ஆட்சி திரும்பவும் நிலைநாட்டப்பட உள்ளது. உலகமே வைரஸுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில், மாலி மட்டும் மீண்டும் ஜனநாயக முறையில் ஆட்சி அமைக்கப்படுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறது!
source https://www.vikatan.com/government-and-politics/international/history-of-mali-and-current-malian-military-coup
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக