வாழ்வு நிரந்தரமில்லாத இந்த 2020 யுகத்திலும், உயிருக்கு உத்தரவாதமில்லாத இந்த கொரோனா காலத்திலும், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்றே தெரியாத இந்த நிச்சயமற்ற சூழலிலும்கூட சாதி ஆணவங்களும், ஆண்டப்பெருமைகளும் கொஞ்சமும் குறையவில்லை என்பதற்கான சமீபத்திய நேரடி சாட்சியம்தான் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் அம்மா!
சாமான்யனாக இருந்தாலும் சரி, சாதனையாளராக இருந்தாலும் சரி, சாதியைச் சொல்லி இழிவுபடுத்தும் சமூகம் இன்னமும் இங்கே இருந்துகொண்டுதான் இருக்கிறது. அவமானங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.
திருவள்ளூர் மாவட்டம், ஆத்துப்பாக்கம் கிராமம் தமிழக உள்ளாட்சி அமைப்பில் பட்டியலினப் பெண்களுக்காக இடஒதுக்கீடு செய்யப்பட்டப் பகுதி. சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஊராட்சி மன்றத்தலைவரானவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் பணியாற்ற வந்தவரை சாதியின் பெயரால் அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள் இந்த ஊரைச் சேர்ந்த சிலர்.
பஞ்சாயத்து தலைவராக அமிர்தம் வெற்றிபெற்றதில் இருந்தே பஞ்சாயத்துதான். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தனது தலைவர் இருக்கையில் உட்காரவிடாமல் தடுக்கப்பட்டிருக்கிறார். கணக்கு வழக்குகளைக் கேட்கக்கூடாது என மிரட்டப்பட்டிருக்கிறார். கொடுக்கும் காசோலைகளில் கையெழுத்து மட்டும் போடவேண்டும்... அதுதான் உங்கள் வேலை என்று சொல்லியிருக்கிறார்கள். பஞ்சாயத்து அலுவலக சுவரில் 'தலைவர் - அமிர்தம்' என எழுதுவதைக்கூட அவமானமாகக் கருதியிருக்கிறார்கள். கிராமசபைக் கூட்டங்களை அவர் இல்லாமலேயே நடத்தியிருக்கிறார்கள் எனப் பல மாதங்களாக வெளியே சொல்லமுடியாத அவமானங்களைச் சந்தித்திருக்கிறார் அமிர்தம். கடந்த ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்றே தேசியக்கொடி ஏற்றக்கூடாது என அமிர்தத்தை தடுத்து நிறுத்திய சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
அங்கிருக்கும் இளைஞர்கள் மூலமாக இந்தச் செய்தியைக் கேட்டறிந்த சிலர், இந்தச் சம்பவங்கள் குறித்து கும்மிடிபூண்டி ஒன்றிய ஆணையர், கும்மிடிபூண்டி சரக துணைக் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு ஆகஸ்ட் 13-ம் தேதி மின்னஞ்சலில் புகார் மனு அனுப்பியிருக்கிறார்கள். அதில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதியிலாவது அமிர்தம் தேசிய கோடி ஏற்ற வழிவகை செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், அப்போது இந்தச் செய்தி அதிகாரிகளின் கவனத்திற்கு போய்ச்சேரவில்லை.
இந்நிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதி அப்பகுதி பள்ளிகளில் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர். கொடி ஏற்றுவதற்காக பஞ்சாயத்து அலுவலகம் வந்த அமிர்தத்தை, ''கொரோனா ஊரடங்கு காரணமாக கொடியேற்றம் இல்லை'' என பஞ்சாயத்து அலுவலர்கள் சிலர் திருப்பி அனுப்பியிருக்கின்றனர். அப்போதுதான் இந்தச் சம்பவத்தை பற்றி அறிந்து செய்தியாளர் ஒருவர் அங்கே செல்ல, அவரைப் பணி செய்ய விடாமல் ஊராட்சி மன்றச் செயலாளர் சசிகுமாரும், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரேவதியின் கணவர் விஜயகுமாரும் செய்தியாளரைத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலுக்குப்பிறகே அமிர்தம் சந்தித்த அவமானங்கள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றிருக்கிறது. உடனடியாக கும்மிடிபூண்டி போலீஸ் விஜயகுமார், சசிகுமார் இருவரையும் கைது செய்துள்ளனர். ஊராட்சி செயலர் சசிகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நேற்று (20.08.2020) பாராட்டத்தக்க முயற்சி எடுத்தது. சரசரவென அரசாங்க வாகனங்கள் படையெடுக்க, ஆட்சியர், எஸ்பி உள்பட அனைத்து உயர் அதிகாரிகளும் ஆத்துப்பாக்கம் வர ஊரே ஒரே பரபரப்பானது. திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி, எஸ்.பி.அரவிந்தன் முன்னிலையில், சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். அதிகாரிகள் அவருக்கு கம்பீர சல்யூட் அடித்தனர்.
Also Read: நவம்பரில் கட்சி! அ.தி.மு.க வுக்கு `நோ' ? | Rajini Politics | ADMK | BJP
தேசியக் கொடியை ஏற்றி முடித்ததும் தலைவர் அமிர்தம் அவர்களிடம் பேசினேன். ''இனி எனக்கு பயமில்லை... எந்தப் பிரச்னையாக இருந்தாலும் துணை நிற்கிறோம் என ஆட்சியர் உள்பட அனைவரும் உறுதி அளித்திருக்கிறார்கள். இனி என் கடமையைச் செய்வேன்" என்றார் தலைவரம்மா!
சிறையிலிருக்கும் விஜயகுமார் என்பவரது மனைவியும், ஊராட்சி மன்றத் துணை தலைவருமான ரேவதியிடம் ''உங்கள் கணவர் மீதான குற்றசாட்டுகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?’' எனக் கேட்டேன். " திடீர்னு பஞ்சாயத்து ஆபிஸூக்குள்ள பூந்து அந்த ரிப்போர்ட்டர் போட்டோ எடுத்தாரு. தடுக்கப்போன லேடீஸ் க்ளீனரையும் அடிச்சிருக்காரு. அதனாலதான் எங்க வீட்டுக்காரரும், செக்ரட்டரி சசிகுமாரும் அவரை அடிச்சிருக்காங்க" என்கிறார்.
ஊராட்சி மன்றத் தலைவரை செயல்படவிடாமல் தடுத்தது குறித்து சொல்லப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மொத்தமாக நிராகரிக்கிறார் ரேவதி. "இதுவரைக்கும் 15 பஞ்சாயத்து கூட்டம் நடந்திருக்கும். நான் ஒண்ணு ரெண்டு கூட்டங்களுக்குத்தான் போயிருக்கேன். பஞ்சாயத்து மேட்டர்லாம் என் புருஷன்தான் பார்த்துக்குவாரு" என 'அப்பாவியாக'ச் சொல்கிறார். தேர்தல் விதிமுறைகளுக்காக வெறுமனே பேருக்குப் பெண்களைத் தேர்தலில் நிற்கவைத்துவிட்டு, அவர்கள் வெற்றிபெற்றதும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிடுகிறார்கள் அவர்கள் வீட்டு ஆதிக்க ஆண்கள். தமிழகம் முழுக்க இப்படி ஓராயிரம் ரேவதிகள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு தலைவருக்கு, அவர் தேசியக் கொடியை ஏற்றுவதற்கான உரிமையையே மாவட்டத்தின் கலெக்டர் தொடங்கி காவல் அதிகாரிகள் வரை அத்தனை பேரும் நேரில் சென்றுதான் பெற்றுத்தரவேண்டியிருக்கிறது என்றால் நம்முடைய சமூகம் எப்படிப்பட்டதாக இருக்கிறது! இவ்வளவுக்கும் நடுவில் அமிர்தம் ஏற்றியிருக்கும் கொடி சுதந்திரத்தின் சின்னம்தானா?!
source https://www.vikatan.com/government-and-politics/local-bodies/struggle-of-a-panchayat-leader-to-hoist-the-flag
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக