கோவை, காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் பிரனேஷ் (83). இவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் துறை பேராசிரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதன் பிறகு, கோவையில் உள்ள பல தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார். மேலும், காந்திபுரம் பகுதியில் க்ளினிக் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 28-ம் தேதி அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் பிரனேஷ்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
Also Read: அதிகரிக்கும் கொரோனா தொற்று... அலைக்கழிக்கப்படும் நோயாளிகள்!
இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவை மவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு முதல் முறையாக மருத்துவர் ஒருவர் உயிரிழந்தது மருத்துவர்கள், பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரன் தனது முகநூல் பக்கத்தில், ``எங்களது நரம்பியல் மருத்துவப் பேராசிரியர் கொரோனா நோயால் மரணமடைந்த செய்தி மனதை கனக்க செய்துவிட்டது. மனதில் பதிய வைத்து வகுப்பெடுக்க அவரைப் போல வேறு யாரும் இல்லை. வகுப்பு முடித்துவிட்டு, எங்களை ஹோட்டலுக்கு அழைத்து சென்று சாப்பாடு வாங்கிக் கொடுப்பார். எனக்கிருந்த கிட்னி பிரச்னையை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, நான் எம்.எஸ் படிக்கத் துணையாக இருந்தார்.
பேராசிரியர் குறித்து எனது மகன் விஷ்ணுவின் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். விஷ்ணுவின் உற்ற நண்பன் பெயரும் பிரனேஷ் தான். அதற்கு பிரனேஷ், `என் அம்மாவுக்கு எங்கே போகியும், சரியாக நரம்பு தளர்ச்சிக்கு சிகிச்சை கொடுத்தது அவர்தான். அதனால், அவருக்கு நன்றி சொல்லத்தான், அப்பா எனக்கு அந்தப் பெயரை வைத்தார்’ என்றான். இன்றைய தினம் மருத்துவ உலகு ஒரு சகாப்தத்தையே இழந்து நிற்கிறது’’ என்று கூறியுள்ளார்.
Also Read: “ட்ரீட்மென்ட்லாம் ஒண்ணும் சரியில்லை!” - மனதை உலுக்கும் மருத்துவர் சாந்தி லால் மரணம்
``அவர் கோவை மாவட்டம் மட்டுமல்ல, அதைச் சுற்றியுள்ள எல்லா ஊர் மக்களின் நாடி நரம்புகளில் வாழ்பவர். அவர் வைத்தியத்தை விட, நோயாளிகளிடம் அவரின் அணுகுமுறையே அவரை இவ்வளவு பெரிய உச்சத்துக்கு கொண்டு சென்றது. தினமும் நள்ளிரவு 2 மணி வரை காத்திருந்து இவரைப் பார்த்துச் செல்வார்கள். எப்படியோ, ஒரு நோயாளி மூலம் கொரோனா வந்து, இவர் பலியானது துரதிர்ஷ்டத்தின் உச்சம். மரணம் தவிர்க்க முடியாதது.
ஆனால் இவரின்றி இவரை நம்பி வந்த ஏழைபாழை நோயாளிகளுக்கு இனி ஏற்படப் போகும் மரணங்கள் தவிர்க்க இயலாதது. அதுதான் இழப்பு” என்று மருத்துவர் பிரனேஷ் மரணத்துக்கு, அவரது உறவினர்கள், மருத்துவர்கள், அவரால் பலனடைந்த பொது மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
source https://www.vikatan.com/news/death/coimbatore-neurology-doctor-pranesh-died-of-corona-infection
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக