எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையையும் ஒரு குறிப்பிட்ட சம்பவத்துக்கு முன், பின் என்ற இரண்டு காலங்களாகப் பிரிக்கலாம். ஆனால் உலகத்தையே முன், பின் என்ற மாற்ற வைத்த பெருமை கொரோனாவையே சாரும். கொரோனாவின் தாக்கத்துக்குப் பிறகு அனைத்துத் துறைகளும் ஏதோ ஒரு மாற்றத்தைக் கண்டுள்ளன. அப்படி ஒரு புதிய மாற்றத்துக்குள் நுழைந்திருக்கிறது ஹோட்டல் துறை.
லாக்டௌன் பாதிப்பால் ஏற்பட்ட வேலையிழப்பு ஸ்டார் ஹோட்டல் செஃப்களையும் பாதித்திருக்கிறது. ஸ்டார் ஹோட்டல்களுக்கு பயணிகள் வரத்து முழுவதுமாகத் தடைப்பட்டுவிட்டது. சென்னையைப் பொறுத்தவரை கணிசமான எண்ணிக்கையிலான ஸ்டார் ஹோட்டல்கள் கோவிட்-19 பணிகளில் ஈடுபட்ட மருத்துவர் தங்கும் க்வாரன்டீன் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பியவர்களையும் ஸ்டார் ஹோட்டல்களில்தான் க்வாரன்டீன் செய்கிறார்கள். இதுபோன்ற காரணங்களால் 50 சதவிகித செஃப்கள் வேலையிழந்துள்ளனர். மீதமுள்ள செஃப்களும் ஊதியக் குறைப்பு, தாமதமான ஊதியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
க்ளவுட் கிச்சன்
இந்தச் சூழலில்தான் க்ளவுட் கிச்சன் என்ற புதிய முறை வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது; குறிப்பாக சென்னையில். அதென்ன க்ளவுட் கிச்சன்? ஹோட்டல் கிச்சனை அப்படியே சுருக்கி வீட்டு கிச்சனுக்குள் கொண்டு வந்தால் அதான் க்ளவுட் கிச்சன். வீட்டு மொட்டைமாடியில், வீட்டு சமையலறை அல்லது வீட்டு வளாகத்தில் ஒரு சிறிய இடத்தில் சமையலறையை அமைத்து, ரெசிபிக்களை தயார் செய்து `டேக் அவே' முறையில் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதுதான் க்ளவுட் கிச்சன்.
சிறிய இடம், குறைவான உட்கட்டமைப்பு வசதிகள், குறைவான மூலப் பொருள்களை வைத்து இதைத் தொடங்கிவிடலாம். வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான இந்த க்ளவுட் கிச்சன் இந்தியாவிலும் வேரூன்றத் தொடங்கிவிட்டது என்றாலும் லாக்டௌன் காலத்தில் இதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இந்த லாக்டௌன் காலத்தில் சுமார் 150 செஃப்கள் க்ளவுட் கிச்சன் தொழிலைத் தொடங்கியிருக்கின்றனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய க்ளவுட் கிச்சன் நிபுணரும் க்ரிம்சன் சக்ரா ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான நிகில் மொட்டூரி, ``ஓராண்டுக்கு முன்பே சென்னையில் க்ளவுட் கிச்சன் முறையைத் தொடங்கிவிட்டேன். சென்னையில் இதுவரை 14 இடங்களில் நடத்தி வருகிறேன்.
லாக்டௌன் காலத்தில் இந்த முறைக்கு வாடிக்கையாளர்களிடமிருந்தும் புதிய தொழில் தொடங்க விரும்புவோரிடமிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சாதாரண ஹோட்டல் தொடங்க வேண்டுமென்றால் அதற்கென்று இடம் பார்க்க வேண்டும், இன்டீரியர், ஏ.சி வசதி எனப் பல்வேறு விஷயங்களில் முதலீடு செய்ய வேண்டும். குறைந்தது ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் முதலீடு தேவைப்படும்.
இதுபோன்ற முதலீட்டுச் செலவுகள் இல்லாதததால் உணவையும் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியும். நிறைவான லாபத்தையும் பார்க்க முடியும். சராசரியான ஒரு க்ளவுட் கிச்சன் தொடங்குவதற்கு 250 - 300 சதுர அடி இடம் இருந்தால் போதும். முதலீடும் மிக மிகக் குறைவுதான்.
அதிகமான எண்ணிக்கையில் காணப்படும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பேச்சிலர்கள், குடும்பத்தினரை இலக்காகக் கொண்டு அவர்களுக்கேற்ற உணவுகளைத் தயாரிக்கலாம். இந்தியன், சைனீஸ், இத்தாலி, தாய் என குறிப்பிட்ட உணவுமுறைகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி விளம்பரங்களைச் செய்யலாம். ஸ்விக்கி, ஸோமேட்டோ போன்ற செயலிகளில் கிச்சனை இணைத்துவிட்டால், ஆர்டர்கள் வரத் தொடங்கும். க்ளவுட் கிச்சன் சிறந்த தொழில்தான் என்றாலும் அதைத் தொடங்குவதற்கு முன்பாக அதுபற்றி நன்றாக அறிந்துகொண்டு செயலில் இறங்க வேண்டும்.
குறைவான வாடிக்கையாளர்களை வைத்து நீண்ட நாள்களுக்கு இதை நடத்த முடியாது. வாடிக்கையாளர்கள் அதிக அளவில் ஆர்டர் செய்வதற்கான உத்திகளையும் தீர்மானிக்க வேண்டும். க்ளவுட் கிச்சன் கான்செப்ட் நிறைய பேரை ஈர்த்துள்ளதால், லாக்டௌன் முடிந்து இயல்புக்குத் திரும்பும்போது ஹோட்டல் தொழிலிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.
ருசி எப்படி?
க்ளவுட் கிச்சன் உணவுகளின் நிறை குறை என்ன என்று தெரிந்துகொள்ள, சுமார் ஓராண்டாக அதன் வாடிக்கையாளரான பெங்களூரில் பணியாற்றும் பன்னாட்டு நிறுவன ஊழியர் பிரசாத் எதிரெட்டியிடம் பேசினோம்:
``வழக்கமாக க்ளவுட் கிச்சன்களில்தான் ஆர்டர் செய்து சாப்பிடுவேன். நறுமணப் பொருள்கள், காரம் ஆகியவற்றை வீட்டில் செய்வது போன்ற குறைவான அளவிலேயே பயன்படுத்தியிருப்பார்கள். விலையும் ஹோட்டல் உணவைவிட குறைவாகவே இருக்கும்.
Also Read: தினமும் 1500 பேருக்கு சாப்பாடு போடும் Varalaxmi Amma | Migrant Labours | Lockdown
அங்கு ஆர்டர் செய்யும் உணவுகள் 80 சதவிகிதம் நன்றாகவே இருக்கும். ஆனால், குறைவான ரெசிபிக்கள் மட்டுமே கிடைக்கும். சில நேரங்களில் உணவைச் சரியாக பேக் செய்ய மாட்டார்கள். அதனால் ஒன்றுடன் ஒன்று கலந்துவிடும்" என்கிறார்.
ஒரு சில குறைகளில் கவனம் செலுத்திவிட்டால் க்ளவுட் கிச்சன் சிறந்த தொழிலாகவே இருக்கும்.
source https://www.vikatan.com/food/food/chefs-starts-cloud-kitchens-instead-of-hotels-amidst-this-lockdown
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக