Ad

சனி, 1 ஆகஸ்ட், 2020

கொரோனா: `என்னையே உதாரணமாகக் காட்டுகிறேன்!’ இளம் பெண் மருத்துவரின் நம்பிக்கை வரிகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் மருத்துவர்:

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான மிதுனா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் படித்து வருகிறார். இளம் மருத்துவரான இவர் ஜிப்மர் கொரோனா சிறப்புப் பிரிவில் பணிபுரிந்தபோது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் மருத்துவர் இவர்தான். நோய் தொற்றில் இருந்து முற்றிலும் குணமடைந்துவிட்ட மிதுனா, நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காகத் தற்போது மீண்டும் கொரோனா பிரிவில் பணியைத் துவங்கியிருக்கிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக அனைவரிடமும் ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்தை போக்கவும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை ஊக்குவிக்கவும் தனது அனுபவங்களை கடிதமாக எழுதியிருக்கிறார்.

ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் உணர்வுமிக்க வார்த்தைகள் நிரம்பிய அந்தக் கடிதம் இப்படித் துவங்குகிறது, “எல்லாம் அந்த போன் அழைப்பிலிருந்து துவங்கியது. எனக்கு கொரோனா தொற்று இல்லை என்ற வார்த்தைகளைக் கேட்பதற்காக எனது செல்போனை எடுத்தேன். ஆனால், மறுமுனையில் பேசியவர் அதற்கு எதிர்மறையான பதிலை அளித்ததால் நான் குழப்பமடைந்தேன். அதனால் பயம் மற்றும் உணர்வின்மை ஆகியவற்றின் கலவை என்னை ஆக்கிரமித்தது. பாதுகாப்பு கவச உடை அணிந்த மருத்துவப் பணியாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் என்னை அழைத்துச் செல்ல வீட்டுக்கு வருவார்கள் என்ற தவிப்பு அப்போது மேலோங்கி இருந்தது. மே 30-ம் தேதி என் வாழ்வில் மறக்கவே முடியாத நாளாக மாறியது. அன்றுதான் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனது ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் மருத்துவர் நான்தான்.

’நான் தனியாகப் போராடவில்லை’

சில நாட்களுக்கு முன்பு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் குழுவில் ஒருவராக எனது கடமையை செய்தேன். அதனால் கண்டிப்பாக எனக்கு கொரோனா தொற்று இருக்காது என்று 110 சதவிகிதம் உறுதியாக இருந்தேன். ஆனாலும் எனக்கு அந்த தொற்று ஏற்பட்டது அதிர்ச்சியாவே இருந்தது. அப்போது எனக்குள் தைரியத்தை வரவழைத்துக்கொள்ள சிறிது அவகாசம் தேவைப்பட்டது. என்னுடன் தங்கியிருந்த தோழியின் ஆதரவு மட்டுமே அன்று என்னை சகஜ நிலைக்கு கொண்டுவந்தது. அதேசமயம், என் மூலமாக அவளுக்கும், நண்பர்களுக்கும், என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற குற்ற உணர்வு எனக்குள் தோன்றியது. இந்தக் குழப்பங்களுக்கிடையில் எனது குடும்பத்தினருக்கு இந்த விஷயத்தை தெரிவிப்பது குறித்தும் முடிவெடுக்க வேண்டியிருந்தது. ஆனால், இதைக் கேட்டு அவர்கள் கலக்கமடைவார்கள் என்ற கவலை, பெற்றோரிடம் பகிரும் எண்ணத்தைத் தடுத்தது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை

ஆனாலும் என் சகோதரி மற்றும் சகோதரனை தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தேன். எனது சகோதரி அப்போது அதனைப் பற்றி கவலைப்படாமல் இருந்தது எனக்கு ஆச்சர்யமாகவே இருந்தது. ஒருவேளை அவள் அதிர்ச்சியை வெளிக்காட்டவில்லையா என்பது எனக்கு தெரியவில்லை. பெரியவளாக இருப்பதால் மிகவும் முதிர்ந்த முறையில் நிலைமையை எவ்வாறு கையாள்வது என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. ’இந்த தொற்றிலிருந்து குணமடைய நான் உங்களுக்காக பிரார்த்தனை செய்வேன்’ என்று கூறிய எனது பேராசிரியர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், எலக்ட்ரீஷியன் அனைவருக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். அந்தத் தருணம்தான் இந்த நோய் தொற்றை எதிர்த்து நான் தனியாக போராடவில்லை என்பதை எனக்கு உணர்த்தியது. மேலும், அந்தச் சூழலில் எனக்கு தேவையான மன தைரியத்தையும் கொடுத்தது.

`சித்ரவதை செய்யாதீர்கள்’

”உங்களுடன் பணிபுரிபவர்கள் அல்லது நண்பர்களில் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டால், தயவுசெய்து ’உனக்கு இது எப்படி தொற்றியது?’, ’உன்னால் எத்தனை பேருக்கு தொற்றியது?’ போன்ற கேள்விகளைக் கேட்டு அவர்களை சித்ரவதை செய்யாதீர்கள். இது உங்கள் விவாதத்திற்கான கேள்வி பதில் நேரம் இல்லை. நீங்கள் அந்தக் கேள்விகளை சாதாரணமாகக்கூட கேட்டிருக்கலாம். ஆனால், கேள்விக்குள்ளாகும் நபரின் மனதில் ஏற்படும் தாக்கம், குற்ற உணர்ச்சி, பயம், குழப்பமான மனநிலையை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. அதற்கு பதிலாக ஆதரவாகப் பேசி, அவர்களுக்கு விரைவில் சரியாகிவிடும் என்று நம்பிக்கையை கொடுங்கள். கைதட்டுவதும், விளக்கேற்றுவதும் மட்டும் மருத்துவத் துறையினரை ஆதரிக்க போதுமானது அல்ல.

உங்களுக்கு அருகிலுள்ள ஒருவர் நோய் தொற்றுக்கு உள்ளாகும்போது அவர்களது நிலை அறிந்து ஒற்றுமையைக் காட்டுவதே உண்மையான ஆதரவு. எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டபோது, என் வீட்டுக்கு அருகில் இருந்த சிலர் பிரச்னை செய்தனர். அவர்கள்தான் சில நாள்களுக்கு முன்பு கைதட்டியும் விளக்கு ஏற்றியும் மருத்துவத் துறையினரை கொண்டாடினர்.

கொரோனா வார்டில் மருத்துவர் மிதுனா

அதே நேரத்தில் அனைத்து தரப்பினரும் தங்களது மனிதாபிமானத்தை இழக்கவில்லை என்பதையும் உணர்ந்தேன். நான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மிகவும் ஆதரவாக இருந்தார். வீட்டுக்கு திரும்பி வந்தபோது அக்கம்பக்கத்து வீடுகளில் வசிக்கும் சிலர் என்னுடன் ஆதரவாகப் பேசினார்கள். கொரோனா நோயாளிகளுடன் தொடர்புடைய களங்கத்தின் கதைகளால் உருவாக்கப்பட்ட பல சந்தேகங்களுடன் கொரோனா தொற்றிலிருந்து நான் குணமடைந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கொரோனா வார்டில் பணியாற்றத் தொடங்கினேன். ஆனால், உண்மையில் ஒவ்வொரு நாளும் என்னைச் சுற்றியுள்ளவர்கள் எனக்கு 'ஹாய்' சொல்வதை நிறுத்துவதை உணர்ந்தேன். நான் நன்றாக இருக்கிறேனா என்று கேட்க மாட்டார்கள். என் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்த மாட்டார்கள். ஒரு சிலர் பயத்துடன் விலகிச் செல்வதையும் நான் உணர்ந்தேன்.

`நீங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்கு சூப்பர் ஹீரோதான்’

பரவாயில்லை அது அவர்களுடைய அச்சத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். பிறகு, நான் குணமடைவதற்காக பிரார்த்தனை செய்துகொண்டிருந்த பலரும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று உண்மை என் மனதுக்கு அமைதியைக் கொடுத்தது. கொரோனா வார்டில் மீண்டும் சென்று பணியாற்றுவதற்கு நான் பயப்படவில்லை என்று சொல்ல முடியாது. எனது நரம்புகளில் சிறிதளவு தளர்வும் வயிற்றில் பயம் கலந்த உணர்வும் இருந்தது. மனிதர்களின் பொதுவான இயல்பு இது. அதேசமயம், எனக்குள் இருக்கும் உந்துதல் சக்திதான் அந்த பயத்தை போக்குவதற்கு எனக்கு உதவுகிறது.

கொரோனா வைரஸ்

சுற்றியுள்ள மக்களுக்கு உதவுவதற்கான உத்வேகத்துடனும், வைரஸை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற எடுத்துக்காட்டுடனும், நோயாளிகளை வழி நடத்துவதை ஒரு மருத்துவராக எனது கடமையாகப் பார்க்கிறேன். இப்போது என் நோயாளிகளுக்கு நம்பிக்கையை ஊட்டி, அவர்களை பயத்திலிருந்து நீக்க உதவும் ஒரு எடுத்துக்காட்டாக என்னையே மேற்கோள் காட்டி, அதிக நம்பிக்கையுடன் அவர்களுக்கு உறுதியளிக்க உதவுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று அவர்களிடம் உணர்வுபூர்வமான நம்பிக்கையை என்னால் ஏற்படுத்த முடிகிறது. ஒரே நேரத்தில் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டால் எங்களால் கவனிக்க முடியாது. முழு கவச உடையுடன் பலமணி நேரம் நிற்பது அவ்வளவு எளிதானது அல்ல. நாங்களும், சுகாதாரப் பணியாளர்களும் உயிர்களைக் காப்பாற்ற எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம். அதனால் நீங்கள் வீட்டிலேயே தங்கி, சந்திக்கும் நபர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, முகக்கவசம் அணிந்துகொள்வதன் மூலம் நீங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்கு கடவுள்தான். சூப்பர் ஹீரோதான்” என்று முடித்திருக்கிறார் அந்த இளம் நம்பிக்கை மருத்துவர்.



source https://www.vikatan.com/news/india/a-letter-by-the-first-doctor-who-to-be-diagnosed-with-corona-infection-in-puducherry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக