Ad

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

சென்னை: `பெட்ஷீட்டுக்கு ரூ.12 லட்சம், சொகுசு கார்!’ - ஆசையைத் தூண்டி வலைவிரித்த கும்பல்

சென்னை சோழிங்கநல்லூர், காந்தி நகர், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (38). இவர், வீட்டின் அருகே ஓ.எம்.ஆர். சாலையில் பஞ்சர் கடை வைத்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி ஆன்லைன் மூலம் 350 ரூபாய் மதிப்புள்ள பெட்ஷீட் ஆர்டர் செய்தார். அதன்படி அவருக்கு பெட்ஷீட் சில தினங்களுக்கு முன் டெலிவரி செய்யப்பட்டது. அதன்பிறகு சுரேஷ், வழக்கமான தன்னுடைய பணியில் ஈடுபட்டுவந்தார்.

சுரேஷ்

இந்தநிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் சுரேஷின் செல்போன் நம்பருக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசியவர், தன்னை பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் மேனேஜர் சுஜித் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர், சுரேஷிடம், `நீங்கள்தான் பெட்ஷீட்டை எங்களின் ஆன்லைன் நிறுவனத்தில் வாங்கினீர்களா’ என்று கேட்டுள்ளார். அதற்கு சுரேசும், ஆமாம் என்று பதிலளித்துள்ளார். எங்கள் நிறுவனத்தின் மூலம் நீங்கள் பொருள் வாங்கியதற்கு பம்பர் பரிசாக 12.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் கிடைத்துள்ளது. சொகுசு கார் வேண்டாம் என்றால் அரை மணி நேரத்தில் பணமாக உங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று மேனேஜர் கூறியுள்ளார்.

பின்னர் மேனேஜர், நீங்கள் பரிசை பெற வேண்டும் என்றால் ஒரு சதவிகிதம் tds செலுத்த வேண்டும். மேலும் 12,800 ரூபாய் எங்கள் நிறுவன வங்கி கணக்கில் டெபாசிட் செய்தவுடன் கார் டெலிவரி செய்யப்படும் என்று மேனேஜர் கூறியுள்ளார். இதையடுத்து சுரேசின் ஆதார் கார்டு, போட்டோ, வங்கி பாஸ்புக்கின் முன்பக்க ஜெராக்ஸ் ஆகியவற்றை குறிப்பிட்ட வாட்ஸ்அப் நம்பருக்கு உடனடியாக அனுப்பும்படி மேனேஜர் தெரிவித்தார். மேனேஜர் கூறிய தகவல்கள் சுரேசுக்கு சந்தோஷமாக இருந்தாலும் சந்தேகமாகவும் இருந்தது.

அனுப்பப்பட்ட மெசேஜ்

ஏனென்றால் கடந்த சில தினங்களுக்கு முன் ஓ.எம்.ஆர். சாலை பகுதியில் 2 பேர் இதுபோல ஏமாந்த தகவல் சுரேஷிக்கு நினைவுக்கு வந்தது. அதனால், என்ன செய்வது என்று குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் சுரேஷ் ஆலோசித்தார். அப்போது, பணம் அனுப்புவதற்கு முன் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என கருதினார். இதையடுத்து செம்ஞ்சேரி காவல் நிலையத்துக்கு சுரேஷ் சென்று, அங்கு பணியிலிருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் ஐயப்பன், கார்த்திகேயனிடம் சுரேஷ் விவரத்தையும், செல்போனுக்கு வந்த மெசேஜ்களையும் காண்பித்தார்.

இந்தச் சமயத்தில் சுரேஷின் செல்போனுக்கு ஆன்லைன் ஷாப்பிங் மேனேஜர் என்று கூறியவர் மீண்டும் கால் செய்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டரே போனை எடுத்து பேசினார். உடனே மேனேஜர், ஏன் இன்னும் நீங்கள் போட்டோ, ஆதார் கார்டு போன்ற விவரங்களை அனுப்பவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு சப்-இன்ஸ்பெக்டர், நீங்கள் நேரில் வந்து போட்டோ, ஆதார்கார்டு ஆகியவற்றை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு, மேனேஜர், உங்களுக்கு பரிசு வேண்டும் என்றால் அனுப்புங்கள் என்று தெரிவித்துள்ளார். உடனே சப்-இன்ஸ்பெக்டர், நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள் என்று கேட்டதும் போனிலேயே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அனுப்பப்பட்ட மெசேஜ்

Also Read: சென்னை: மகளிடம் தவறாக நடந்த தந்தை; காட்டிக்கொடுத்த பாட்டி! - போதையால் மாறிய பாதை

இதையடுத்து ஆன்லைன் நிறுவன மேனேஜர், இணைப்பை துண்டித்துள்ளார். அதன்பிறகு சுரேஷிடம் போலீஸார், இதுபோன்ற மோசடி அழைப்புகளை நம்பி பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என்று அறிவுரைக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து சுரேஷிடம் பேசினோம். ``350 ரூபாய்க்கு பெட்ஷீட்டுக்கு யாராவது 12,80,000 ரூபாய் மதிப்பிலான சொகுசு கார் கொடுப்பதாகக் கூறியதும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அந்தக் காரை வாங்க 12,800 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறியபோது சந்தேகம் உறுதியானது. அதனால்தான் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தேன். சதுரங்க வேட்டை படத்தைப் போல ஆசையைத் தூண்டி ஆன்லைனில் மோசடி செய்வதை ஒரு கும்பல் வாடிக்கையாக வைத்துள்ளது. ஃபேஸ்புக்கில் மேனேஜரின் செல்போன் நம்பரை பதிவு செய்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் தகவல்களை பதிவு செய்துள்ளனர். புத்திச்சாலித்தனமாக செயல்பட்டதால் நான் ஏமாறவில்லை" என்றார்.

ஊரடங்கு காலக்கட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளன. அதனால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்திவருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/online-fraud-gang-tries-to-cheat-chennai-man

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக