Ad

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

விநாயகர் ட்வீட்: `பகுத்தறிவு பேசும் உதயநிதி பதில் சொல்லவேண்டும்' - நாம்தமிழர் கட்சி கேள்வி!

தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் படத்தைப் பதிவிட்டதுதான் தமிழக அரசியலில் ஆகப்பெரும் விவாதமாக இப்போது மாறிவருகிறது. `இதுநாள்வரை பகுத்தறிவுக் கொள்கைகளைப் பேசி வளர்ந்து வந்த தி.மு.க., இந்துத்துவாவை நோக்கிய பயணத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இதற்கு உதாரணமாக, `தி.மு.க தொண்டர்களில் 90 சதவிகிதம் பேர் இந்துக்களே...’ என்று அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த காலத்தில் குறிப்பிட்டதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனர் இவர்கள்.

உதயநிதி பதிவிட்ட விநாயகர் படம்

` `மதச்சார்பற்ற நாடு இந்தியா' என்ற அடிப்படைக் கொள்கையையும் இறையாண்மையையும் தகர்த்தெறியும்விதமாக ஒட்டுமொத்த அரசியலும் மதவாதத்தை நோக்கியே சென்றுகொண்டிருப்பது, இந்திய ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து’ என்கின்றனர் நடுநிலைவாதிகள். இந்திய அரசியலில், பெரும்பான்மையான மாநிலங்கள் மதவாதத்தைத் தூக்கிப்பிடித்து நின்றுகொண்டிருக்கும் சூழலிலும் தென் மாநிலங்கள் குறிப்பாக, தமிழ்நாடு மட்டும்தான் மதவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் நிலையாக, உறுதியாக இருந்து வருகிறது. இதற்கான அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தி, மக்களிடையே தெளிவானதொரு புரிதலை ஏற்படுத்திவைத்திருப்பது இங்குள்ள திராவிட இயக்கங்களின் அளப்பரிய பணி.

ஆனால், `அண்மைக்காலமாக மத வெறுப்பை மட்டுமே முன்னிறுத்தி, மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, அரசியல் ஆதாயம் அடையத் துடிப்பவர்களின் செயல்பாடு நாடு முழுக்கவே அதிகரித்து வருகிறது. இந்தப் பிற்போக்கு சக்திகளின் அரசியலை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டிய இயக்கங்களே இது போன்று அடிபணியத் தொடங்கியிருப்பது நாட்டுக்கு நல்லதல்ல' என்கின்றனர் மூத்த அரசியல் விமர்சகர்கள்.

உதயநிதியின் பதிவைத் தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் விவாதங்கள் அனல்பறக்கத் தொடங்கியதையடுத்து, உதயநிதியே இது குறித்த விளக்கம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதில், `எனக்கோ என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், என் தாயாருக்கு அந்த நம்பிக்கை உண்டு.

உதயநிதியின் விளக்கம்

பிள்ளையார் சதுர்த்திக்காக என் அம்மா வாங்கியிருந்த சிலையுடன் ஒரு போட்டோ எடுத்துத்தரும்படி என் மகள் கேட்டதின் பேரில், நான்தான் அந்தப் புகைப்படத்தை எடுத்தேன். மகளின் விருப்பத்துக்காகவே ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்தேன்' என்று கூறியிருக்கிறார். ஆனாலும்கூட, இந்த விஷயத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிட விரும்பாத எதிர்த்தரப்பினர், கடந்த காலங்களில் உதயநிதி ஸ்டாலின் பழநி கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, `கடவுள் நம்பிக்கை அற்றவர் ஏன் பழநி கோயிலுக்குச் சென்றார்... பஞ்சாமிர்தம் வாங்கவா..?’ என்று கிண்டலாகக் கேள்வியெழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.

இந்தநிலையில், இந்த விவகாரத்தை திராவிட இயக்கங்கள் எப்படிப் பார்க்கின்றன.... என்ற கேள்விக்கு விடைதேடி, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் பேசினோம்....

``சாவர்க்கரும் மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்தான். கோயிலுக்குப் போகாதவர்தான். ஆனால், அவரை முன்வைத்துத்தான் இந்துத்துவவாதிகள் எல்லா காரியங்களையும் முன்னெடுத்துச் செய்கிறார்கள். நாடாளுமன்றத்திலேயே அவரது புகைப்படத்தையும் திறந்துவைத்திருக்கிறார்கள்.

கொளத்தூர் மணி

ஆக, `நாத்திகர்களை இந்து என ஏற்றுக்கொள்ள முடியாது' என்று சொன்னால், முதலில் சாவர்க்கரையே இவர்கள் மறுக்க வேண்டும். சாவர்க்கரின் நாத்திகமும் நம்முடைய நாத்திகக் கருத்துகளும் ஒன்றல்ல... ஏனெனில், `பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள்' என்ற நம்பிக்கையை சாவர்க்கர் கொண்டிருந்தார். ஆனால், நம்முடைய நாத்திகம் என்பது `பிறப்பின் அடிப்படையில் யாரொருவரும் உயர்ந்தவர் - தாழ்ந்தவர் அல்ல’ என்ற மக்களுக்கான நாத்திகம்.

இதேபோல், இஸ்லாமியர்களுக்கான நாட்டை வென்றெடுத்துக் கொடுத்த ஜின்னாவும்கூட, அவர்களது மத அடையாளமாக தாடி வைத்துக்கொண்டதில்லை; மசூதிக்குச் சென்றதில்லை... பார்சி பெண்ணைத்தான் திருமணம் செய்துகொண்டார். மது அருந்தியிருக்கிறார். பன்றிக் கறி சாப்பிட்டிருக்கிறார். இப்படி இஸ்லாமிய மதத்துக்கு மாறான பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தவர் என்றாலும்கூட `இவர்தான் நம் நலனுக்கும் பாதுகாப்புக்குமான தலைவர்' என்று இஸ்லாமிய மக்கள் ஜின்னாமீது முழு நம்பிக்கைவைத்திருந்தனர். பெரியாரையும் நம் மக்கள் இப்படியான ஒரு தலைவராகத்தான் பார்த்தார்கள். இப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே, ஒருவரது நம்பிக்கை என்னவாக இருக்கிறது என்று பார்ப்பதைவிடவும் அவரது செயல்பாடு எப்படி இருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும். தமிழக பா.ஜ.க-வுக்கு எல்.முருகன் பெயரளவில்தான் தலைவராக இருக்கிறார். மற்றபடி ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர், கே.டி.ராகவன், நாராயணன் திருப்பதி போன்றோர்தான் பொதுவெளியில் பா.ஜ.க தலைவர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது ஒருவர் பெரும்பான்மையான தமிழ் மக்கள் வணங்கக்கூடிய மாரியம்மன், காளி, முனியாண்டி, சுடலையாண்டி கோயிலுக்கு வந்து வணங்கியிருக்கிறார்களா அல்லது இங்கு நடைபெற்றுவரும் திருவிழா உள்ளிட்ட சடங்குகளிலாவது தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்களா?

எல்.முருகன்

பார்ப்பனக் கடவுள்களை மட்டுமே ஏற்றுக்கொண்டு அந்தக் கடவுளர்களுக்கு மட்டுமே சடங்குகளை செய்துகொண்டிருப்பவர்கள். இப்போதும்கூட, முருகக் கடவுள் இவர்களது வீட்டு வாசலைத் தாண்டி உள்ளே செல்ல முடியாமல் ஃப்ளெக்ஸோடு நின்றுவிடுகிறார். சைவத்தைப் பரப்பும்விதமாக இறைவனை உருகி உருகிப் பாடிய மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பெயர்களைக்கூட தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டிக்கொள்ள மனமில்லாதவர்கள். இப்படி தமிழ்நாட்டின் பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிராக இருந்துவரக்கூடியவர்கள்தான், `இந்துக்களின் பாதுகாவலர்கள்' என்று தங்களைச் சொல்லிக்கொள்கிறார்கள். அது மட்டுமல்ல... பெரும்பான்மை இந்துக்களின் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்களையும்கூட, `இந்துக்களின் எதிரி' என்று கட்டமைக்கின்ற பொய்ப் பிரசாரத்தையும் தொடர்ந்து செய்துவருகிறார்கள். எனவே, இந்து மக்களின் உரிமைகளுக்காக உண்மையாகப் போராடுகிறவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.

ஆனால் இந்த விவகாரத்தில், ``தி.மு.க தன் கொள்கை நிலைப்பாட்டிலிருந்து விலகிச் செல்கிறது’’ என்கிறார் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான ராஜீவ்காந்தி. இது குறித்துப் பேசும் அவர்,

``ஒவ்வொருவருக்கும் வழிபாட்டு உரிமை இருக்கிறது என்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். அதேசமயம், `பெரியாரியம் பேசுகிறேன்; பகுத்தறிவு பேசுகிறேன்’ என்று சொல்லிக்கொள்பவர்களே இது போன்று செயல்படுவதை முழுக்க முழுக்க வாக்கு வங்கி அரசியலாகத்தான் பார்க்கிறேன்.

ராஜீவ்காந்தி

ஏனெனில், பிள்ளையார் சிலைகளை பெரியார் உடைத்தபோது, `நாங்கள் பிள்ளையாரை வணங்குவதும் இல்லை; உடைப்பதும் இல்லை' என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா. எனவே, வழிபாடு என்பது பூஜையறையோடு இருக்க வேண்டும். அதைப் பொதுவெளியில் கொண்டு வந்து அரசியலில் கலக்கக் கூடாது. இன்றைக்கு மதவாதத்தைக் கையிலெடுக்கிறது பா.ஜ.க. இந்தச் சூழலில், `இது போன்ற வேலைகளைச் செய்தால்தான் அது வாக்குவங்கியாகத் தங்களைக் காப்பாற்றும்' என்று நினைக்கிறது தி.மு.க. ஆக, இத்தனை ஆண்டுகாலமாக இவர்கள் பேசிவந்த பகுத்தறிவு என்பதும்கூட போலி பகுத்தறிவுதான் என்றே விளங்குகிறது.

உதாரணமாக நான்கூட, அடிப்படையில் கடவுள் மறுப்பு கொள்கை பேசுகிறவன்தான். ஆனாலும்கூட நாம் தமிழர் கட்சி சார்பாக நாங்கள் பேசும் `முருக வழிபாடு’ என்பது, பண்பாட்டுக் குறியீட்டை அடிப்படையாகக்கொண்டதுதான். ஏனெனில், ஏற்கெனவே இங்குள்ள சிறுதெய்வ வழிபாடுகளை ஒழித்துக்கட்டி, ஒட்டுமொத்த மதவாதத்தின் ஒற்றைக் குறியீடாக விநாயகரைக் கொண்டுவந்து நிறுத்துவதுதான் விநாயகர் வழிபாடு. அதனால்தான் தைப்பூசத் திருவிழாவுக்கு வராத கலவரம், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது மட்டும் வருகிறது. இந்த மதவாதத்தைத்தான் தங்களது உரிமையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர் பா.ஜ.க-வினர். ஆக, இதைத் தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டிய நாமே, அதே ஆயுதத்தைக் கையிலெடுத்திருப்பதென்பது திரும்பவும் மதவாதத்துக்குத்தான் வழிவகுக்கும்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

கருத்துரீதியாக இந்த விஷயத்தைக் கையிலெடுத்து விவாதிப்பதென்பது வேறு... அதாவது, இங்குள்ள சிறுதெய்வ வழிபாட்டு முறைகள் மற்றும் சைவ, வைணவ மதங்கள் அனைத்தும் மறுக்கப்பட்டு, வைதீக அடையாளங்கள் மட்டுமே ஒட்டுமொத்த மத அடையாளமாக மாற்றப்பட்டிருப்பதும், அதன் அரசியல் குறியீடாக விநாயகரை முன்னிறுத்துவதுமான விஷயங்கள் குறித்து தாராளமாக விமர்சிக்கலாம். ஆண்டாண்டு காலமாக வைதீக எதிர்ப்பு குறித்துப் பேசிய திராவிட இயக்கங்கள், இன்றைக்கு அதே வைதீகக் குறியீடான விநாயகரைத் தூக்கிப் பிடிக்கும்போதுதான் சிக்கல் எழுகிறது.

Also Read: பா.ஜ.க-வில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை... உங்கள் கருத்து என்ன? #VikatanPoll

தனிப்பட்ட எனக்கோ, உதயநிதி ஸ்டாலினுக்கோ அல்லது பிரதமர் மோடிக்கோ மதம் இருக்கலாம். அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், ஓர் அரசுக்கே இதுதான் மத அடையாளம் என்ற ஒன்றைக் கொண்டு வந்து திணிக்கிற வேலையை இங்கே பா.ஜ.க செய்துகொண்டிருக்கிறது. மதச்சார்பற்ற அரசியலைப் பேசும் இந்தியாவில், ஒற்றை மத வழிபாட்டை மட்டுமே திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. இதை அடியோடு மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது. ஆனால், அதோடு நாமும் சேர்ந்துகொண்டு பயணிப்பதென்பது மோசமான அரசியல்.

பேரறிஞர் அண்ணா - பெரியார்

`முருகனுக்கு மொட்டை போட்டால், முடிதான் வளரும்; மூளை வளராது’ என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை. முருக வழிபாடு என்பது எனது பண்பாட்டுக் குறீயீடு மட்டுமே. கடவுள் இல்லை என்பது எப்படி என் நம்பிக்கையாக இருக்கிறதோ, அதேபோல் கடவுள் உண்டு என்பது அவர்களுடைய நம்பிக்கை... அவ்வளவுதான். மற்றபடி என் நம்பிக்கையை யாரிடமும் கொண்டுபோய் நான் திணிக்கவில்லை.

ஆனால், பகுத்தறிவுக்காக பிரசாரம் செய்த இயக்கங்களே இன்றைக்கு விநாயகரைத் தூக்கிப்பிடிப்பதென்பதுதான் வருத்தமாக இருக்கிறது. ஆக, மதவாதத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் பிழையான ஆயுதத்தையே கையில் எடுக்கிறார்கள் என்பதே எங்கள் வாதம்.

Also Read: பிரஷாந்த் பூஷண் வழக்கு: `அட்டர்னி ஜெனரல் கோரிக்கை!’ - தண்டனை முடிவை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்

விநாயகர் என்பவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாதாபியிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்டவர், கற்பனைக் கதையாக புனையப்பட்ட கடவுள் என்றெல்லாம் பெரியாரும் அறிஞர் அண்ணாவும் பேசிய மேடையிலேயே நின்றுகொண்டு, `என் பொண்ணு கேட்டதால், விநாயகர் படம் எடுத்தேன்; பதிவிட்டேன்' என்றெல்லாம் இன்றைக்கு நீங்கள் சொல்லிக்கொண்டிருந்தால், அதற்கு அர்த்தம் என்ன? உங்கள் மகளுக்குத் தனிப்பட்ட வழிபாட்டு முறை இருக்கட்டும்... அது பிரச்னையில்லை. ஆனால், `ஆண்டாண்டுகாலமாக நீங்கள் பேசிக்கொண்டிருந்த பகுத்தறிவுக்கு இது உகந்ததா..?’ என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்’’ என்கிறார் தெளிவாக.

இந்த விவகாரத்தில் எதிர்த்தரப்பினர் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் கேட்டு, தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசியபோது, ``பேரறிஞர் அண்ணா சொன்னதுபோல், `ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்ற பாணியில்-பாரம்பர்யத்தில்தான் இப்போதுவரை திராவிட இயக்கமான தி.மு.க செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், `தி.மு.க., இந்துத்துவாவை நோக்கிப் பயணிக்கிறது...’ அப்படி இப்படியென்று சிலர்தான் பொய்ச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

உதயநிதி - மு.க.ஸ்டாலின்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சகோதரர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் விநாயகர் படத்தைப் பதிவிட்டது உண்மைதான். ஏன் அந்தப் படத்தைப் பதிவிட்டேன் என்பது குறித்தும் அவரே தெளிவாக விளக்கமும் கொடுத்துவிட்டார். இது யதார்த்தமாக நடந்த ஒரு விஷயம். இப்படியிருக்கும்போது, பலரும் பலவிதமாகக் கற்பனை செய்துகொண்டு எழுப்பும் கேள்விகளுக்கெல்லாம் என்னால் பதில் கூற முடியாது. ஏனெனில், `தன் பிள்ளை ஆசைப்பட்டதற்காகத்தான் இந்தப் படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தேன்' என்று உதயநிதியே தெளிவாகச் சொல்லிவிட்டார். அப்படியிருந்தும்கூட வேண்டுமென்றே இந்த விவகாரத்தை தோண்டியெடுத்து பெரிதுபடுத்த சிலர் நினைக்கிறார்களென்றால், உண்மையிலேயே அவர்கள்தான் இதைவைத்து அரசியல் செய்கிறார்கள்’’ என்றார் தடாலடியாக.



source https://www.vikatan.com/news/politics/story-about-controversy-on-udhayanidhis-ganesha-picture-on-twitter

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக