அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு, லஞ்ச ஒழிப்பு துறையில் நேரில் ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியிருந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையை காரணம் காட்டி, விலக்கு கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறார்.
Also Read: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக வேண்டும்! - லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்
திமுக ஆட்சிக்கு வந்தத பிறகு, கடந்த ஆட்சியில் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கே.சி.வீரமணி என்று தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் மீது, லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. தற்போது, வேலுமணி தொடர்புடைவர்களின் இல்லங்களிலும் சோதனை தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில், கடந்த ஜூலை 21 -ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அவரின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் சம்பந்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில், கணக்கில் வராத ரூ. 25 லட்சம் பணம், ஆவணங்களை கைப்பறியதாக தெரிவித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, 30 ஆம் தேதியான நேற்று, எம்.ஆர்.விஜயபாஸ்கரை நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியது. இதற்கிடையில், கரூர், 8 வது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு பதவிக்கு போட்டியிடும் தானேஷ் என்கிற முத்துக்குமாருக்கு கடந்த சில நாள்களாக வாக்கு சேகரித்து வருகிறார் எம்.ஆர் விஜயபாஸ்கர். இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜராவாரா என்று எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு கேட்டு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/mrvijayabaskar-asked-for-exemption-from-investigation-till-local-body-election-completes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக