Ad

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

நீலகிரி: 100 அடி‌ ஆழக் கிணறு... 3 மணி நேரப் போராட்டம்! - சடலமாக மீட்கப்பட்ட 3 உடல்கள்

`நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகிலுள்ள தேவாலா வடமூலா பகுதியில் ஒரு கிணற்றில் விழுந்து மூன்று பேர்‌ உயிருக்குப் போராடிவருகின்றனர். உடனடியாக மீட்க வாருங்கள்' என மீட்புப் படையினருக்கு நேற்று மாலை அவசர அழைப்பு வந்திருக்கிறது.

மீட்புப் பணி

குழுவினருடன் நிகழ்விடத்துக்கு விரைந்தவர்கள், கள நிலவரத்தை உணர்ந்து மீட்புப் பணியைத் தொடங்கினர். தொடர்ந்து மூன்று மணி நேரம் பதைபதைப்புடன்‌ நடைபெற்ற மீட்புப் போராட்டத்தில் கிணற்றிலிருந்து மூன்று பேரைச் சடலமாக மட்டுமே மீட்க முடிந்த சம்பவம், மீட்புக் குழுவினரையே நிலைகுலையச் செய்திருக்கிறது.

இந்தத் துயர‌‌ நிகழ்வு குறித்து நம்மிடம் பேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர்கள், ``சுமார் 100 அடி ஆழம்‌கொண்ட‌ திறந்தநிலைக் கிணறு அது. அதில் 30 அடிக்குத் தண்ணீர் இருந்தது. கயிறு மூலம்‌ உள்ளே இறங்கி நமது வீரர்கள் சுமார் மூன்று மணி நேரம் ‌போராடினார்கள்.

மீட்புப் பணி

சேற்றில் சிக்கிய மூன்று பேரையும் சடலமாகத்தான் மீட்க முடிந்தது. மூன்று பேர் உடல்களையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்திருக்கிறோம்" என்றனர்.

இது குறித்து காவல்துறையினர், ``தேவாலா, வடமூலை பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது 22 வயது மகள் சுகன்யா, பயன்பாடற்ற சுமார் 100 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்திருக்கிறார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அண்ணன் தமிழ் அழகனும், சித்தப்பா சத்தியசீலனும் கிணற்றுக்குள் குதித்து சுகன்யாவைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள். இதில் மூவரும் கிணற்றுக்குள் சிக்கிக்கொண்டனர்.

சுகன்யா, சத்தியசீலன், தமிழ் அழகன்

சுமார் மூன்று மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு இறந்த நிலையில் மூவரின் உடல்களும் மீட்கப்பட்டன. உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. சுகன்யாவின் பெற்றோர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம’’ என்றனர்.



source https://www.vikatan.com/news/general-news/three-youngsters-found-dead-in-open-well-near-gudalur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக